தி.மு.க பொதுக்குழு கூட்டத்துக்காக ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகையை திரும்பப் பெற கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக, அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நடத்தப்படும். கூட்டத்தில் அசைவ, சைவ விருந்தளிக்கப்படும். முதல்முறையாக ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த கட்சித் தலைமை முடிவுசெய்தது.

Advertisement

இதற்கான ஏற்பாடுகளை சென்னையில் உள்ள மாவட்டச் செயலாளரும் எம்.எல்ஏ-வுமான ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரின் மேற்பார்வையில், பகுதிச் செயலாளர் ஒருவர் ஏற்பாடுகளைச் செய்தார். இந்தச் சமயத்தில், தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலக்குறைவு காரணமாக பொதுக்குழு தேதி தள்ளிவைக்கப்பட்டது. கடந்த 7-ம் தேதி கருணாநிதி மரணமடைந்தார். இதனால், பொதுக்குழுவைத் தள்ளிவைக்க கட்சித் தலைமை முடிவுசெய்தது. சமீபத்தில், அவசர செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

இதையடுத்து, சில நாள்களுக்கு முன் பொதுக்குழுவை நடத்துவதுகுறித்து கட்சித் தலைமை ஆலோசித்துள்ளது. மீண்டும் பொதுக் குழுவுக்கான ஏற்பாடுகளை எம்.எல்.ஏ-வும், மாவட்டச் செயலாளருமான ஒருவர் கவனித்தார். இதற்கு, மண்டபம் அமைந்துள்ள பகுதியில் உள்ள மாவட்டச் செயலாளர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மூத்த அமைச்சர் ஒருவர்மூலம் இந்தத் தகவல், செயல் தலைவர் ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இதனால் பொதுக்குழு ஏற்பாடுகளை மூத்த அமைச்சரின் ஆதரவுடன் மாவட்டச் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் பொதுக்குழுவை சிறப்பாகச் செய்ய அசைவ, சைவ விருந்துக்கு ஏற்பாடுசெய்துள்ளார்.

Advertisement

 

Advertisement

ஆனால், முதலில் பொறுப்புகளை ஒப்படைத்த எம்.எல்.ஏ-வும் மாவட்டச் செயலாளருமானவர், கட்சித் தலைமையிடம் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மு.க.ஸ்டாலின், மண்டபத்துக்குக் கொடுத்த அட்வான்ஸ் தொகையைத் திரும்பப் பெறுங்கள் என்று கோபத்துடன் கூறியுள்ளார். அதன்படி அசைவ, சைவ விருந்துக்கு ஏற்பாடுசெய்த மாவட்டச் செயலாளர், அட்வான்ஸ் தொகையை மண்டபத்திலிருந்து வாங்கிச்சென்றுவிட்டார். இதனால் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா மண்டபத்தில் தி.மு.க பொதுக்குழு நடத்தப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement