இயக்குனர் கே.பாலச்சந்தர் சில காரணங்களால் தனது படத்தின் படப்பிடிப்பிலிருந்து பாதியில் வெளியேறிய செய்திதான் தற்போது மீண்டும் வைரலாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் மிக பிரபலமான இயக்குனராக இருந்தவர் கே.பாலச்சந்தர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல் நாடக ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், என பன்முகம் கொண்டவர். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட இவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக நூறு படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, போன்ற பிறமொழி படங்களிலும் பணியாற்று இருக்கிறார்.
அதோடு இவர் தமிழ் சினிமாவில் நுழைந்த ஆரம்ப கட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி வைத்து பெரிதாக படம் கொடுக்கவில்லை. சிவாஜியை வைத்து ஒரே ஒரு படத்தை மட்டும் தான் இயக்கியிருந்தார். சிவாஜி நடிப்பில் வெளியான ‘எதிரொலி’ படம் பெரிய அளவிற்கு வரவேற்பை பெறவில்லை, நெகட்டிவ் விமர்சனங்களை தான் பெற்று இருந்தது. அதற்குப் பிறகு இவர் பல நடிகர்களை தமிழ் சினிமாவிற்கு உருவாக்கி கொடுத்தார். குறிப்பாக ரஜினி, கமல் விவேக், நாகேஷ் போன்ற பல நடிகர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் படுத்தி வைத்தது கே.பாலச்சந்தர் தான்.
கே.பாலச்சந்தர் குறித்து:
ஆரம்ப காலகட்டத்தில் தனது படங்களுக்கு தன்னுடன் நாடகங்களில் பணியாற்றிய நெருங்கிய நண்பர் வி.குமார் என்பவரை தான் இசையமைப்பாளராக கே.பாலச்சந்தர் பயன்படுத்திக்கொண்டார். அடுத்து எம்.எஸ்.விஸ்வநாதன் உடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார். அதாவது 1970களில் இறுதியில் இளையராஜா தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகி வரவேற்பை பெற்று வந்த காலகட்டங்களிலும், பாலச்சந்தர் எம்.எஸ்.வியுடன் பணியாற்றி பல வெற்றிகளை குவித்து வந்தார். அதற்குப் பிறகு இளையராஜாவுடன் பாலச்சந்தர் இணைந்த முதல் படம் ‘சிந்து பைரவி’. அதற்குப் பிறகும் இளையராஜாவுடன் பல படங்களில் இணைந்த பாலச்சந்தர், சில காரணங்களால் அவரை விட்டுப் பிரிந்தார்.
டூயட் படம்:
அதனைத் தொடர்ந்து இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் பாலச்சந்தர் பணியாற்றிய முதல் படம் 1994 இல் வெளியான ‘டூயட்’ படம். இந்த படத்தில் பிரபு, ரமேஷ் அரவிந்த் இணைந்து நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். பொதுவாகவே தனது படங்களில் கதைக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் கே.பாலச்சந்தர், சண்டைக் காட்சிகள் மற்றும் கிண்டல் செய்வது போன்ற பாடல்களை இடம் பெற விரும்புவதில்லை.
படத்தில் இருந்து விலகிய காரணம்:
ஆனால் டூயட் படத்தின் ஷுட்டிங்கின் போது, அவரது உதவி இயக்குனர்கள் கே.பாலச்சந்தரிடம் பல ஆலோசனைகள் கூறியுள்ளனர். அதாவது, நீங்கள் அந்த காலத்தில் எடுத்தது போன்ற படங்களை இப்போது எடுக்க முடியாது. இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்றால், சண்டைக் காட்சிகள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் இதில் உடன்பாடு இல்லாததால், படத்தின் கதைக்கு தேவையாக இருக்கும் காட்சிகளை மட்டும் இயக்கிவிட்டு, படத்தில் இருந்து விலகி இருக்கிறார் கே.பாலச்சந்தர் .
படம் வெற்றி:
அதற்குப் பிறகுதான் அவரது உதவியாளராக இருந்த இயக்குனர் சரண், சண்டைக் காட்சிகள் மற்றும் ‘கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா’ என்ற கிண்டல் செய்யும் பாடல் காட்சிகளை இயக்கியுள்ளார். அதேபோல், தனது படத்தின் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கே.பாலச்சந்தர், ‘ தங்கமே தமிழுக்கில்லை கட்டுப்பாடு’ என்ற பாடலை வைரமுத்துவின் விருப்பத்திற்கு ஏற்ப எழுதுவதற்கு அனுமதி கொடுத்துள்ளார். அந்த வகையில் வைரமுத்து தனக்கு தோன்றிய வரிகளை அமைத்து எழுதிய பாடல் தான் அது. கடைசியில் இந்த படமும், படத்தின் பாடல்களும் பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.