தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் கிஷோரும் ஒருவர். ஆடுகளம், கபாலி போன்ற படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் கன்னடம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். நடிகர் கிஷோர் சினிமாவை தாண்டி விவசாயத்திலும் அதிக ஆர்வம் உடையவர். இவர் தன் மனைவி விஷாலுடன் இணைந்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தற்போது லாக்டோன் காரணமாக பிரபலங்கள் வீட்டில் இருப்பதால் நடிகர் கிஷோர் அவர்கள் தன்னுடைய விவசாயத்தை கவனித்து வருகிறார். நடிகர் கிஷோர் அவர்கள் டிவி கூட இல்லாமல் எந்த ஒரு ஆடம்பரம் இல்லாமல் மிக எளிமையாக இயற்கையோடு வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் விவசாயம் குறித்து அவர் கூறியது, எங்கள் வீட்டுக்கு தேவையான உணவை நாங்களே உற்பத்தி செய்து கொள்வோம். இந்த சமயத்தில் நான் என் குடும்பத்தோடும், விவசாயத்துடனும் செலவிட்டு கொண்டிருக்கிறேன். இது என் வாழ்க்கையில் பொற்காலம். நாங்கள் வசிக்கும் கிராமத்தில் வீடுகள் குறைவு. அதுவும் இடைவெளி விட்டு தான் இருக்கும். எனவே கரோனா பாதிப்பு வருவது கிடையாது. எங்கள் சுற்றுவட்டாரத்துல கோழி, சேவல்கள், மாடுகள் வளர்ப்பவர் அதிகம்.
அவை அனைத்தும் அதிகாலையிலேயே சத்தம்போடும். அந்த இயற்கையான அலாரச் சத்தத்தில் நான் விடியற்காலை 4 மணிக்கெல்லாம் எழுந்திடுவேன். உடனே நான் தோட்ட வேலைகளைக் கவனிக்க ஆரம்பிச்சுடுவோம். நாங்கள் தென்னை, கொய்யா, சப்போட்டா, மா, எலுமிச்சை, பப்பாளி உட்பட பல பழவகைகளையும், காய்கறிகளையும் வளர்க்கிறோம். நாங்கள் ஆறு நாட்டு மாடுகளை வளர்க்கிறோம். அதோட ரெண்டு சின்ன கறவை மாடுகளும் இருக்கிறது. அதில் ஒன்று ஜெயலலிதா அம்மா இறந்த தினத்தில் பிறந்தது. அதனால் நாங்கள் அந்த மாட்டிற்கு ஜெயலலிதா என்று பெயர் வைத்தோம்.
கபாலி பட ரிலீஸ் அன்றைக்குப் பிறந்த காளை மாட்டுக்கு கபாலி என்று பெயர் வைத்தோம். கபாலி ரொம்பவே குறும்பு செய்பவன். ஆனால், ஜெயலலிதா ரொம்ப சமத்தா இருப்பாங்க. நாட்டு மாடுகளை நாங்கள் விவசாயத் தேவைக்கு மட்டும் தான் பயன்படுத்துவோம். தற்போது நாங்கள் மாடுகளை பயன்படுத்தி செக்கு எண்ணெய் தயாரிப்பு பணிகளை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம். அதோடு இந்த சமயத்தில் கோழி மற்றும் வான்கோழி வளர்ப்பு வரை முறையை அதிகப்படுத்தலாம் என்று இருக்கிறோம்.
நாங்கள் பெங்களூரில் இயற்கை அங்காடி ஒன்றே நடத்துகிறோம். அந்த பணிகளையும் என் மனைவி தான் கவனித்துக் கொள்கிறார். அங்கே பேக்கரி ஒன்றையும் ஆரம்பித்துள்ளோம். எங்கள் விவசாயத்திற்கு எந்த ஒரு செயற்கை ரசாயன பொருட்களையும் பயன்படுத்துவது இல்லை என்று பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.