‘ஜீன்ஸ்’ படத்தில் முதலில் அஜித் தான் நடிக்க இருந்தது என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இயக்குனர் ஷங்கர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். தமிழ் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் படம் தான் ‘கேம் சேஞ்சர்’. இந்தப் படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்திருக்கிறார். ராம்சரணுடன் இணைந்து கியாரா அதவானி, எஸ் .ஜே .சூர்யா, சமுத்திரக்கனி, சுனில், அஞ்சலி, உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கேம் சேஞ்சர் படத்தின் கதையை கொஞ்சம் டெவலப் செய்து ஷங்கர் இப்படத்தை இயக்கியிருக்கிறாராம். மேலும், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்தின் வேலைகள் பட்ஜெட்டில் 2021 ஆம் ஆண்டு தொடங்கியது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக உருவான இப்படம் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு உலக அளவில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஷங்கர் பேட்டி:
இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் கேம் சேஞ்சர் படம் உருவான விதம் குறித்து இயக்குனர் ஷங்கர் பேசி இருக்கிறார். அப்போது, கேம் சேஞ்சர் திட்டமிடாத திரைப்படம். கொரோனா காலத்தில் இந்தியன் 2, இந்தியன் 3 போன்ற படங்கள் எனது கையில் இருந்தன. மேலும், சு. வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ நாவலின் 3 பகுதி திரைகதையை எழுதி வைத்திருந்தேன். அதோடு சயின்ஸ் ஃபிக்சன், ஸ்பை த்ரில்லர் என அடுத்தடுத்த கதைகள் எனக்குள் இருந்தன.
கேம் சேஞ்சர் குறித்து:
ஆனால், அவை எதையும் அப்போது என்னால் பண்ண முடியாத சூழல் இருந்தது. அன்று நிறைய தயாரிப்பாளர்கள் என்னிடம் படம் பண்ணலாம் என்று கேட்டபோது என்னிடம் கதை இல்லை. அப்போதுதான் கொரோனா காலத்தில் இயக்குனர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன ஒரு கதை எனக்குப் பிடித்திருந்தது. அப்படிதான் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் பயணம் ஆரம்பித்தது என்று இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார்.
அஜித் குறித்து :
மேலும், இந்த பேட்டியில் ‘ஜீன்ஸ்’ படத்தில் அஜித் நடிப்பதாக இருந்ததாக கூறப்படுகிறதே? அந்த விஷயம் உண்மைதானா என்று இயக்குனர் ஷங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, நிறைய செய்திகள் வருகிறது. அதில் சில செய்திகள்தான் உண்மை. சில செய்திகள் பொய். அப்படிப் பார்க்கும்போது ‘ஜீன்ஸ்’ படத்தில் என்னுடைய முதல் தேர்வு பிரசாந்த் தான் என்று ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்தது ஜீன்ஸ் படம்.
ஜீன்ஸ் படம் :
இந்த படத்தை அசோக் அமிர்தராஜ் தயாரித்தார். இந்த படத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய், சுந்தரம் ராஜு, லக்ஷ்மி, நாசர், ராதிகா சரத்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தின் பாடல்களும் கதையம்சமும் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பின்னர் 45 நாட்கள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் உட்பட உலகமெங்கும் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.