கட்டிட காண்டிராக்டரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். இவர் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வின் டிவி எனும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டீக்கடை பெஞ்ச் என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மீடியாவிற்குள் நுழைந்தார்.
பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” என்ற நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்களிடையே பிரபலமானார். ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை நிரூபித்த சந்தானம் பல போராட்டங்களுக்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதே போல படங்களில் நடிப்பதற்க்கு முன்பாக சந்தானம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலிலும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சந்தானம், குணால் நடித்த ‘ பேசாத கண்ணும் பேசுமே’ என்ற படத்தில் சிறு காட்சியில் தோன்றியிருப்பார்.
இதையும் பாருங்க : ‘விரைவில் திருமணம்’ – டேட்டிங் புகைப்படங்களை பகிர்ந்த லலித் மோடி – சுஸ்மிதா சென்னின் விளக்கத்தை பாருங்க.
சந்தானத்தின் திரைப்பயணம்:
இந்த திரைப்படத்திற்கு பின்னர் தான் காதல் அழிவதில்லை படத்தில் நடித்திருந்தார் சந்தானம். அதனை தொடர்ந்து சந்தானம் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக ஜொலித்து கொண்டு இருந்தார். பின் இவர் கடந்த சில வாருடங்களாக சினிமாவில் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். சந்தானம் இறுதியாக ‘சபாபதி’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் காமெடி-குடும்ப சென்டிமென்ட் கலந்த படமாக உருவாகி இருந்தது.
சந்தானம் நடிக்கும் படம்:
ஆனால், இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இந்த படத்திற்கு முன்பாக சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது சந்தானம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும். இந்நிலையில் கட்டிட காண்டிராக்டரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சந்தானம்- கட்டிட காண்டிராக்டர் தகராறு:
அதாவது, சந்தானம் தனக்கு சொந்தமான இடத்தில் பெரிய கட்டிடம் கட்டுவதற்காக பெரிய தொகையை கட்டிட காண்டிராக்டர் சண்முகசுந்தரம் இடம் கொடுத்திருக்கிறார். ஆனால், சில காரணங்களால் அந்த பணி நின்று போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் கொடுத்த பணத்தை நடிகர் சந்தானம் கேட்டபோது கட்டிட காண்டிராக்டர் பணத்தை தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. பின் கடந்த 2017 ஆம் ஆண்டு வளசரவாக்கத்தில் உள்ள கட்டிடத்தின் அலுவலகத்தில் தனது மேனேஜர் உடன் சென்று சந்தானம் பணத்தை கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
நீதிமன்றத்தில் ஆஜரான சந்தானம்:
இதில் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் கட்டிட காண்டிராக்டர் மற்றும் நடிகர் சந்தானம் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து இரு தரப்பினரும் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே நடிகர் சந்தானம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் மீண்டும் சந்தானம் ஆஜராகி இருக்கிறார். மனுவை விசாரித்த நீதிபதி ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி மீண்டும் இந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் சந்தானம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறார்.