கையெழுத்து போட்டவர்களை விஷாலுக்கு எப்படி தெரியும் ? ஆர்.கே நகரில் வீழ்ச்சிக்கு காரணம் என்ன ?

0
892
- Advertisement -

ஆர்.கே.நகரில் உள்ள விஷால் ரசிகர் மன்ற பொறுப்பாளராக இருக்கும் ஒருவர்தான் சுமதி, தீபனை அறிமுகப்படுத்தியுள்ளார். அவரது அலுவலகத்தில்தான் விஷாலுக்கு முன்மொழிந்தவர்கள் கையெழுத்துப்போட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில், நடிகர் விஷால், தீபா உட்பட சுயேச்சைகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்தவர்களில் ஒரு பெண் உள்பட இரண்டு பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கு, விஷால் தரப்பு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்ததோடு, அவர்கள் இருவரும் ஆளுங்கட்சியினரால் மிரட்டப்பட்டதாக கூறியதோடு அதுதொடர்பாக ஆடியோ ஒன்றையும் தேர்தல் அலுவலரிடம் கொடுத்தது. இதனால், விஷாலின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆளுங்கட்சியினரும், தீபா தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து விஷாலின் வேட்புமனு மீண்டும் நிராகரிக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது. இதனால் விஷால் தரப்பினர் கடும் சோர்வடைந்துள்ளனர். அடுத்து என்ன செய்யலாம் என்று சட்டநிபுணர்களுடன் அவரது வீட்டில் விஷால் ஆலோசனை நடத்திவருகிறார்.

-விளம்பரம்-

இந்தச் சூழ்நிலையில், விஷாலுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தவர்கள்குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து நம்மிடம் பேசிய விஷாலுக்கு நெருக்கமானவர்கள், “ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிட முடிவு செய்ததும் அதுதொடர்பான ஏற்பாடுகளை ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் செய்தனர். வேட்புமனுவில் ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த 10 வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும் என்றதும் அதற்கான பொறுப்பு அந்தத் தொகுதியைச் சேர்ந்த ரசிகர்மன்ற பொறுப்பாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடனே அவரே, 10 வாக்காளர்களிடம் பேசி முன்மொழிவதற்கான வேலைகளைச் செய்தார். அவரது அலுவலகத்துக்கு வந்த 10 வாக்காளர்களும் விஷாலின் வேட்புமனுவில் முன்மொழிந்தனர். அதன் பிறகு அவர், வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
இந்தச் சமயத்தில்தான் விஷாலுக்கு முதலில் முன்மொழிந்த சுமதி என்ற பெண்ணின் குடும்பத்தினரை ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் மிரட்டியுள்ளார். இதனால் அவர்கள் பயந்து விஷாலுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தனர். அதேபோல தீபன் என்பவரும் புகார் கொடுத்துள்ளார். இந்தத் தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களிடம் விஷாலே போனில் பேசினார். அப்போது, நடந்த சம்பவத்தை விரிவாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். அந்த ஆடியோவை தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுசாமியிடம் கொடுத்தோம். அதன்பிறகே அவர், விஷாலின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

- Advertisement -

ஆனால், சில மணி நேரத்திலேயே மீண்டும் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அலுவலர் அறிவிக்கிறார். விஷால், தேர்தலில் நின்றால் தங்களுடைய வெற்றி வாய்ப்பு பறிக்கப்படும் என்ற பயம் ஆளுங்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் அவரை தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்குச் சூழ்ச்சி செய்துள்ளனர். தேர்தல் ஆணையமும் சிலரது தவறுகளுக்கு உறுதுணையாக செயல்படுவதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. அடுத்தகட்டமாக தலைமைத் தேர்தல் ஆணையத்திடமும், நீதிமன்றத்திலும் முறையிட முடிவு செய்துள்ளோம்” என்றனர்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “நடிகர் விஷால் போட்டியிடுவதால் எங்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை. ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியில் மீண்டும் அ.தி.மு.க தான் ஜெயிக்கும். ஏனெனில் இந்தத் தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அ.தி.மு.க. அரசுதான் செய்துள்ளது. எல்லாவற்றையும் ஆர்.கே.நகர் வாக்காளர்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். விஷாலின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்ததற்கு ஆளுங்கட்சியைக் குற்றம்சுமத்துவது தவறு. இந்தச் சம்பவத்தில் விஷால் தரப்பு விளம்பரத்தைத் தேட எங்கள்மீது பழிசுமத்துகின்றனர்” என்றனர்.
வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் விஷால் தரப்பினர் மகிழ்ச்சியோடு வீடுகளுக்குச் சென்றுள்ளனர். ஆனால், இரவு 11 மணியளவில் அவரது மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும் விஷால் உட்பட அவரது ரசிகர் மன்றத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் சோகத்தில் மூழ்கினர். பலர் தூக்கமில்லாமல் தவித்தனர். விடிந்ததும் அண்ணாநகரில் உள்ள விஷால் வீட்டுக்குச் சென்று அடுத்தகட்ட நடவடிக்கைகுறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சட்டரீதியாக விஷால் நடவடிக்கை எடுத்தாலும் அவருக்கு உடனடித் தீர்வு கிடைக்குமா என்பது கேள்விகுறி என்றே சட்டநிபுணர்கள் சொல்கின்றனர். இதனால் தலைமைத் தேர்தல் ஆணையத்திடமே ஆதாரங்களுடன் முறையிடுவோம் என்று விஷால் தரப்பு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement