ஆல்பம் வெளியீட்டு விழாவில் தெருக்குரல் அறிவு பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணணின் மகளும் பிரபல பாடகியுமான தீ பாடிய பாடல்களில் ஒன்று ‘என்ஜாய் எஞ்சாமி’. இவருடன் இந்த பாடலை ராப் பாடகர் அறிவு என்பவரும் இணைந்து பாடி இருந்தார். இந்த பாடல் 2021 ஆம் ஆண்டு யூடியூபில் வெளியாகி இருந்தது.
இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பல பிரபலங்கள் இந்தப் பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்கள். அதிலும் குழந்தைகளை இந்த பாடல் மிகவும் கவர்ந்தது . நிலத்தை இழந்த பூர்வக்குடிகளை மையப்படுத்தியதாக இந்த என்ஜாய் எஞ்சாமி பாடல் உருவாக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த பாட்டிற்கு பின் சந்தோஷ் நாராயணன்-அறிவு இடையே ப்ரச்சனை ஏற்பட்டு சர்ச்சையாகி இருந்தது. அதற்கு பின் இவர்கள் இருவரின் கூட்டணியில் பாடல் வெளியாகவில்லை. மேலும், அறிவு அவர்கள் படங்களில் பின்னணி பாடகராக பணியாற்றி வருகிறார்.
தெருக்குரல் அறிவு ஆல்பம்:
இந்த நிலையில் தற்போது தெருக்குரல் அறிவு எழுதி இசையமைத்து ‘வள்ளியம்மா பேராண்டி’ என்ற புதிய ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த ஆல்பத்தை சோனி மியூசிக் நிறுவனம் தான் வெளியிடுகிறது. இந்நிலையில் இந்த ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்று இருக்கிறது. இதில் பிரபலங்கள் உடன் ஆல்பம் குழுவினரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது அந்த விழாவில் அறிவு, நான் பள்ளி படிக்கும் காலத்தில் ஆண்டனி தாசன் அண்ணனுடைய குரல் தான் அதிகம் நான் கேட்ட குரல். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்தது ரொம்ப சந்தோஷம்.
தெருக்குரல் அறிவு சொன்னது:
இந்த மாதிரி இண்டிபெண்டன்ட் மியூசிக் உள்ள நான் வர காரணமே காஸ்ட்லி கலெக்டிவ் மூவ்மெண்ட் தான். அது எனக்கு மட்டுமல்ல பல கலைஞர்களுக்கு அடையாளம் தந்தது. அதை உருவாக்கித் தந்த அண்ணன் பா ரஞ்சித்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வள்ளியம்மா பேராண்டி என்பதில் வள்ளியம்மா வரலாறு ரொம்ப முக்கியம். பிரிட்டிஷ் காலத்தில் இங்கிருந்து இலங்கைக்கு அழைத்துச் சென்று தேயிலைத் தோட்ட வேலைகளை செய்து பல கஷ்டங்களை தாண்டி இந்தியா மீண்டு வந்து வாழ்க்கையை போராடியவர் வள்ளியம்மா.
வள்ளியம்மா வரலாறு:
அவருடைய வாழ்க்கை வரலாற்றை சொல்லும் ஒரு அடையாளம் தான் இந்த பாடல். அதே போல் எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எல்லாம் பெரிய நம்பிக்கை இல்லை. இங்கே என் போல வாழ்பவர்கள் எப்போது கொல்லப்படுவார்கள் என்று தெரியாத நிலைதான் நிலவிக் கொண்டிருக்கிறது. இந்த உலகில் என்னை அடையாளப்படுத்தும் முயற்சிக்காக தான் வள்ளியம்மா பேரண்டி ஆல்பத்தை உருவாக்கினோம். இந்த குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றிகள்.
ஆல்பம் குறித்து சொன்னது:
பல பாடல்கள் நம் முன்னோர்களிடமிருந்து தான் வந்தது. ஆனால், அந்த அடையாளத்தை எல்லாம் நாம் மறந்து விட்டோம். அடையாளத்தை தொலைத்து விட்டால் நாம் வேரற்ற மரமாக வெட்டி வீழ்த்த படுவோம். என்ஜாய் என் சாமி பாடலின் போது நான் பேசியிருந்தது மிகப்பெரிய அளவில் பிரச்சனையாக இருந்தது. இதனால் நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். உன் ஆயா பற்றி பாட வந்தாயா என்றெல்லாம் கேட்டார்கள். ஆமாம், நான் என்னுடைய ஆயாவை பற்றி தான் பாட வந்தேன். என் மீது எழுந்த கேள்விகளுக்கு இந்த ஆல்பம் தான் பதில் என்று கூறி இருக்கிறார்.