‘தங்கலான்’ பட ப்ரோமோஷனுக்காக மதுரை கல்லூரியில் நடிகர் விக்ரம் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி இருக்கிறது. சமீபகாலமாக ‘தங்கலான்’ படம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரபல நடிகர் விக்ரம் நடித்திருக்கும் படம் தான் ‘தங்கலான்’. கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது.
இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் உடன் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
தங்கலான் படம்:
இந்த விழாவில் நடிகர்கள் தங்களின் படம் அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தார்கள். தற்போது இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் இந்த படத்தின் புரமோஷன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்தது. இதில் நாயகன் விக்ரம், டேனியல், நடிகை மாளவிகா மோகனன், பார்வதி உட்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், தங்கலான் படக்குழுவினரை கல்லூரி மாணவர்கள் ஆட்டம், பாட்டம் என்ற உற்சாகத்துடன் வரவேற்று இருந்தார்கள்.
மதுரையில் ப்ரோமோஷன்:
பின் விழாவில் நடிகர் விக்ரம், என்னுடைய அப்பா பரமக்குடியில் இருந்து கஷ்டப்பட்டு மதுரைக்கு வந்து இந்த அமெரிக்கன் கல்லூரியில் தான் படித்தார். சம்மர் வெக்கேஷன் வந்தால் என் தொல்லை தாங்காமல் என்னை இங்குள்ள அத்தை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று மதுரையில் தன்னுடைய அனுபவத்தை குறித்து விக்ரம் பகிர்ந்து இருந்தார். அதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த விக்ரம், மதுரை என்றாலே விடுமுறை, மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோயில் பாட்டு, கொண்டாட்டம் என்ற அனைத்துமே நினைவுக்கு வரும். மதுரை சாப்பாட்டை நான் ரொம்ப என்ஜாய் பண்ணி சாப்பிடுவேன்.
விக்ரம் பேட்டி :
மேலும், ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் இறங்கி வேலை செய்ய வேண்டும். இந்த படத்தில் டேனியலுக்கு அதிக அளவு காயம் ஏற்பட்டது. அதோடு அவருக்கு ஆப்ரேஷன் செய்து மூன்று மாதம் கூட ரெஸ்ட் எடுத்து சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். இந்த படத்துக்காக டேனியல் உயிரை கொடுத்து நடித்தார் என்று தான் சொல்லணும். மாளவிகா யார் என்பது இந்த படத்தின் மூலம் அனைவருக்கும் தெரியவரும். ஆக்சன் சீன் முழுவதும் மாளவிகா சிறப்பாக நடித்திருந்தார். அதேபோல் பார்வதியும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
படம் குறித்து சொன்னது :
இந்த படம் வாழ்க்கையை பார்த்தது போல அனைவருக்குமே இருக்கும். மக்களுக்கும் புரியும் வகையில் புதிய சப்தங்களையும், புதிய கருவிகளையும் ஜிவி பிரகாஷ் இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கிறார். இந்த படத்தில் உலக சினிமா தரமும், நம்முடைய மண்வாசனையும் இருக்கிறது. அதேபோல இந்த படம் தேசிய அளவிலான படமாக மாறும். நம்ம வரலாறு பேசும் படம் என்று நீங்கள் எல்லோரும் பெருமைப்படுவீர்கள். எந்த படத்தில் நடித்தாலும் அதற்கேற்ப மனரீதியாக என்னை தயார்படுத்தி அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி விடுவேன். டப்பிங் இல்லாமல் ஒரிஜினல் குரலில் ஸ்பாட்டில் பேசுவது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் வித்தியாசமாக இருந்தது என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.