மகன் முன் அம்மா அயிட்டம் டான்ஸ் ஆடலாமா? BiggBossTamil2..!

0
1851
Bigg-Boss
- Advertisement -

நம் சமுதாயம் சினிமாக்களைப் பார்த்து வளர்ந்தது. அதனால் சாதகங்களான விஷயங்கள் மட்டுமல்ல பல பாதகமான சம்பவங்களும் நடந்துவருகின்றன. சில வழக்குகளில், `நான் இந்தப் படத்தைப் பார்த்துத்தான் திருடினேன்; அந்தப் படத்தைப் பார்த்துத்தான் கொள்ளையடித்தேன்’ என்று குற்றவாளிகள் கூறுவதுண்டு.

-விளம்பரம்-

mahat

- Advertisement -

*இந்தக் கட்டுரையை எனக்கான டிஸ்க்லைமேருடன் (Disclaimer) ஆரம்பிக்கிறேன்.

*நான் பெண்ணியவாதியல்ல

-விளம்பரம்-

*நான் பெரியாரிஸ்ட் அல்ல

*நான் முற்போக்குவாதியுமல்ல…

இரண்டு குழந்தைகளை வளர்த்துக்கொண்டு, நேரம் கிடைக்கும்போது பிடித்த நிகழ்ச்சிகளையும் சீரியல்களையும் பார்த்து ரசிக்கும் ஒரு சராசரி நடுத்தர வயது பெண்மணி!

நான்கு பேர் ஓரிடத்தில் கூடிப்பேசினாலே நாற்பது விதமான அரசியல் (!) நடக்கும் உலகம் இது! அப்படியிருக்கையில், பதினாறு பேர், அதுவும் சற்றே பிரபலமான முகங்கள், நூறு நாள்கள் ஒரே வீட்டில் தங்கி, பழகி, பேசி, சிரித்து, அழுது, சண்டை போட்டு, சமாதானமாகி வசிக்கப்போகிறார்கள் என்றால், நூறுகோடி அரசியல் பூசல்கள் எந்த ஸ்கிரிப்ட்டும் இல்லாமலே அரங்கேறும் சாத்தியங்கள் அதிகம்.

bigg-boss

எனக்கு இந்த `பிக் பாஸ்’ நிகழ்ச்சி கான்செப்ட் புதுசு; அதனால், ஒரு வீட்டுக்கு லீடர், வேலைகளை செய்ய தனித்தனி டீம், டாஸ்க், பிக் பாஸின் கட்டளை, வார இறுதியில் கமல்ஹாசனுடன் ஓர் அலசல்… என வித்தியாசமாக இருக்கும் இந்த ஷோ பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. முதல் சீசனில், ஜாலி, கேலி, கொண்டாட்டம், காதல், ஓவியா ஆர்மி என நிறையப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பெரிய அளவில் யார் மனத்தையும் புண்படுத்தாத வகையில் நடந்த பிக் பாஸ், இந்த சீசனில், தொடக்கம் முதலே, முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளும், அருவருக்கத்தக்கப் பேச்சுகளும் நிரம்பி வழிகின்றன.

சின்ன சின்ன பூசல்கள், அம்மா சென்டிமென்ட், காதல், பிரிந்த கணவன் – மனைவியின் ஃபீலிங்ஸ் என்று லைட்டாகச் சென்றுகொண்டிருந்த நிகழ்ச்சியின் தன்மையை எத்தனை பேர் ரசிப்பார்களோ என்ற பதற்றம் வந்துவிட்டது என நினைக்கிறேன். அதனால்தானோ, ஆபாச நடனங்களும் இரட்டை அர்த்த பேச்சுகளையும் கொண்டு உங்களின் டிஆர்.பியை அதிகப்படுத்தும் திட்டத்தில் இறங்கிவிட்டீர்கள். இதன்மூலம் எங்களுடைய அருவருப்பை மட்டுமே பெற்றிருக்கிறீர்கள். இந்த டி.ஆர்.பி தந்திரத்திற்காக, நுழைக்கப்பட்டதுதான் ஆண்கள் எல்லாரும் எஜமானர்கள்; பெண்கள் எல்லாரும் வேலைக்காரர்கள் எனும் டாஸ்க் என்பது பெண்களாகிய எங்களுக்குப் புரியாமல் இல்லை. ஆனால், பிக் பாஸ் எனும் ஆணுக்கு ஒரு பெண்ணாகச் சில விஷயங்களை எடுத்துச்சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலேயே இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

நம் சமுதாயம் சினிமாக்களைப் பார்த்து வளர்ந்தது. அதனால் சாதகங்களான விஷயங்கள் மட்டுமல்ல பல பாதகமான சம்பவங்களும் நடந்துவருகின்றன. சில வழக்குகளில், `நான் இந்தப் படத்தைப் பார்த்துத்தான் திருடினேன்; அந்தப் படத்தைப் பார்த்துத்தான் கொள்ளையடித்தேன்’ என்று குற்றவாளிகள் கூறுவதுண்டு. உங்களின் கடந்த இரண்டு நாள் எபிசோட்களும், சில சினிமாக்கள் போலத்தான் உள்ளன. கொடுக்கப்பட்ட டாஸ்க்குகள் சமூகத்துக்குள்ளும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களின் மனதுக்குள்ளும் என்ன மாதிரியான விஷ விதைகளை தூவிக்கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்தே செய்கிறீர்களா அல்லது இது எல்லாம் யாருக்குத் தெரியப்போகிறது என்ற எண்ணத்தில் செய்கிறீர்களா?

முந்தைய நாள் எவ்வளவு வேலைகள் செய்திருந்தாலும், மறுநாள் ஆண்கள் எழுவதற்கு முன்பே பெண்கள் எழுந்திருக்க வேண்டும் என்பது டாஸ்க்கின் ஒரு விதி. அதை `ஆண்கள் எஜமானர்கள்; பெண்கள் உதவியாளர்கள்’ என்ற போர்வையில் நீங்கள் தந்தாலும், இதைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களின் மனத்தில் என்னவிதமான விஷம் விதைக்கப்படும் தெரியுமா? காலங்காலமாக எங்கள் பாட்டிகளும் அம்மாக்களும் இடுப்பொடிய எத்தனை வேலைகள் செய்தாலும், `பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி’ என்று நெருக்கடி தந்து அவர்களின் ஓய்வும் உறக்கமும் களவாடப்பட்டது. சற்றே மாறிவரும் சமூகச் சூழலில் அதை மீண்டும் வலியுறுத்த முயல்கிறீர்களா? மறுபடியும் ஆண்களின் அடி மனத்திலிருக்கும் இந்த விருப்பம் தூசுத் தட்டி எடுக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியாதா? ‘அட! அடுத்த டாஸ்க்கில் ஆண்களை வேலைக்காரர்கள் ஆக்கி, பெண்களை எஜமானர்களாக்கி விட்டேன்’ என்று நீங்கள் சமாளித்திருக்கிறீர்கள். ஆனால், பிக்பாஸில் நீங்கள் `லக்‌சூரி டாஸ்க்’ என்று சில பெண்களை வைத்து விளையாடிக்கொண்டிருப்பதைத்தான் போன தலைமுறை ஆண்கள் பெண் இனத்தின் மேல் நாள்தோறும் செய்துகொண்டிருந்தார்கள். அதிலிருந்தெல்லாம் இப்போதுதான் மெள்ள மெள்ள மீண்டு வந்துகொண்டிருக்கிறோம். மறுபடியும், ஏன் இந்த அடிமையாக்கும் விஷயங்கள்?! உங்களின் கிரியேட்டிவ் டீமின் சிந்திக்கும் அளவு இவ்வளவுதானா?!

சென்ற எபிசோடுகளில் மும்தாஜை, `அம்மா மாதிரி’ உருகின ஷாரிக்கும், மிகுந்த மரியாதை தந்துவந்த மஹத்தும் எஜமானர்கள் ஆனவுடன், `மும்தாஜ் டாஸ்க் சரியாகச் செய்யலை. அதனால, ரெண்டு மணி நேரம் வெயில்ல நீச்சல் குளத்தை க்ளீன் பண்ணட்டும்’ என்று தண்டனை தருகிறார்கள். ஷாரிக் மற்றும் மஹத்தின் ஆணாதிக்கப் பூனை வெளியே வர அதிக நாள்கள் பிடிக்கவில்லை. அந்தக் கோணம் உங்கள் கேமரா கண்களுக்குத் தெரிகிறதா பிக்பாஸ்?

அடுத்தது, ஆண்களாகிய எஜமானர்களைக் குஷிப்படுத்துவதற்காக, பெண்கள் ஆட வேண்டும், பாட வேண்டும் என்கிற டாஸ்க். `மகன் போல’ என்று உறவு கொண்டாடப்பட்ட ஷாரிக் முன்னால் `அம்மா போல’ மும்தாஜை, `சுப்பம்மா சுப்பம்மா’ என்று டப்பாங்குத்து ஆட விடுகிறீர்கள். `நான் ஆளான தாமரை’ பாடலுக்கு ரித்விகா ஆடும்போது ஷாரிக்கின் விடலைத்தனமான விசிலை மட்டுமல்ல, வீட்டின் பெரிய மனிதனான அனந்த் வைத்தியநாதனின் முகபாவனைகளும் சகித்துக்கொள்ளமுடியவில்லை. ஐ யம் வெரி ஸாரி பிக் பாஸ். உங்கள் டாஸ்க்குகள் நம் பண்பாட்டின் எல்லைகளை மீறிக்கொண்டிருக்கின்றன. மிஸ்டர். பிக் பாஸ்! உங்கள் குரலில் இருக்கும் கண்ணியத்தில், ஒரு சதவிகிதமாவது நீங்கள் அளிக்கும் டாஸ்க்களில் இருந்தால் நல்லது.

இப்போது வேண்டுமானால், உங்களின் நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்கள் அதிகரித்து, அது சமூக ஊடகங்களிலும் வைரலாகலாம். ஆனால், இதுபோல நீங்கள் சமூகப் பொறுப்பில்லாமல், உங்கள் நிகழ்ச்சியை நடத்திவந்தால், வெகுவிரைவில் # BanBiggBoss என்ற ஹேஷ்டேக் உருவாகும் நிலையும் வரக்கூடும் என்பதையும் சற்றே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!

போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.
போட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க “Bigg Boss Vote Tamil” என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.

Advertisement