சிவகார்திகேயனின் ‘மதராஸி’ டைட்டில் குறித்த சர்ச்சை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடுமையான உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது.
அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு சிவா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் அமரன். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. இதை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
சிவகார்த்திகேயன் பிறந்தநாள்:
இது ஒரு பக்கம் இருக்க, இன்று சிவகார்த்திகேயனுடைய 40வது பிறந்தநாள். ரசிகர்கள், பிரபலங்கள் என பலருமே அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார்கள். இந்த நிலையில் சிவகார்த்திகேயன்- ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்.கே 23 படத்தின் அப்டேட் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. சிவகார்த்திகேயனின் 23வது படத்தினுடைய டைட்டில் டீசர் வெளியாகி இருக்கிறது.
அந்த படத்திற்கு ‘மதராஸி’ என்று தலைப்பு வைத்திருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மணி வசந்த், விக்ராந்த், வித்யா உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆக்சன் கலந்த பாணியில் இந்த படம் உருவாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய டைட்டில் குறித்த சர்ச்சை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதராஸி டைட்டில் சர்ச்சை:
அதாவது மதராஸி என்பது கெட்ட வார்த்தையை குறிக்கும் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். மதராசி என்ற வார்த்தை உண்மையில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை தான் குறிக்கிறது. சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பிறந்தவர்களை தான் குறிக்கும். இந்த மதராசி என்ற வார்த்தையை வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கிண்டலாகவும் கேலியாகவும் பயன்படுத்தினார்கள். தென்னிந்தியாவிலிருந்து வட மாநிலத்திற்கு செல்லும் நபர்களை தான் இது போன்று பேசுகிறார்கள்.
மதராஸி அர்த்தம்:
சில இடங்களில் நகைச்சுவைக்காக மதராசி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது. சமூகத்தின் ஒரு இடத்தின் உடைய பெயர் தான் மதராசி. அந்த சமூகத்தின் பண்புகளையும் கலாச்சாரத்தையும் எடுத்துக்காட்டுகிறது. ஆனால், அந்த வார்த்தையை அவமானமாக நினைப்பது தவறானது. சமூகத்திற்கு எதிரான உணர்வுகளை ஏற்படுத்துவது முறையானது கிடையாது. அனைவரும் ஒன்றிணைந்து மரியாதையாக வாழ வேண்டும்.