நானியின் ஹிட் 3 படத்தின் கதை திருட்டு என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நானி. இவர் தமிழில் நான் ஈ மற்றும் ஆஹா கல்யாணம் போன்ற சில படங்களில் தான் நடித்து இருந்தார். இந்த படங்கள் எல்லாம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இருந்தாலும், இவர் அதிகம் தெலுங்கு மொழி படங்களில் தான் நடித்து இருக்கிறார்.

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் இவர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் வெளியாகி இருந்த சரிபோதா சனிவாரம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை டிவிவி தனய்யா தயாரித்திருந்தார். இந்த படத்தில் நானி உடன் பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, அதிதி பாலன், சாய்குமார், சுபலேகா சுதாகர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
ஹிட் 3:
இதைத் தொடர்ந்து சமீபத்தில் நானி நடிப்பில் வெளியாகி இருந்த படம் ஹிட்: தேர்ட் கேஸ் (HIT: Third Case). இந்த படத்தை சைலேஷ் கொலனு என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி நடித்து இருக்கிறார். இந்த படம் மே 1ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க ரத்தம் தெறிக்க க்ரைம் ஜானலில் இயக்குனர் கொடுத்திருந்தார். இந்த படத்தில் நானி போலீஸ் ரோலில் மிரட்டி இருந்தார் என்று சொல்லலாம்.

திருட்டு கதை சர்ச்சை:
இந்த படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் மிகப் பெரிய அளவில் வசூல் செய்தது என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஹிட் 3 படம் தன்னுடைய கதை என்று தென்காசியை சேர்ந்த கே.விமல் என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவர் அளித்த மனுவில், கடந்த 2022 ஆம் ஆண்டு என்னுடைய 'ஏஜென்ட் லெவன்' என்ற சைக்கோ கில்லர் கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று பிரபல நடிகர் நானியின் நிறுவனத்திற்கு மின்னஞ்சலில் அனுப்பி இருந்தேன்.

மனுவில் சொன்னது:
அந்த கதையை மையமாக வைத்து தான் நடிகர் நானி நடிப்பில் இயக்குனர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் ஹிட் 3 என்ற படத்தை எடுத்திருக்கிறார். இந்த படம் 2025 ஆம் ஆண்டு மே மாதம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தியில் வெளியானது. இந்த படம் 120 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. என்னுடைய கதையை வைத்து தான் ஹிட் 3 படத்தை எடுத்திருக்கிறார்கள். அதனால் இந்த படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் 20 சதவீதத்தை எனக்கு இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

நீதிமன்றம் உத்தரவு:
இதை அடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஹிட் 3 திரை படத்தின் ஹீரோ நானி, இயக்குனர், தயாரிப்பாளர், நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் இதற்கு பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை
ஜூலை 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.






