பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த நடிகர் பொன்னம்பலம், வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார். நிகழ்ச்சி குறித்த அனுபவங்களைப் பற்றி அவரிடம் பேசினேன்.
”சில வருடங்களாகவே சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தேன். அதற்குக் காரணம், என் உடல்நிலை. ஒரு விபத்தின் காரணமா ஓய்வு எடுத்துக்கிட்டு இருந்தேன். அப்போதான், ‘பிக் பாஸ்’ வாய்ப்பு வந்தது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு நாலு நாள்களுக்கு முன்னால் போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்துகொள்ள என்னிடம் பேசினாங்க. முதலில் தயங்கினேன். நிகழ்ச்சியில் கலந்துக்கவிருக்கிற மற்ற போட்டியாளார்கள் பற்றிக் கேட்டேன். அதைப் பற்றி எதுவும் சொல்லமுடியாதுனு சொல்லிட்டாங்க. யோசிச்சுப் பார்த்துட்டு, ஓகே சொன்னேன். இந்த விஷயத்தைப் பற்றி வீட்டில் யாரிடமும் சொல்லல. நிகழ்ச்சிக்குப் போறதுக்கு ஒருநாள் முன்னாடிதான் வீட்டுல ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில கலந்துக்கப்போற விஷயத்தைச் சொன்னேன். முதலில் ஆச்சரியப்பட்டாங்க. பிறகு, அவங்களும், சம்மதம் சொன்னவுடனே பெட்டி படுக்கையைக் கட்டிக்கிட்டு ‘பிக் பாஸ்’ வீட்டுக்குக் கிளம்பிட்டேன்” ஃப்ளாஷ்பேக் காட்சிகளுடன் நம்மிடம் பேசுகிறார், பொன்னம்பலம்.
”பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் எந்தப் போட்டியாளர் உங்களைத் தொடர்புகொண்டு பேசினார்?”
“நித்யா மட்டும்தான் பேசுனாங்க. ‘என்ன.. அண்ணன் அதுக்குள்ள வெளியே வந்துட்டீங்க’னு கவலைப்பட்டாங்க. ஒரு இடத்தில் மரியாதை நமக்குக் கிடைக்கும்போது அதை வாங்கிட்டு, அதே மரியாதையோடு வெளியே வந்துடணும்னு சொன்னேன். இளைஞர்களுக்கு வழிவிட்டுட்டு வந்துட்டேன். இதை கவுரமாகத்தான் நினைக்கிறேன். உள்ளே இருந்த போட்டியாளர்கள்கிட்ட எவிக்ஷன் பெயரில் என்னை சேருங்கனு நானேதான் சொன்னேன். ஏன்னா, சினிமாவில் நல்ல நடிகன், ஜாம்பவான்னு பெயர் எடுத்துட்டேன். உள்ளே இருக்கிற பசங்களும் வளரட்டும்.”
”ஷாரிக் இடத்தில் உங்கப் பையன் இருந்திருந்தா, என்ன சொல்லியிருப்பீங்க?”
“என் பையனா இருந்திருந்தாலும், ‘என்ன ஆச்சு’னுதான் கேட்டிருப்பேன். ஆனா, அதை அந்த இடத்துல கேட்டிருக்கமாட்டேன். ஏன்னா, என்னைவிட தெளிவா பிக் பாஸ் பார்த்திருப்பார். அவருக்கு என்ன நடந்ததுனு தெரியும். என் பையனோட தனிப்பட்ட கருத்தில் தலையிட மாட்டேன். வெளியே வந்தபிறகு விசாரிச்சிருப்பேன். என் பையனும், நானும் ‘பிக் பாஸ்’ வீட்டில் போட்டியாளரா இருந்திருந்தாலும் அவனையும் என் சக போட்டியாளராகத்தான் பார்த்திருப்பேன்.”
”எப்படிப்பட்ட அனுபவத்தை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி உங்களுக்குக் கொடுத்தது?”
” ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளே இருந்தவர்களுக்குக் கொடுத்த அனுபவத்தைவிட நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு கொடுத்த அனுபவம்தான் பெருசுனு நினைக்கிறேன். ஏன்னா, இன்னைக்கு நல்லவனா இருக்கிறவன் நாளைக்கு கெட்டவனா மாறிப் போறான். மனிதர்களுடைய குணங்களை நேரடியாவே இந்த நிகழ்ச்சியின் மூலமா பார்க்கலாம். வெளியே இருந்து பார்க்கிற மக்கள் சில விஷயங்களைத் திருத்திக்க முடியுது. இந்த நிகழ்ச்சி எனக்கும் நல்ல அனுபவமாதான் இருந்தது. ஏன்னா, நான் அந்த காலத்து ஆள். இன்றைய இளைஞர்களோட பழகுறதுக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்தது. தமிழ் தவிர மற்ற மொழி பேசுபவர்களும் வீட்டுக்குள்ளே இருந்தாங்க. அவங்ககூட பழகுற வாய்ப்பு கிடைத்தது. உள்ளே, இருந்தவர்கள் எல்லோரையும் நான் நண்பரந்த்தான் பார்த்தேன்.”