வீட்டில் உடற்பயிற்சி செய்த போது ஏற்பட்ட விபரீதத்தால் நடிகர் கார்த்திக் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமாகி 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். தற்போது குணசித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்து வருகிறார். நடிகர் கார்த்தியின் மகன் கௌதம் கார்த்திக்கும் தற்போது ஒரு ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
சென்னை போயஸ் கார்டனில் வசிக்கும் கார்த்திக் தற்போதும் தினமும் உடற் பயிற்சி செய்து வருவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் வீட்டில் உடற்பயிற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு காலில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வலியால் துடித்துள்ளார்.
இதையும் பாருங்க : கோமா நிலையில் சீரியல் நடிகர் வேணு அரவிந்த் – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி. காரணம் இது தானாம்.
வலியால் துடித்த கார்த்திக், உடனடியாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்ட போது அவரது கால் எலும்பில் சிறிய விரிசல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கார்த்தி விபத்து ஒன்றில் சிக்கி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
அப்போது அறுவை சிகிச்சையின் மூலம் அவரது கால் சரி செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் அதே இடத்தில் தான் மீண்டும் அடிப்பட்டு எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டு இருப்பது ஸ்கேனில் தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள் கார்த்திக்குக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் தான் நடிகர் கார்த்திக் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.