விநாயகர் சிலை புகைப்படத்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டது ஏன் என்று நடிகரும் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். கடவுள் மறுப்பு கொள்கை என்று திமுக பேசிக்கொண்டாலும், இந்துக்களின் பண்டிகைகள், பழக்க வழக்கங்களை மட்டும் கிண்டல் செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகளுக்கு திமுக வாழ்த்து கூட கூறுவதில்லை என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது மாற்று கட்சியினரால் சமூக வலைதளங்களில் விமர்சனமாக வைக்கப்படும்.
இப்படி ஒரு நிலையில் உதயநிதி ஸ்டாலின் விநாயகர் சிலை புகைப்படத்தை பகிர்ந்திருந்தது பெரும் பேசும் பொருளானது. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், ‘மத்திய பாசிச பா.ஜ.க மற்றும் மாநில அடிமை எடுபிடி அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள், ஊழல்கள் குறித்து நான் பகிரும்போது அவற்றை எடுத்து விவாதித்து பேசுபொருளாக்காதவர்கள் தற்போது பிள்ளையார் சிலையில் புகைப்படத்தைப் பகிர்ந்ததைப் பரபரப்பாக விவாதிக்கிறார்கள்.
நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கும்போஉத அதையெல்லாம் விட்டுவிட்டு இதைப்பிடித்துக்கொண்டு வெவ்வேறு விதமாகக் கயிறு திரிப்பதைப் பார்க்கையில் இங்கு எது நடந்தாலும் அதைக் கழகத்துக்கு எதிரானதாகத் திசை திருப்பும் சந்தர்ப்பவாதிகளின் சதி வேலைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது.ஒரு விஷயத்தை இங்கே நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கோ, என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், என் தாயாருக்கு அந்த நம்பிக்கை உண்டு என்பதை அனைவரும் அறிவர்.
எங்கள் வீட்டில் ஒரு பூஜை அறையும் உண்டு. அதில், எங்கள் மூதாதையர்களின் உருவப் படங்கள் உள்ளன. மேலும், என் தாயார் நம்பும் சில கடவுள் படங்களும் உண்டு. முக்கியமான முடிவெடுக்கும்போது அங்குள்ள மூதாதையர்களின் படங்கள் முன் நின்று அவர்களை மனதில் நினைத்துவிட்டுச் செய்வது எங்கள் வழக்கம். இந்நிலையில் பிள்ளையார் சதுர்த்திக்காக அம்மா ஒரு பிள்ளையார் சிலையை வாங்கியிருந்தார்.
அந்த சிலையை நேற்றிரவு பார்த்த என் மகள், இந்த சிலையை எப்படி செய்வார்கள் என்று கேட்டார்.கரைப்பதற்கு முன் இந்த சிலையுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொடுங்கள் என்று கேட்டார். அவரின் விருப்பத்தின் பேரில் நான்தான் அந்த புகைப்படத்தை எடுத்தேன். மகள் ரசித்த அந்த சிலையை அவரின் விருப்பத்துக்காக என் ட்விட்டர் பக்கத்தின் பகிரந்தேன். அவ்வளவே’ என்று குறிப்பிட்டுள்ளார்.