மலேசியாவில் ஹோட்டல் தொடங்குவது குறித்து கருணாஸ் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்பவர் கருணாஸ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல், இசை அமைப்பாளரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழக அரசியல் வாதியும் ஆவார். சூர்யா நடிப்பில் வெளிவந்த ’நந்தா’ படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் கருணாஸ் சினிமா உலகிற்கு அறிமுகமானர்.
அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறனை காண்பித்து இருந்தார். பின் இவர் ‘திண்டுக்கல் சாரதி’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி, சாந்தமாமா ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தார் கருணாஸ். இறுதியாக 2013 ஒரு ஆண்டு வெளிவந்த ரகளபுரம் படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். அதற்கு பின் இவர் ஹீரோவாக நடிக்கவில்லை. இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
கருணாஸ் அளித்த பேட்டி:
தற்போது இவர் ஆதார் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் சினிமாவை தாண்டி அரசியல், விவசாயத்தையும் பார்த்து வருகிறார். சமீபத்தில் கூட கருணாஸ் மலேசியா சென்றிருந்தார். அங்கு ஹோட்டல் நடத்துவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக கருணாஸ் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், இதற்கு முன்னாடி நான் மூன்று ஹோட்டல்களை நடத்தி இருந்தேன். ஆனால், மூன்றுமே இப்போது என்னிடம் இல்லை. ஆனால், அதன் மூலம் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கிறது. சிறுவயதில் இருந்தே நான் ஹோட்டல் தொழிலை பார்த்து வளர்ந்தேன்.
ஹோட்டல் தொழில் குறித்து சொன்னது:
என் அப்பா ஒரு சின்ன கிராமத்தில் டீக்கடை வைத்திருந்தார். அதில் வெறும் டீ மட்டும் இல்லை. டிபன், பரோட்டா எல்லாம் செய்து விற்பனை செய்வோம். அப்போது சாப்பிட வருபவர்கள் உங்களுடைய கடையில் சாப்பாடு நன்றாக இருக்கிறது என்று பாராட்டுவதை கேட்கும் போது என்னுடைய மனதிற்கு சந்தோசமாக இருக்கும். இதனால் எனக்கு சின்ன வயதில் இருந்தே ஹோட்டல் மீது ஒரு இனம் புரியாத ஆர்வம். அதுவும் நம்முடைய ஓட்டலில் வந்து சாப்பிடுபவர்கள் வயிறு நிறைந்தும், மனநிறைவோடும் பாராட்ட வேண்டும் என்பது என்னுடைய ஒரு ஆசை. அதனால் தான் அந்த தொழிலை விடாமல் செய்து கொண்டே வருகிறேன்.
கருணாஸ் ஹோட்டல்கள்:
நான் முதலில், சென்னை நூறடி ரோட்டில் லொடுக்கு பாண்டி மெஸ் ஆரம்பித்தேன். முதலில் நன்றாக தான் போனது. ஆனால், அந்த இடத்தை வாடகைக்கு விட்டவர்களுடன் பிரச்சனை ஏற்பட்டதால் அங்கு என்னால் ஹோட்டலை தொடர முடியவில்லை. அதன் பின்னர் இரண்டாவது ஹோட்டலை பெரும் புதூரில் ஆரம்பித்தேன். தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு சொந்தமான இடம். அந்த ஹோட்டலுக்கு திண்டுக்கல் சாரதி என்று பெயர் வைத்தேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஹோட்டல் கையை விட்டுப் போய்விட்டது. அதற்குப் பிறகு கருணாஸின் ரத்ன விலாஸ் என்ற பெயர் வைத்து ஒரு ஹோட்டல் ஆரம்பித்தேன். கொரோனா காலகட்டத்தில் அந்த ஹோட்டலையும் மூட வேண்டிய ஆகிவிட்டது.
மலேசியா ஹோட்டல்:
இப்போது ஹோட்டல் முழு பொறுப்பையும் என் மனைவியிடமே ஒப்டைத்து விட்டேன். அவர்கள் தான் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு வருகிறார்கள். நல்ல உணவு தான் நல்ல ஆரோக்கியம். சமீபத்தில் கூட மலேசியாவிற்கு போயிருந்தபோது ஹோட்டல் தொடங்குவதற்கான இடங்களை எல்லாம் பார்த்துவிட்டு வந்தேன். இந்த தொழிலில் பொறுமை ரொம்ப முக்கியம். இப்ப எனக்கு தெரிந்த தொழிலில் ஹோட்டலும் ஒன்று. நம்ம வீட்டில் எப்படி ஆரோக்கியமான சாப்பாடு சாப்பிடுகிறோமோ அப்படிதான் மக்களுக்கும் நல்ல உணவு கொடுக்கணும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். உணவே மருந்து என்று சொல்வார்கள். அதை நான் பாரம்பரிய முறையில் பார்த்து கொடுத்துக் கொண்டு வருகிறேன் என்று கூறி இருக்கிறார்.