தொடர்ந்து சொதப்பும் அபிஷேக் சர்மா
இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, கடந்த ஆறு டி20 போட்டிகளிலும் எதிர்பார்த்த அளவுக்கு செயல்பட முடியாமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். அவர் கடைசி ஆறு இன்னிங்ஸ்களில் 10, 16, 3, 1, 8, 2 என மிகக் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். அதிரடி பேட்டிங்கிற்காக அறியப்படும் அபிஷேக், தொடர்ந்து ஒரே மாதிரியான தவறுகளை செய்து விக்கெட்டை இழப்பது ரசிகர்களின் கவலையை அதிகரித்துள்ளது.

சஞ்சுவுக்கு மட்டும் ஏன் கடுமையான முடிவு?
அபிஷேக் சர்மா தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் நிலையில், சஞ்சு சாம்சன் வெறும் மூன்று போட்டிகளில் மட்டுமே சொதப்பியதற்காக அணியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவத்தை ரசிகர்கள் தற்போது மீண்டும் நினைவுபடுத்தி வருகின்றனர். அப்போது சஞ்சுவுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது அபிஷேக் சர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுவது இரட்டை அளவுகோலாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
கம்பீர் என்ன முடிவு எடுப்பார்?
தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், சஞ்சு சாம்சனை மூன்று தோல்விகளுக்குப் பிறகு துணிச்சலாக நீக்கியிருந்தார். அதேபோல், தற்போது தொடர்ந்து ஆறு இன்னிங்ஸ்களாக ரன் எடுக்கத் தவறும் அபிஷேக் சர்மா மீதும் அதே முடிவை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வீரருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவது சரி என்றாலும், அதே பொறுமை மற்ற வீரர்களுக்கும் இருக்க வேண்டுமே என்ற கருத்தும் வலுத்து வருகிறது.

ரசிகர்கள் எழுப்பும் முக்கிய கேள்வி
இந்திய அணியில் இடம் பெறும் அனைத்து வீரர்களுக்கும் ஒரே மாதிரியான தேர்வு அளவுகோல் இருக்க வேண்டுமா? அல்லது ஒவ்வொரு வீரருக்கும் வெவ்வேறு விதிமுறைகளா? என்ற கேள்விதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது. அபிஷேக் சர்மாவுக்கு இன்னும் வாய்ப்பு வழங்கி அவர் மீண்டும் பார்முக்கு திரும்பும் வரை காத்திருப்பார்களா, அல்லது சஞ்சு சாம்சன் விஷயத்தில் எடுத்த அதே முடிவை இப்போதும் கம்பீர் எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






