தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நடிகர் நெப்போலியன். நடிகர் நெப்போலியன் 1963ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் குமரேசன் துரைசாமி. இவரது குடும்பத்தில் 6 குழந்தைகள். இவர் 5வது மகனாக பிறந்தார். திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தார். பின்னர் தனது 27 வயதில் 'உதயம்' என்ற படத்தினை பார்த்து இவருக்கு நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. பின், போராடி 1991ல் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதன் பின்னர், இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதுவரை இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், நெப்போலியன் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார்.
கே என் நேருவின் உறவினர்:
மேலும், இவர் அமைச்சர் கே என் நேருவின் நெருங்கிய உறவினர். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன், அமைச்சருக்கு உதவியாளராக பணியாற்றி இருக்கிறார். அதற்குப் பிறகுதான் இவர் சினிமாவில் நடிக்க துவங்கினார். நடிப்பில் பிசியாக இருந்தாலும், நெப்போலியன் அரசியலிலும் ஆர்வம் காட்டி வந்தார். இதையடுத்து, திமுக சார்பில் 2001 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாகவும் மாறினார். அதன் பின்பு திமுகவிலிருந்து நீக்கப்பட்ட அவர், பாஜகவில் இணைந்திருந்தார்.

வில்லன் ரோல்கள்:
அதோடு இவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் அதிக வில்லன் கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார். அதனால் இவருக்கு பெண் கொடுக்க பலரும் யோசித்தார்களாம். இவர் பெண் தேடி அலைந்து கடைசியாக திருமணம் செய்தவர் ஜெயசுதா. முதலில் ஜெயசுதாவும் நெப்போலியனை திருமணம் செய்ய மறுத்தாராம். அதோடு சினிமாவில் கருவில் இருக்கும் குழந்தைக்கு விஷம் வைத்துக் கொன்று விட்டவர், நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பார் என திருமணத்திற்கு ஓகே சொல்லவில்லையாம். அதன் பிறகு தான்ஜெயசுதாவின் பெற்றோர் அவருக்கு சமாதானம் செய்துள்ளனர்.
அன்பான தந்தை:
பின், சினிமாவில் வில்லனாக மிரட்டிய நெப்போலியனுக்கு, தனுஷ் மற்றும் குணால் என இரு மகன்கள் திறந்தபின் தான் அவர் எப்படிப்பட்ட பாசக்கார தந்தை என்று உலகிற்கே தெரியவந்தது. நெப்போலியன் தனது மூத்த மகன் தனுஷ் சிறுவயதில் இருந்தே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதை அறிந்து, மகனின் சிகிச்சைக்காக தன் தாய் நாட்டையே விட்டு வெளியேறி அமெரிக்காவில் செட்டில் ஆனார். அத்துடன் அங்கு புதிய ஐடி நிறுவனம் தொடங்கி, தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார்.

நெப்போலியன் மகன் திருமணம்:
மேலும், பத்து வயதிற்குள் தனது மகன் தனுஷ் இறந்து விடுவார் என மருத்துவர்கள் சொன்னதை பொய்யாக்கி, அவருக்காக ஒரு நிறுவனத்தை உருவாக்கி, பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் சமீபத்தில் அவருக்கு திருமணமும் செய்து வைத்தார். அது மட்டுமில்லாமல் தன் மகனைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் ஜீவன் அறக்கட்டளையையும் அவர் முன்பே தொடங்கிவிட்டார். இப்படி சினிமாவில் வில்லனாக நடித்தாலும், நிஜ வாழ்க்கையில் ஒரு சிறந்த தந்தையாக விளங்கும் நெப்போலியனுக்கு இன்று பிறந்தநாள்.






