பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான கோட் படத்தின் ட்ரெய்லர் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்து வருகிறது. அந்த வகையில் இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த ‘லியோ’ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திருக்கிறது.
லியோ படத்தைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜயின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என்ன பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.
கோட் படம்:
மேலும் சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத், தாய்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா போன்ற பல இடங்களில் இந்த படத்தினுடைய ஷூட்டிங் நடந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் கோட் படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி இருந்தது. கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கோட் படத்தினுடைய முதல் பாடலான ‘விசில் போடு’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை எடுத்து நடிகர் விஜயின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தில் இருந்து ‘சின்ன சின்ன கண்கள்’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகியிருந்தது.
கோட் பட பாடல்கள்:
இந்தப் பாடலை விஜய் பாடியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த பாடலில் மறைந்த பாடகி பவதாரணி குரலும் ஏஐ மூலம் மறு உருவாக்கம் செய்து இருக்கிறார்கள். இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து கோட் படத்தின் மூன்றாவது பாடல் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது. இப்பாடலுக்கு ‘ஸ்பார்க்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா மற்றும் விருஷா பாலு இணைந்து பாடிய இப்பாடல் கடும் விமர்சனத்திற்கு உண்டானது.
கோட் குறித்த விமர்சனங்கள்:
இந்தப் பாடலில் விஜயை இளமை தோற்றத்தில் ஸ்டைலாக காட்டியுள்ளார்கள். ஆனால், பாடலில் வரும் விஜய் அவரைப் போல் இல்லை என்று இணையவாசிகள் விமர்சனங்களை செய்து இருந்தார்கள். அதே போல் யுவனின் இசையும் விமர்சனங்களுக்கு உண்டானது. அதனால் படத்தின் ட்ரெய்லர் மீது ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, நடிகர் விஜய் தனது சமூக வலைத்தள பக்கங்களில், கோட் படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 17 ஆம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.
தெலுங்கு பட ட்ரைலர் :
இந்நிலையில், இன்று கோட் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.கோட் படத்தின் ட்ரைலர் தமிழில் வெளியானது போல தெலுங்கு, இந்தியில் கூட வெளியாகி இருக்கிறது. தமிழ் ட்ரைலரின் கடைசியில் கில்லி படத்தில் விஜய் பாடிய ‘மருதமலை’ பாடல் ரெபர்ன்ஸ்ஸை போல தெலுங்கு மற்றும் இந்தியில் ஹாலிவுட்டில் பிரபலமான ‘மிஷன் இம்பாசிபல்’ மியூசிக்கை வாயால் வாசித்தபடி விஜய் வருகிறார்.