பிக் பாஸ் பிரபலம் ராஜூ ஜெயமோகன் ஹீரோவாக களமிறங்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ராஜு ஜெயமோகன். இவரின் சொந்த ஊர் திருநெல்வேலி. இவர் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு பல கனவுகளுடன் சினிமாவுக்குள் நுழைந்தார். முதலில் இவர் நடிகர் பாக்யராஜ் இடம் உதவி இயக்குனராக சில காலம் பணியாற்றியிருந்தார்.

அதன் பிறகு தான் விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீரியலில் நடித்தார். இதன் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா போன்று பல சீரியலில் நடித்து இருந்தார்.
பின்பு கவின் நடிப்பில் வெளிவந்த நட்புனா என்னன்னு தெரியுமா படத்தில் லீட் ரோலில் ராஜூ நடித்திருந்தார். மேலும், பல போராட்டங்களுக்கு பிறகு நடிகர் ராஜூ ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ராஜு:
மேலும், சின்னத்திரை பிரபலத்தின் மூலம் ராஜுவுக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் இவர் திறமையாக விளையாடி முதல்பரிசை தட்டி சென்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் விஜய் டிவியில் மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அந்த வகையில் இவர் ராஜி ஊட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ராஜு குறித்த தகவல்:
அதற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வந்ததாக கூறப்பட்டது. ஆனால், அது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நடிகர் ராஜு ஹீரோவாக தமிழ் சினிமாவில் களமிறங்க இருக்கும் தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. இவர் Rain of Arrows Entertainemt நிறுவனத்தின் கீழ் சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிக்கும் படத்தில் தான் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
ராஜு ஹீரோவாக நடிக்கும் படம்:
ராஜு நடிக்கும் படத்திற்கு பன் பட்டர் ஜாம் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை ராகவ் மிர்தாத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே காலங்களில் அவள் வசந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் இவர் சைஸ் ஜீரோ, பாரம் போன்ற படத்திற்கு வசனத்தை எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் ராஜூவுக்கு ஜோடியாக பவ்யா த்ரிகா நடிக்கிறார்.

படம் குறித்த தகவல்:
இவர்களுடன் இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, விஜே பப்பு, மைக்கேல் தங்கதுரை, சார்லி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். இன்றைய Gen Z தலைமுறையினரின் ரிலேஷன்ஷிப்பை பற்றிய கதை தான் பன் பட்டர் ஜாம். ஒருவருக்கு எத்தனை பிரச்சனை வந்தாலும் அதை முழுமையாக ஏற்று வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்பதை தான் இயக்குனர் நகைச்சுவை கலந்த பாணியில் கொடுத்திருக்கிறார். மேலும், இந்த படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை எட்டாம் தேதி வெளியாக இருக்கிறது.






