தன்னுடைய ஆன்மீகம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80 காலகட்டம் துவங்கி தற்போது வரை ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய திரை உலகில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி நடித்து இருந்தார்.
இந்த படத்தில் மோகன் லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், விநாயகம் என்று பலர் நடித்து இருந்தனர். இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என்று பேன் இந்தியா அளவில் வெற்றியை கண்டது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கி இருந்தார். இந்த படத்தில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ஃபஹத் சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடித்து இருந்தார்கள்.
ரஜினி திரைப்பயணம்:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து ரஜினியின் 171வது படமான ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து சத்யராஜ் இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார். இதனாலே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, ரஜினிகாந்த் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவர் அடிக்கடி இமயமலை சென்று வருகிறார்.
ரஜினிகாந்த் வீடியோ:
சமீபத்தில் இவர் ஜார்கண்டில் உள்ள ஒய்எஸ்எஸ் ஆசிரமத்தில் க்ரியா யோகா பயிற்சிக்கு சென்றிருக்கிறார். இது தொடர்பாக தன்னுடைய அனுபவத்தை வீடியோ மூலம் ரஜினிகாந்த் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், மூன்றாவது முறையாக நான் இந்த ஆசிரமத்திற்கு வந்திருக்கிறேன். இரண்டு நாட்களாக இங்கு தங்கி இருந்து ஆசிரமம் முழுவதுமே பார்வையிட ஒரு வாய்ப்பு கிடைத்தது. இங்கு இருக்கக்கூடிய குருவோடு அமர்ந்து தியானம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இந்த அனுபவத்தை வர்ணிக்கவே முடியாது, ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.
க்ரியா யோகா பயிற்சி:
என்னை பார்ப்பவர்கள், நீங்கள் ரொம்ப பாசிட்டிவாக இருக்கிறீர்கள் என்று சொல்வார்கள். அதற்கான ரகசியம் க்ரியா தான். நான் க்ரியா பண்ண ஆரம்பித்திலிருந்து எனக்குள் நிறைய மாற்றங்கள் வந்தது. இது ஒரு விதமான அமைதி. 2002 ஆம் ஆண்டில் நான் க்ரியா செய்ய ஆரம்பத்து 21 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், ஆரம்பத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. இவ்வளவு தூரம் செய்தும் எந்த மாற்றமும் ஏற்படவில்லையே என்று நிறைய நாட்களை நினைத்தேன். ஆனாலும் பரவாயில்லை என்று திரும்பவும் செய்ய ஆரம்பித்தேன். செய்ய ஆரம்பித்து பத்து வருடங்களுக்கு பிறகு தான் அதனுடைய மாற்றம் தெரிய வந்தது.
ஆன்மீகம் அனுபவம்:
அதனால் எப்போதும் ஒரு மன அமைதி, நிம்மதி கிடைக்கும். கஷ்டப்படாமலே எல்லாம் தானாக கிடைக்கும்.
இங்கு இருக்கக்கூடிய குருக்கள் எல்லாம் நம் கையை பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றால் நாம் இதனை விட்டால் கூட அவர்கள் நம்மை விட மாட்டார்கள். இது ரொம்ப சீக்ரெட் டெக்னிக். இதை யாரெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்களோ அவர்கள் எல்லோருமே கொடுத்து வைத்தவர்கள். இந்த க்ரியாவை செய்தால் தான் அதனுடைய பலன் தெரியும். இந்த ஆசிரமத்திலிருந்து போகவே மனமில்லை. இனி வருடம் வருடம் இங்கு வரவேண்டும் என்றுதான் நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.