பாண்டிராஜ் இயக்கும் புதிய படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பிடப்பட வில்லை. ஆகவே அவரது ரசிகர்கள் எஸ்கே 16 என்ற ஹேஷ்டேக் போட்டு செய்தியை பரப்பி வருகின்றனர். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
மேலும் விஷாலுடன் ‘துப்பறிவாளன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த அனு இமானுவேல்தான் சிவாவிற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இயக்குநர் பாரதிராஜாவும் சமுத்திரக்கனியும் முக்கிய பாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். இதன் படப்பிடிப்பு இம்மாதம் 8 ஆம் தேதி முதல் ஆரம்பமாகிறது. சென்னையில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டு வருகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் சிவாவுடன் சேர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் ‘பரோட்டா’ சூரியும் யோகிபாபுவும் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக இயக்க பாண்டிராஜ் முடிவு செய்துள்ளார். வழக்கமான பாண்டிராஜ் பாணியிலான படமாகவே இது அமையும் என்றும் கூறப்படுகிறது. ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தினை அடுத்து இயக்குநர் இப்படத்தினை இயக்க உள்ளார். இதற்கான முன்தயாரிப்பு வேலைகள் நடைபெற்று முடிந்துள்ளது.