தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். தற்போது தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் 50-ஆவது திரைப்படம் 'ராயன்'. இந்த படத்தில் சந்தீப், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா, எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் ராயன் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் ஹீரோ காத்தவராயன் பாஸ்ட் புட் ஹோட்டல் ஒன்று நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு தம்பிகள், தங்கை இருக்கிறார்கள். காத்தவராயன் அண்ணனாக மட்டுமில்லாமல் ஒரு அப்பாவாகவும் தன்னுடைய இரண்டு தம்பிகளையும், தங்கையும் பார்த்து வருகிறார். இதற்கிடையில் தன்னுடைய தங்கையை எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று காத்தவராயன் போராடிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய இரண்டாவது தம்பி முத்து அடிக்கடி குடித்துவிட்டு ஏதாவது ஒரு பிரச்சினையை இழுத்து வருகிறார்.

இன்னொரு பக்கம் சென்னையின் பிரபல ரவுடியின் மகன் தான் எஸ்.ஜே சூர்யா. இவர் தன்னுடைய தந்தையைக் கொன்ற சரவணனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று காத்து கொண்டு இருக்கிறார். இவர்களுக்கு இடையில் பிரச்சனையை ஏற்படுத்தி அவர்களை மொத்தமாக அழிக்க போலீஸ் நினைக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் ஏரியாவில் முக்கிய புள்ளியாக இருக்கும் ஒருவருடைய மகன் கொல்லப்படுகிறார்.
https://www.youtube.com/watch?v=fk-Da6DWBiU
அந்த பிரச்சனையில் காத்தவராயன் தம்பி சிக்கி கொள்கிறார். இதற்கு பழி தீர்க்க அந்த மொத்த கும்பலும் முத்துவை கொலை செய்ய பார்க்கிறது. அதற்கு முன்பே ராயன் அந்த கும்பலை மொத்தமாக முடித்து விடுகிறார். கடைசியில் காத்தவராயன் எடுத்த கத்தி எங்கு கொண்டு போய் நிறுத்தியது? இறுதியில் அவர் என்ன செய்தார்? இதனால் காத்தவராயன் குடும்பத்தின் நிலை என்ன? அவருடைய தங்கைக்கு நல்லபடியாக திருமணம் செய்து வைத்தாரா? என்பதே படத்தினுடைய மீதி கதை.
படத்தில் கண்டிப்பான அண்ணனாகவும், பாசமான அப்பாவாகவும் தன்னுடைய நடிப்பில் தனுஷ் மிரட்டி இருக்கிறார். நடை, உடை, பாவனை என அனைத்திலுமே தனுஷ் சிறப்பாக செய்திருக்கிறார். இவருடைய தம்பிகளாக சந்தீப், காளிதாஸ், தங்கையாக தூஷரா விஜயன் நடித்திருக்கிறார்கள், போலீஸ் அதிகாரியாக பிரகாஷ்ராஜும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் வருகிறார்கள். இருவருமே தங்களுடைய அனுபவ நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் தனுஷ் ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்தையும் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக நடிகர்கள் உடைய தேர்வு சுவாரசியம் குறையாமல் கொடுத்திருக்கிறார். நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்கத்திலும் தான் ஒரு அசுரன் என்பதை தனுஷ் இதன் மூலம் நிரூபித்து இருக்கிறார். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய அளவிற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. தனுஷ் உடைய திரைப்பயணத்தில் இந்த படம் ஒரு மறக்க முடியாத படமாக அமைந்திருக்கிறது.
மேலும், முதல் பாதி நிதானமாக சென்றாலும் இரண்டாம் பாதி மாஸ் காட்டியிருக்கிறது. ஆனால், சில இடங்களில் தேவையற்ற ஆக்சன் காட்சிகளை நீக்கியிருக்கலாம். டார்க் காமெடிகள் நன்றாக இருந்தாலும் சில இடங்களில் கடுப்பேற்றி இருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் இருளில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் தனுஷின் இது ஒரு சிறப்பான விடாமுயற்சி என்று சொல்லலாம்.
நிறை:
தனுஷின் உடைய நடிப்பு மிரட்டல்
இயக்கம் நன்றாக இருக்கிறது
கதைக்களம் சிறப்பு
பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது
படத்தின் மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

குறை:
முதல் பாதி பொறுமை
சில ஆக்சன் காட்சிகளை குறைத்திருக்கலாம்
டார்க் காமெடிகள் ஒர்க்கவுட் ஆகவில்லை
மொத்தத்தில் ராயன்- நல்ல முயற்சி






