பிரபல தமிழ் நடிகர் விஜய் இன்று காலை நீட் தேர்வு பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார். அனிதாவின் குடும்பத்துக்கு நிதியுதவியும் அளித்துள்ளார்.

பன்னிரென்டாம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் எடுத்தும், மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் அனிதாவின் மருத்துவ கனவு கலைந்தது.

Advertisement

1176 மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவக்கல்லூரியில் சேரமுடியாததால் நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார்.

இறுதியில் கடந்த 1-ம் தேதி (செப்டம்பர் 1) அனிதா வீட்டில் யாருமில்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

அனிதாவின் தற்கொலை தமிழகத்தில் நீட் தேர்விற்கு எதிரான கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அரசியல் கட்சிகள், தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் அறிக்கை வெளியிட்டும் சமூகவலைதளத்தில் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்கள்.

Advertisement

ஏற்கனவே இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் முதல் நபராக, அனிதா தற்கொலை செய்த அன்றே அவரது குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

இன்று நடிகர் விஜய் அனிதாவின் குடும்பத்தினருக்கு இன்று (செப். 11) நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருமே ட்விட்டர் தளத்தில் தங்களுடைய இரங்கலோடு நிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

அனிதாவின் வீட்டிலிருந்த அவருடைய உருவபடத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, குடும்பத்தினருடன் சில மணித்துளிகள் விஜய் பேசிக் கொண்டிருந்தார்.

காவிரி பிரச்சினை, இலங்கைப் பிரச்சினை, ஜல்லிக்கட்டு, பணமதிப்பு நீக்கம், விவசாயிகள் பிரச்சினை, நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தொடர்ச்சியாக விஜய் குரல் கொடுத்துவருவது நல்ல விஷயம் என்று அவரது ரசிகர்களும் அரசியல் விமர்சர்களும் பதிவிட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான சேரன் “விஐய் போனது நல்ல விசயமே இதற்காக அவரை பாராட்டமாட்டேன். இது அவரின் கடமை” என கூறியுள்ளார்.

Advertisement