இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் எமகாதகி. இந்த படத்தில் ரூபா, நரேந்திர பிரசாத், சுபாஷ் ராமசாமி, கீதா கைலாசம், ஹரிதா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை நாய்செட் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. பேய் அமானுஷ்யம் போன்ற பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் தஞ்சாவூர் அருகே ஒரு கிராமத்தின் ஊர் தலைவர் ஆக ராஜீ ராஜப்பன் இருக்கிறார். இவருடைய மகள் தான் ரூபா. இவருக்கு சிறு வயதில் இருந்தே ஆஸ்துமா பிரச்சனை இருக்கிறது. இருந்தாலுமே அவருடைய குடும்பம், சொந்த பந்தங்கள் எல்லோருமே அவரைச் செல்ல பிள்ளையாக நடத்தி வருகிறார்கள். இப்படி இருக்கும் போது ஒருநாள் கோபத்தில் தன்னுடைய மகள் ரூபாவை ராஜப்பன் அடித்து விடுகிறார்.
இதனால் மனமுடைந்த ரூபா தூக்கிட்டு தற்கொலையும் செய்து கொள்கிறார். அந்த தற்கொலையை மறைக்க ராஜப்பன் தன்னுடைய மகள் ஆஸ்துமாவால் மூச்சு திணறி இறந்து விட்டார் என்று சொல்கிறார். இதனால் ஊர் மக்களுமே நம்பி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் ரூபாவின் அண்ணன் கோவில் நகைகளை அவசர தேவைக்கு எடுத்து அதை திரும்ப வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். பின் ரூபாவின் இறுதி சடங்குக்கான ஏற்பாடுகள் நடக்கிறது.
அவருடைய சடலத்தை தூக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், எடுக்கவே முடியவில்லை. சாவு வீட்டிற்கு வந்த அனைவருமே கயிறு கட்டி ரூபாவின் சடலத்தை நகர்த்தப் பார்க்கிறார்கள். இருந்துமே அந்த சடலத்தை எடுக்கவே முடியவில்லை. ரூபா சடலம் எடுக்க முடியாமல் இருப்பதற்கான பின்னணி என்ன? ரூபாய் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? அவருடைய அண்ணன் நகையை திருட காரணம் என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.
பொதுவாகவே நிறைவேறாத ஆசையுடன் இருந்த சில பேரின் சடலம் வீட்டில் இருந்து வெளியே வராமல் பிரச்சனை செய்யும் என்று சில கிராமங்களில் சொல்வார்கள். அதை மையமாக வைத்து தான் இந்த படத்தை கொஞ்சம் வித்தியாசமாக இயக்குனர் கொடுக்க முயற்சித்து இருக்கிறார். இறந்த பெண்ணின் உடல் இறுதி சடங்கிற்கு செய்ய விடாமல் தடுப்பது ஆச்சரியம் தான். படத்தின் நாயகி ரூபா பாதி காட்சிகள் பிணமாக தான் நடித்திருக்கிறார். இருந்தாலுமே இவர் தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
எத்தனையோ பேய் அமானுஷ்ய படங்கள் வந்திருக்கிறது. ஆனால், ஒரு பெண் தன்னுடைய இறப்பிற்காக நீதி கேட்டு போராடும் கதையை இயக்குனர் வித்தியாசமாக காண்பித்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்றுதான். இவரை அடுத்து படத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது கதாநாயகி அம்மாவாக வரும் கீதா கைலாசம் நடிப்பு தான். தன்னுடைய எதார்த்த நடிப்பால் அனைவரையுமே கவர்ந்திருக்கிறார். படத்தில் மற்ற நடிகர்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தினுடைய முதல் பாதி பொறுமையாக செல்கிறது.
அதேபோல்தான் இரண்டாம் பாதியும் இருக்கிறது. ஆனால், நிறைய வசனங்கள் தான் படத்தில் நிறைந்து இருக்கிறது. கொஞ்சம் அதை மாற்றி விறுவிறுப்பாக கொடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒரு வீட்டில் நடக்கும் கதையை தான் படம் முழுக்க காண்பித்து இருக்கிறார்கள். அதற்கு ஒளிப்பதிவாளரை தான் பாராட்ட வேண்டும். இசையமைப்பாளர் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பாடல்கள் பெரிதாக இல்லை என்றாலும் பின்னணி இசை நன்றாக இருக்கிறது.
படம் தொடங்கியதிலிருந்து அடுத்து என்ன என்று யோசிக்கும் அளவிற்கு விறுவிறுப்பாக இயக்குனர் கொண்டு செல்ல முயற்சித்து இருக்கிறார். ஆனால், சில காட்சிகள் சீரியலை தான் நினைவுக்கு கொண்டு வருகிறது. முதல் பாதி கொஞ்சம் சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு இல்லாமல் கொண்டு சென்று இருப்பது படத்திற்கு பலவீனமே. படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். சில காட்சிகள் பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மொத்தத்தில் இந்த படத்தை ஒருமுறை சென்று பார்க்கலாம்.
நிறை:
நடிகர்கள் நடிப்பு
கதைக்களம் நன்றாக இருக்கிறது
பின்னணி இசை ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது.
முதல் பாதி ஓகே
குறை:
இரண்டாம் பாதியில் சுவாரசியத்தை கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம்
நிறைய வசனங்கள்
மொத்தத்தில் எமகாதகி – முயற்சி