தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக விஜய் ஆண்டனி திகழ்ந்து வருகிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வருகிறார். இவர் தமிழ் சினிமா உலகில் இசை அமைப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் இவர் இசையில் வெளிவந்த முதல் படம் சுக்கிரன். இதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் இசையமைத்தார். மேலும், நான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக இவர் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்தனர்.
இந்த நிலையில் நகுலின் காதலில் விழுந்தேன் படத்தின் ஒரு பாடலை விஜய் ஆண்டனி காப்பியடித்து இசையமைத்துள்ளார் என்று சோசியல் மீடியாவில் எழுந்த குற்றச்சாட்டிற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். பிரசாத் இயக்கத்தில் நகுல் நடிப்பில் வெளிவந்த படம் காதலில் விழுந்தேன். இந்த படத்தில் விஜய் ஆண்டனி இசை அமைத்து இருந்தார். இவர் இசை அமைத்த தோழியா என் காதலியா, உனக்கென நான், நாக்குமுக்கா போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது.
இந்நிலையில் உனக்கென நான் என்ற பாடல் இசையமைப்பாளர் ரிஹானா அவர்களின் துரோகத்தை என்ற பாடலின் இசை என்றும் அதை அப்படியே உனக்கென நான் பாடலுக்கு காப்பி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டிற்கு விஜய் ஆண்டனி கூறியிருப்பது, இந்த படத்தில் நான் இசை அமைத்த எல்லா பாடல்களும் ஹிட். ஆனால், உனக்கென நான் என்ற பாடல் மட்டும் நான் இசை அமைக்கவில்லை. உண்மையிலேயே இந்த பாடலுக்காக 15 மியூசிக் போட்டுக் கொடுத்தேன்.
ஆனால், இயக்குனருக்கு எதுவும் பிடிக்கவில்லை. பிறகு அவர் ஒரு ம்யூசிக்கை மனதில் வைத்துக்கொண்டு இதே மாதிரி போட சொன்னார். நான் ஒரு மியூசிக் டைரக்டர் என்பதால் என்னால் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டேன். பிறகு அவர் அந்த பாடல் நீங்க பண்ண வேண்டாம் நான் பண்ண மாதிரி பெயர் போட்டுக்கொள்கிறேன் என்றார்.
நானும் சரி என்று சொல்லிவிட்டேன். மேலும், அந்த பாட்டை பாட சரியான சிங்கர் கிடைக்கவில்லை என்பதால் தான் நான் பாடினேன். அது தான் நான் பண்ண பெரிய தவறு. இப்ப கூட அந்த பாடலின் கீழ் பிரசாத் பெயர் தான் இருக்கும். அந்த பாடலுக்கு நான் இசை அமைக்கவில்லை. அதோபோல் என்னுடைய வாழ்க்கையில் எந்த ஒரு இசையும் நான் காப்பி அடிக்கவில்லை. இதை நான் பெருமையாக சொல்வேன் என்று கூறியிருந்தார். சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த கோடியில் ஒருவன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.