தமிழ் சினிமாவில் 80 காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர் கராத்தே மணி. கராத்தே மணி 1944 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதிலிருந்தே கராத்தேவில் அதிக ஆர்வம் உடையவர். இதனால் இவர் ஜப்பானின் முன்னணி மாஸ்டர்களிடம் முறையாக கராத்தே கற்றவர். கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்ற முதல் தமிழர் கராத்தே மணி. கராத்தேவின் உயர்ந்த பட்டமான ‘ரென்ஷி’ பட்டத்தை கராத்தே மணி வென்றவர். அதுமட்டும் இல்லாமல் இந்த பட்டம் வென்றவர்கள் தான் நிஞ்சா வீரர்களாக முடியும். பின் இவர் 1965ம் ஆண்டு சென்னையில் முதல் கராத்தே பயிற்சி பள்ளியை துவக்கினார். அதோடு கராத்தே மணி டோக்கியோ கராத்தே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். இதன் மூலம் இவர் சினிமாவில் நுழைந்தார்.
சினிமாவைப் பொருத்தவரை பலரை தெரிந்திருந்தாலும் திறமைக்கானவருக்கு தான் அங்கீகாரம் கிடைக்கும். மக்களிடமும் அவர்கள் தான் வென்று சாதிக்க முடியும். எவ்வளவு பெரிய அளவில் பிரபலமாக இருந்தாலும் சினிமாவில் போராடி தான் ஜெயிக்க முடியும். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் சினிமாவில் சண்டை பயிற்சியாளராகவும் இருந்தவர் கராத்தே மணி. இவர் சினிமா உலகில் மிகச் சிறந்த நடிகர் என்ற பெயரை வாங்கவில்லை என்றாலும் கராத்தே கலையின் மூலம் மிரட்டி இருக்கிறார். இவர் நடித்த சண்டை காட்சிகள் அனைத்துமே அன்றைய காலகட்டத்திலேயே ‘வாவ்’ என்று சொல்லும் அளவிற்கு இருக்கும்.
சினிமாவில் ரஜினி- கராத்தே மணி கூட்டணி:
இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறார். பழம்பெரும் நடிகர் நடிகர் எம் ஜி ஆருக்கு நம்பியார் எப்படி வில்லனோ, அதேபோல் ரஜினிக்கு பொருத்தமான வில்லன் என்றால் அது கராத்தே மணி தான். ரஜினி- கராத்தே மணி கூட்டணி நீண்ட நாட்கள் தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர்- நம்பியார் கூட்டணி போல் வலம் வரும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், இவர்கள் இருவரும் சில படங்களில் மட்டும் தான் சேர்ந்து நடித்து இருந்தார்கள். மேலும், கராத்தே மணி அவர்கள் அன்புக்கு நான் அடிமை, ரங்கா, அஞ்சாத நெஞ்சங்கள், விடியும் வரை காத்திரு தங்ககோப்பை போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர்.
கராத்தே மணி திரைப்பயணம்:
அதுவும் இவர் படங்கள் ஆக்ஷன் பாணியில் தான் நடித்திருக்கிறார். பின் இவர் திடீரென்று சினிமாவை விட்டு விலகி விட்டார். இவருக்கு சண்டை போட தெரிந்த அளவிற்கு சினிமாவில் நடிப்பதற்கு நடிக்கத் தெரியவில்லை என்றெல்லாம் சிலர் விமர்சித்து இருந்தார்கள். ஒரே நேரத்தில் 10 பேரை சமாளிக்கும் திறமை கொண்டவர். இவர் இன்னும் திரைப்பட துறையில் சாதித்து இருந்தால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் சினிமா வட்டாரத்தில் பேசி இருந்தார்கள். என்றாலும் இவர் அதைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய கராத்தேவில் பல சாதனை செய்தார்.
கராத்தே மணியின் சாதனை:
இவர் சினிமா உலகில் அறிமுகமாவதற்கு முன்பே கராத்தேவின் மூலம் பிரபலமானவர். இவர் கராத்தே பள்ளியை நடத்தியது மட்டுமில்லாமல் தமிழ்நாடு காவல்துறையில் காவலர்களுக்கு பயிற்சி அளித்தும் இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஜப்பானில் கற்ற கலையை நம் இந்தியாவில் பரப்பியது போல் நம் நாட்டு சிலம்பாட்டத்தைக் ஜப்பானிலும் பரப்பினார். இவரால் ஜப்பான் முழுவதும் நம்முடைய சிலம்பகலை பிரபலமானது. மேலும், உலக தற்காப்புக்கலை அறக்கட்டளை அமைப்பில் இந்திய அரசின் பிரதிநிதியாக கராத்தே மணி இந்திய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.
கராத்தே மணி கற்றிந்த கலைகள்:
மேலும், இவர் தன் கராத்தே கலையுடன் நம் நாட்டு சித்த வைத்திய முறையையும் முறையாக கற்றறிந்தார். அதுமட்டுமில்லாமல் ஜப்பான் நாட்டின் அக்குபஞ்சர் மருத்துவ முறையும் இவர் கற்றறிந்தார். இப்படி காரேத்தாவிலும், மருத்துவத்திலும் பிரபலமான இவர் 50 வயதிலேயே இறந்து போனார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. கராத்தே மணிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு மகன்களும் படங்களில் நடித்து இருக்கிறார்கள்.