கடந்த தீபாவளிக்கு இயக்குனர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான் நடித்து தெலுங்கில் வெளியான படம் தான் ‘லக்கி பாஸ்கர்’. இயக்குனர் வெங்கி அட்லூரி தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி, ராஜ்குமார் காசிரெட்டி, ராம்கி, ஹைப்பர் ஆதி, சாய்குமார், சச்சின் கெடேகர், சூர்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் தெலுங்கில் மட்டும் இல்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது. தீபாவளி முன்னிட்டு வெளியான இப்படத்தை தற்போது வரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் ஆண்டனி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தவர் ராம்கி. இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டு பெற்று இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ராம்கி, தியேட்டர் ரிலீஸில் படம் ஹிட்டு அடித்தது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. தீபாவளி ரிலீஸ் ஆன போது ரொம்ப பரபரப்பாக இருந்தது.
ராம்கி பேட்டி:
அப்போ அமரன் படமும் வெளியாகி இருந்தது. தினமும் திரையரங்குகளில் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அதற்கு பிறகு வசூலும் அதிகமாக இருந்தது. அதிகம் இந்த படத்தை திரையரங்கில் பார்த்துக் கொண்டாடியிருந்தது இளைஞர்கள் தான். இப்போ ஓடிடி ரிலீஸில் என்னுடைய ரசிகர்கள் அதிகமாக படத்தை பார்த்துக் கொண்டாடுகிறார்கள். முக்கியமாக மீம்ஸ் கிரியேடர்ஸ்க்கு நன்றி சொல்லணும். அவர்கள் தான் ஆண்டனி கதாபாத்திரம் பற்றி பல மீம்ஸ் போட்டு பிரபலப்படுத்தியிருந்தார்கள். இந்த படத்தை பார்த்துட்டு பலர், நம்ம வாழ்க்கையில் இப்படி ஒரு ஆண்டின் வரமாட்டாங்களா? என்று பதிவும் போட்டு இருந்தார்கள்.
படம் குறித்து சொன்னது:
ஒரு மொழி மட்டுமல்ல லக்கி பாஸ்கர் ஐந்து மொழிகளிலும் நல்ல ஹிட் கொடுத்து இருக்கிறது. இந்த ஹிட்டுக்கு பிறகு ஆண்டனிக்கு குரல் கொடுத்தது இவரா என்று பதிவு எல்லாம் போட்டு இருக்கிறார்கள். அப்படி ஒரு ஆழமான இடத்தை அந்த கதாபாத்திரம் பிடித்து இருக்கிறது. இப்ப பல இடங்களில் இருந்து இந்த கதாபாத்திரத்திற்கு கால் செய்து விசாரிக்கிறார்கள். நிறைய பேர் நம்ம ஆளுப்பா இவர் என்று சொல்வதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது.
ஆண்டனி கதாபாத்திரம்:
இயக்குனர் வெங்கி எனக்கு கதையின் முதல் பாதி சொல்லி முடித்ததுமே நான் படத்துக்கு ஓகே சொல்லிவிட்டேன். எனக்கு அதிக காட்சிகள் துல்கர் சல்மானுடன் தான் இருந்தது. மொத்தமாக 40 நாட்கள் படத்தில் நடித்தேன். படத்தினுடைய அத்தனை வேலைகளையும் துல்லியமாக படக்குழு கையாண்டு இருந்தார்கள். படம் கண்டிப்பாக நல்லா போகும் என்று அப்போதே இயக்குனரை நான் வாழ்த்தியிருந்தேன். நினைத்த மாதிரியே படம் ஹிட் அடித்தது. ஆண்டனி மாதிரியானவர்கள் நண்பர்களாகவும், பிசினஸ் பாட்டன்களாகவும் வருவாங்க என்று தான் பலருக்கும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
என்னோட வாழ்க்கையில் ஒரு நபர் பல தருணங்களில் வந்து எனக்கு வெளிச்சமாக இருந்திருக்கிறார். ஆண்டனியை நாம் தேடி போக வேண்டாம். அவராகவே கண்டிப்பாக நம் வாழ்க்கைக்கு வருவார். எதார்த்தமான வாழ்க்கையில் என்னைக்காவது நிச்சயம் ஆண்டனி வருவார். ஆண்டனி பல வடிவங்களில் வரலாம். இப்போ நான் காரில் போறேன், முன்னாடி போகிற கார் கண்ணாடியில் இருக்கிற வசனத்தில் வரலாம். இல்லைன்னா, நம்ம படிக்கிற புத்தகத்தில் இரண்டு வரிகளில் வரலாம் என்று பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்