மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு விருது கிடைத்திருக்கும் செய்தி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கேப்டன் விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டிப்போட்டு இருந்தது. கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்களும்,ரசிகர்கள், பொது மக்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். விஜயகாந்தின் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அதன் பின் விஜயகாந்தினுடைய பணியை பாராட்டி, ‘பத்மபூஷன்’ விருது சில மாதங்களுக்கு முன்பே இந்திய அரசு அறிவித்து இருந்தது. பின் அவரின் மறைவுக்குப் பிறகு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி மர்முவிடம் அந்த விருதை பெற்றுக் கொண்டார். இதற்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தேமுதிக தொண்டர்களும் பலருமே வாழ்த்தி சந்தோஷப்பட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
விஜயகாந்த் குறித்த தகவல்:
மேலும், விஜயகாந்த் அவர்கள் நடிப்பையும் தாண்டி பெரிய ஹீரோ என்ற தலைக்கனம் இல்லாதவர். அனைவருடன் சேர்ந்து பழகி உண்ணும் குணம் கொண்டவர். பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கு உதவி செய்திருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு ஆரம்பத்தில் உதவி இருந்தது விஜயகாந்த் தான். இப்படி இருக்கும் நிலையில், அவர் மறைந்து சில மாதங்கள் ஆன பிறகும் அவரை குறித்த செய்திகள் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சிறப்பு விருது:
தற்போது மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு தென் இந்திய திரையுலகின் சார்பில் சிறப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளார்கள். அதாவது தென்னிந்திய திரைத்துறையினருக்கு பெருமை சேர்க்கும் வகையில் SIIMA விருதுகள் வழங்கும் விழா ஆண்டு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் சினிமாவில் உள்ள அனைத்து பிரிவினர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் விருது வழங்கியுள்ளார்கள்.
SIIMA விருதுகள் :
இந்த வருடம் இந்த விருது வழங்கும் விழா துபாயில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், தமிழ்த் திரைப்படங்களில் தனித்துவமான கதாபாத்திரங்கள் மட்டுமின்றி, அரசியல் மற்றும் மகத்தான பல தொண்டுகள் செய்த கேப்டன் விஜயகாந்தின் நினைவினை கௌரவிக்கும் வகையில் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை நடிகர்கள் அர்ஜுன், விக்ரம், எஸ்.ஜே சூர்யா, சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், யோகி பாபு மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோர் இணைந்து வழங்கி மரியாதை செய்தார்கள்.
பிரேமலதா பெற்றுக்கொண்டார்:
அந்த விருதினை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பெற்றுக் கொண்டார். மேலும், இந்த விருது வழங்கும் விழாவில் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த வில்லன், சிறந்த காமெடியன், சிறந்த பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், பாடகி என பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ படம் ஐந்து விருதுகளை தட்டி தூக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.