பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகரின் மகன் சொகுசு கப்பலில் போதை பார்ட்டி நடத்தியதால் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மும்பையிலிருந்து கோவாவிற்கு ஆடம்பர சொகுசு கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பலில் போதை பார்ட்டி நடத்த இருப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வாங்கடே தலைமையில் அதிகாரிகள் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் சாதாரண பயணிகள் போல் டிக்கெட் எடுத்து பயணம் செய்துள்ளனர்.
மும்பையிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே கப்பலில் பார்ட்டி தொடங்கியது. இதில் நடிகர்கள், நடிகர்களின் மகன்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். பார்ட்டியில் அனைவரும் கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்தி உள்ளார்கள். இதனையடுத்து அங்கு இருந்த அதிகாரிகள் அதிரடியாக ரெய்டு நடத்தி போதை பார்ட்டியில் போதை பொருள் பயன்படுத்தியவர்கள், போதை பொருள் வாங்கித் தருவீர்கள் என மொத்தம் பத்து பேரை கைது செய்தனர்.
இந்த பார்ட்டியில் இரண்டு பெண்கள் உட்பட 8 பேரை பிடித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்டவர்களில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஒருவர் என தெரிய வந்துள்ளது. மேலும், இந்த போதை பார்ட்டியில் பங்கேற்ற ஒவ்வொருவரிடமும் ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இது குறித்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் ஆர்யான் கானிடம் விசாரித்தபோது பார்ட்டியில் பங்கேற்க தான் பணம் எதுவும் கொடுக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார்.
இது தொடர்பாக விசாரிக்க சொகுசு கப்பல் உரிமையாளர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பிறகு பார்ட்டி நடந்த கப்பல் மும்பைக்கு மீண்டும் திருப்பிக் கொண்டு வரப்பட்டது. பிடிபட்ட அனைவரையும் மும்பைக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று கப்பல்களில் பார்ட்டிகளை நடத்துபவர் மற்றவர்களை கப்பலில் பயணம் செய்யக்கூடாது என்பதால் அதிக அளவில் டிக்கெட்டுகளை விற்கிறார்கள் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அது மட்டுமில்லாமல் கடந்த வாரம் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், கோவா போலீசாரும் இணைந்து கோவாவில் நடிகர் அர்ஜூன் ராம்பால் காதலி கேப்ரில்லாவின் சகோதரர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கும் இந்த கப்பலில் நடந்த பார்டிக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.