கடந்த சில வாரமாக ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருக்கிறது. சோசியல் மீடியா முழுவதும் மிக்ஜாம் புயல் குறித்த செய்தி தான் அதிகமாக வைரலாகி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், மக்கள் வெளிவர முடியாத சுழலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு இது வரலாறு காணாத மழை என்றும் கூறுகிறார்கள். தற்போது மீட்பு பணிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. மேலும், பிரபலங்கள் பலருமே தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் மறைந்த நடிகர் மயில்சாமி இருந்திருந்தால் பல உதவிகளை செய்திருப்பார் என்று சோசியல் மீடியாவில் பலரும் கூறியிருக்கிறார்கள்.
இவர் நடிகர் என்பதைத் தாண்டி பல சமூக சேவைகளையும் செய்து இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்ட போது இவர் தண்ணீரில் இறங்கி உணவு, மளிகை சாமான் எல்லாம் வழங்கி இருந்தார். தற்போது மயில்சாமி உயிரோடு இருந்து இருந்தால் கண்டிப்பாக உதவி இருப்பார் என்று பலரும் கூறி இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக மயில்சாமியின் மகன் நடிகர் அன்பு கூறியிருப்பது, அப்பா உயிரோடு இருந்திருந்தால் வீட்டிலேயே அவரை பார்த்திருக்க முடியாது. இந்த நேரம் வெள்ள பாதிப்பு பகுதிகளில் உதவி செய்து கொண்டிருப்பார். உதவி பண்ணனும் என்று முடிவு பண்ணிட்டால் யார் பேச்சையும் அவர் கேட்க மாட்டார். கடனை வாங்கி ஆவதும் செய்துவிடுவார்.
மயில்சாமியின் மகன் நடிகர் அன்பு பேட்டி:
2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது நாங்கள் மட்டும் சொந்த ஊருக்கு போய் விட்டோம். ஆனால், அப்பா எங்களுடன் வரவில்லை.கையில் இருந்த பணம், அம்மாவின் நகையெல்லாம் அடகு வைத்து உதவி செய்திருந்தார். அப்போது அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து இருந்தது. நாங்கள் எவ்வளவு சொல்லியும் எங்கள் பேச்சைக் கேட்கவே இல்லை. சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதையே லட்சியமாக வைத்திருந்தார். இதனாலே எங்களுடைய அம்மாவுக்கு போன் பண்ணி, உங்க அக்கவுண்ட் நம்பர் கொடுங்க உங்களுக்கே சம்பளத்தை போட்டு விடுகிறோம் என்றெல்லாம் நிறைய தயாரிப்பாளர்கள் சொல்லி இருந்தார்கள். அப்பாவுக்கு அந்த அளவுக்கு இளகின மனது இருந்தது.
மயில்சாமி சமூகசேவை:
எங்களுக்காக அவர் சொத்து பத்து எல்லாம் எதுவும் சேர்த்து வைக்கவில்லை. ஆம்பள பசங்க நீங்க நாளைக்கு கஷ்டப்பட்டு உழைத்து உங்கள் திறமையால்தான் முன்னேறி வரணும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். நாங்களும் அப்பா சொல்படி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சம்பாதித்த பணத்தை எல்லாம் உதவி பண்ணியே அழிச்சிட்டு இருந்தா நாளைக்கு ஏதாவது ஒன்னு உனக்கு வருவாங்களா என்று சொந்தக்காரர்கள் எல்லாம் கேட்பார்கள். எதிர்பார்த்து எதையுமே செய்ய கூடாது. நமக்கு என்ன தேவையோ கடவுள் எப்பவும் கொடுப்பார் என்று எம்ஜிஆர் சொன்ன டயலாக் அப்பா எப்பவுமே சொல்லிக் கொண்டே இருப்பார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்து கொண்டே இருந்தார்.
தந்தை இழப்பு குறித்து சொன்னது:
இப்போது அப்பா எங்களுடன் இல்லை என்ற வேதனையோடு நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறோம். அவரை சாமியா நினைத்து தான் தினமும் கும்பிட்டு இருக்கோம். அப்பாவோட இழப்பு எங்களை விட அம்மாவுக்கு தான் அதிகம். அம்மா இப்பதான் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அம்மாவோட சப்போர்ட் இல்லை என்றால் அப்பாவால இவ்வளவு உதவிகளை செய்திருக்க முடியாது. அம்மாவுக்கும் அப்பாவோட குணம்தான்.
நடிகர் அன்பு நடிக்கும் படங்கள்:
இப்பவும் எங்களுடைய வீட்டுக்கு உதவி கேட்டு வருபவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து கொண்டுதான் இருக்கிறோம். முடியவில்லை என்றால் நண்பர்கள், தன்னார்வலர்கள் மூலமாக உதவிகளை செய்து கொடுக்கிறோம். அவர்களும் அப்பாவுக்காக செய்கிறார்கள். இந்த நேரத்தில் எல்லோருக்கும் எங்கள் நன்றிகளை தெரிவிக்கிறோம் என்று நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார். தற்போது நடிகர் அன்பு அவர்கள் கவுண்டமணியுடன் ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்திலும், தனுஷ் உடைய ஐம்பதாவது படத்திலும் நடித்து வருகிறார்.