தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என்ற பட்டத்துடன் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக இருப்பவர் சரத்குமார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. ஆரம்பத்தில் இவர் படங்களில் கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் சமீபகாலமாக இவர் குணசித்திர வேடங்களில் மிரட்டிக் கொண்டு வருகிறார்.

மேலும், இவர் அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடி பில்டர் என பன் முகங்களை கொண்டவர். இவர் இதுவரை 140க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார்.
சரத்குமார் குறித்த தகவல்:
சமீப காலமாக இவர் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஆழி. கொம்பு சீவி படத்தை தொடர்ந்து இயக்குனர் மாதவ் தாசன் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். கடலை மையமாக வைத்த இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், தாமரை செல்வி, வையாபுரி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

சரத்குமார் பேசியது:
இந்த படம் வருகிற 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமார், ஆழி ஒரு வித்தியாசமான படம். இப்போது வரும் பெரும்பாலான படங்களில் ஆடல் பாடல் பிரம்மாண்டங்கள் இருக்கும். ஆனால், இந்த படத்தில் அந்த மாதிரியான பிரம்மாண்டம் இருக்காது. கதைதான் இந்த படத்தினுடைய பிரம்மாண்டமே. இன்றைய பார்வையாளர்கள் பல விதமான படங்களை பார்க்கிறார்கள்.

நடிப்பு பற்றி சொன்னது:
அவர்களுக்கு பார்ப்பதற்கு நிறைய இருக்கிறது. மேலும், சார்ட்ஸ் பார்க்கும் கலாச்சாரம் வந்துவிட்டது. இப்போது எதற்கு நடிப்பது என தெரியவில்லை. ஷார்ட்சுக்கு நடிப்பதா? ரீல்ஸ்க்கு நடிப்பதா? டிவிக்கு நடிப்பதா? ஓடிடிக்கு நடிப்பதா? தியேட்டருக்கு நடிப்பதா? என்று குழப்பம் இருக்கிறது. இந்த குழப்பம் எந்த நடிகருக்கும் தேவையில்லை. எதில் நடித்தாலும் நடிப்புதான். காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.






