ஒரு காலத்தில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு காலாக இருந்தவர் உதயநிதி ஸ்டாலின். இவர் ‘குருவி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனார். பின் ‘ஆதவன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நான்கு படங்களை தயாரித்த பின் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கிய உதயநிதி ஸ்டாலின், தனது முதல் படத்திலேயே அமோக வெற்றியை பெற்றார். அதனைத் தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடிக்க தொடங்கினார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் கடந்த 2002 ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கிருத்திகா மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு இன்பநதி என்ற மகனும், தமன்யா என்ற மகளும் உள்ளனர். இறுதியாக நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று தற்போது அந்த தொகுதியில் எண்ணற்ற நலத்திட்டங்களை செய்து அசைத்து வருகிறார் உதயநிதி. அதேபோல் உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டது. தற்போது இவர் முழு நேர அரசியலில் ஈடுபட தொடங்கிவிட்டார்.
முழு நேர அரசியல்:
அதனால் சினிமாவில் நடிப்பதை நிறுத்து போவதாக இவர் அறிவித்திருந்தார். அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த படம் ‘மாமன்னன்’. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது உதயநிதி அமைச்சராக பதவி ஏற்பதற்கு பின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் தான் படித்த லயோலா கல்லூரியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து மேடையில் பேசிய உதயநிதி, லயோலா கல்லூரியில் படிக்கும் போது நடந்த இனிமையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு:
அதில், இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வருடங்களாகவே நான் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள். ஆனால், இந்த வருடம் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சமீபத்தில் தான் லயோலா கல்லூரி தனது நூறாவது வருட விழாவை கொண்டாடியது. அதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இங்கு அமைச்சராகவோ சட்டமன்ற உறுப்பினராகவும் வரவில்லை. நான் முன்னாள் மாணவன் என்கிற உரிமையோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன் என்றார்.
உதயநிதி ஸ்டாலின் பேச்சு:
மேலும், நான் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, லயோலா கல்லூரியில் பி.காம் படிப்பதற்காக விண்ணப்பம் போட்டிருந்தேன். கண்டிப்பாக கல்லூரியில் சீட்டு கிடைத்துவிடும் என்று வீட்டில் சந்தோஷமாக இருந்தேன். அப்போது கல்லூரியில் இருந்து அழைத்து உனக்கு சீட்டு கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். அப்போது எங்க தாத்தா முதலமைச்சர் கிடையாது. என்னுடைய அப்பா மினிஸ்டரும் கிடையாது. அப்போ என்னை கல்லூரிக்கு இன்டர்வியூக்கு வர சொன்னாங்க.
லெட்டர் எழுதி கொடுத்தேன்:
நான் கல்லூரி நிர்வாகத்திடம் ஏன் சீட்டு கொடுக்கவில்லை என்று கேட்டதற்கு. உங்க பேரன்ட்ஸை கூட்டிட்டு வாங்க என்று சொன்னார்கள். அப்போ எங்க அம்மாவை கூட்டிட்டு போனேன். அப்புறம் அவங்க, ஒரு லெட்டர்ல காலேஜ்ல நடக்கிற எந்த ஒரு தேர்தலிலும் நீங்க தொடர்பு வச்சுக்க கூடாது என்று எழுதி தர சொல்லி சத்தியம் வாங்கிக் கொண்டுதான் சீட்டை கொடுத்தாங்க. ஆனா, இன்னைக்கு அதே காலேஜில் மினிஸ்டரா வந்து இருக்கேன்.அது இந்த லயோலா கல்லூரியின் வளர்ப்புதான் என்று பூரிப்போடு பேசி இருந்தார் உதயநிதி.