உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. ‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படும் என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. இந்நிலையில், பிரபல நடிகை ஜோதிகா நடித்திருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை பிரபல டிஜிட்டல் பிளாட்ஃபார்மான ‘அமேசான் ப்ரைம்’-யிற்கு ரூ.9 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
ஜோதிகாவின் கணவரும், முன்னணி நடிகருமான சூர்யா தயாரித்திருக்கும் இந்த படத்தினை ஜே.ஜே.ப்ரட்ரிக் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் பார்த்திபன், கே.பாக்யராஜ், பாண்டியராஜன் ஆகியோர் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் பட்ஜெட் ரூ.4 1/2 கோடியாம். ஆனால், தயாரிப்பு நிறுவனத்திற்கு டிஜிட்டல் பிளாட்ஃபார்மிற்கு விற்றதால் அதிக லாபம் கிடைத்து விட்டதாம்.
இது தொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் பன்னீர் செல்வம் பேசுகையில் “நடிகர் சூர்யா எடுத்திருக்கும் இம்முடிவு எங்களுக்கு பெரிய அதிர்ச்சியை தந்திருக்கிறது. ‘கொரோனா’ லாக் டவுன் மற்றும் இச்சம்பவத்தினால் ஆயிரக் கணக்கான திரையரங்குகளை சார்ந்த அவர்களது குடும்பத்தினரின் எதிர்காலம் கேள்விக் குறியாக இருக்கின்றது.
அதை கருத்தில் கொண்டு சூர்யா முடிவெடுக்க வேண்டும். ஒரு வேளை சூர்யா எங்களது கோரிக்கையை ஏற்காமல் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை நேரடியாக டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் ரிலீஸ் செய்யும் பட்சத்தில், அதன் பிறகு சூர்யா தயாரிப்பில் உருவாகும் படங்கள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் தயாரிப்பில் உருவாகும் படங்களை நாங்கள் திரையரங்குகளில் திரையிட மாட்டோம்” என்று பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்.
தற்போது, இது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா உட்பட 30 தயாரிப்பாளர்கள் இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அறிக்கையில் “அனைவருக்கும் வணக்கம். திரைப்பட தயாரிப்பு துறையில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை நல்ல தொகை கொடுத்து வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும்.
ஏனெனில், அதன் மூலம் தயாரிப்பாளர்கள் அவர்களின் முதலீட்டை எப்படியாவது எடுத்துவிட முடியும். இவ்வாறு படங்கள் நேரடியாக வெளியிடுவதன் மூலம் திரையரங்கில் வெளியாக காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறையும். அவைகள் சரியான முறையில் வெளியாகவும் முடியும். இவ்வாறு பல நன்மைகள் விளையக்கூடிய இந்த OTT ப்ரீமியரை நாம் அனைவரும் வரவேற்று மேலும் பல சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை OTT நிறுவனங்கள் பிரீமியர் செய்வதற்கு வாங்க வேண்டும் என்று கோர வேண்டும்.
மேலும் முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு அப்படத்தை எல்லா விதங்களிலும், சட்டப்படி வியாபாரம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது என்று தற்போது திரைப்படங்கள் எடுத்துவரும் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். திரைப்படத் துறை வளமாக இயங்க அனைத்துத் தரப்பினரும் (தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்) ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். முடிவுகளை எடுக்க வேண்டும்.
தனிப்பட்ட எந்த சங்கமும் தன்னிச்சையாக எந்த ஒரு தயாரிப்பாளரையும் பாதிக்கும் முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறோம். இந்த கொரோனா லாக் டவுன் முடிந்தவுடன் அனைத்து சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்தாலோசித்து, விவாதித்து, இதற்கான (OTT ப்ரீமியர் படங்கள்) வரைமுறைகளை வகுத்து, தமிழ் சினிமா வளமாகச் செயல்பட சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.