‘விடுதலை 2’ படம் பார்த்துவிட்டு, தொல். திருமாவளவன் படக் குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டி பேசி இருக்கும் செய்தி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் ‘விடுதலை’. விடுதலை படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்த நிலையில் சமீபத்தில் இதன் இரண்டாம் பாகமும் வெளியானது.
மேலும், இப்படத்தில் மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், சேத்தன், கௌதம் மேனன், கென் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். முதல் பாகத்தில் அதிகார வர்க்கத்திற்கும், மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து எடுத்த வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தில் முழுக்க முழுக்க பெருமாள் வாத்தியாராக வரும் விஜய் சேதுபதியின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்கியிருக்கிறார். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விடுதலை 2 படம்:
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ‘விடுதலை 2’ படத்தைப் பார்த்தபின், இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோரை நேரில் சந்தித்துப் பாராட்டி இருக்கிறார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், ‘ வெற்றிமாறனின் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘விடுதலை 2’ படத்தைப் பார்த்தோம். அந்த படம் தமிழ் திரையுலகில் ஒரு முக்கியமான படைப்பாக வந்திருக்கிறது. தேவையான சூழ்நிலையில் இந்தப் படம் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது.
திருமாவளவன் பாராட்டு:
மேலும், இந்திய அரசியலில் வலதுசாரி ஆதிக்கம் மேலோங்கி இருக்கும் காலகட்டம் இது. இந்த வலதுசாரி அரசியல் வளர்ந்து வரும் நிலையில், இடதுசாரி அரசியலின் தேவையை இளைஞர்களுக்கு வலியுறுத்தக்கூடிய ஒரு நல்ல படமாக ‘விடுதலை 2’ இருக்கிறது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய எல்லா படங்களுமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இதுவும் ஒரு வெற்றிகரமான படம். இந்த படத்தில் கூறி இருக்கும் அரசியல் மிகவும் முக்கியமானது.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் வகைகள் :
தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்டு தேர்தல் களத்தில் பங்கேற்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பேசுகிற அரசியல், நாடாளுமன்ற ஜனநாயகத்தை மறுத்து மக்களை அரசியல் படுத்தி, புரட்சிகர ஜனநாயகத்தை வென்றெடுக்க வேண்டும் எனப் பேசுகிற கம்யூனிஸ்ட் அரசியல் மற்றொன்று. அதாவது கம்யூனிஸ்ட் கட்சிகள் மொத்தம் இரண்டு வகைப்படும். மக்களை அரசியல் படுத்தி, அமைதியாக்கி போர்குணம் மிக்கவர்களாக வளர்த்தெடுக்கக்கூடிய அரசியல் இன்றைக்கு இந்தியாவில் மாவோயிட் அரசியல் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டாவது வகை அரசியலை தெளிவாக பேசுகிற ஒரு படம்தான் ‘விடுதலை 2’ என்று கூறியுள்ளார்.
தத்துவம் இல்லாத தலைவர் சர்ச்சை குறித்து :
அதேபோல் தமிழ் சூழலுக்கு ஏற்ப தமிழ்த் தேசிய இன விடுதலைக்கான அரசியலை முன்னெடுத்த போராளிகளைக் கருப்பொருளாகக் கொண்டு இந்த திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. வசனங்களை மிகச் சிறப்பாக அமைத்திருக்கிறார். இடதுசாரி அரசியல் என்பது கம்யூனிஸ்ட் கட்சிகளையும் தாண்டி அம்பேத்கர் மற்றும் பெரியாரின் அரசியலாக இருக்க வேண்டும். ‘தத்துவம் இல்லா தலைவர்கள் ரசிகர்களை தான் உருவாக்க முடியும். போராளிகளை உருவாக்க முடியாது’ என படத்தில் ஒரு வசனம் வருகிறது. வெற்றிமாறன் இந்த வசனத்தை யாரையும் மனதில் வைத்து சொல்லவில்லை. இது வெறும் பொழுதுபோக்குத் திரைப்படம் இல்லை. இளம் தலைமுறையினரை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என்கிற வேட்கையோடு வெற்றிமாறன் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் என்று திருமாவளவன் கூறியிருக்கிறார்.