சோசியல் மீடியாவில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியிடுவது தொடர்பாக நடிகர் சூரி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக இருந்து ஹீரோவாக கலக்கி கொண்டிருப்பவர் சூரி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாமன். இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். இந்த படம் தாய்மாமன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த படம் வெற்றியடைய வேண்டும் என்று சூரி உ டைய ரசிகர்கள் சில பேர் மண் சோறு எல்லாம் சாப்பிட்டு இருந்தார்கள். இதனால் இதை கண்டித்து நடிகர் சூரி பேட்டி அளித்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சூரி ஒவ்வொரு மாவட்டத்தில் திரையரங்குக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
மாமன் படம்:
அந்த வகையில் திண்டுக்கல்லில் தனியார் திரையரங்கிற்கு சூரி சென்று மாமன் படம் குறித்து பொதுமக்களிடம் கேள்வி கேட்டு அறிந்தார். அதுமட்டுமில்லாமல் சூரி ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்த சூரி, மாமன் படம் மிகப்பெரிய அளவு வெற்றி அடைந்திருக்கிறது. அனைத்து திரையரங்குகளில் நல்ல வசூலை குவித்து வருகிறது. இந்த படத்திற்கு யாருமே நெகட்டிவ் கருத்துக்களை கூறவில்லை. இதுபோல் ஒவ்வொரு வருடமும் குடும்பம் சார்ந்த படங்களை எடுக்க ஆசைப்படுகிறேன். படத்தை வெற்றி படமாக மாற்றிய தாய்மார்களுக்கு ரொம்ப நன்றி. இந்த படத்தில் நடித்த அனைவருக்குமே நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

சூரி பேட்டி:
இந்த படத்தில் நடந்தது போலவே எங்களுடைய குடும்பத்திலும் நடந்திருப்பதாக படத்தை பார்த்த பலர் தெரிவித்திருக்கிறார்கள். சினிமா என்று இல்லாமல் அனைவரின் வாழ்க்கையும் இணைக்கக்கூடிய படமாக இது இருக்கிறது. கதாநாயகனாக தொடர்ந்து வெற்றிப்படங்கள் வருகிறது.
இருந்தாலும் நகைச்சுவை நடிகராக நடிக்க வேண்டுமா? இல்லை கதாநாயகனாக நடிக்க வேண்டுமா? என்பது மக்களின் வரவேற்பு இல்லாமல் இங்கு எந்த ஒரு விஷயமும் நடக்காது. நகைச்சுவை என்பது எல்லோரிடமும் இருக்கும். கதாநாயகனாக நடித்தாலும் நகைச்சுவை இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். பெரிய நடிகர்களுடன் நகைச்சுவையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் கண்டிப்பாக நடிப்பேன்.
https://www.youtube.com/watch?v=PR7guHO6g5Y
படம் பற்றி சொன்னது:
எனக்கு சரியாக இருக்கும் பட்சத்தில் நடிப்பேன். மேலும், சமீப காலமாக புது படங்கள் திருட்டுத்தனமாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போது அதற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன். கோடி கணக்கில் செலவு செய்து படத்தை எடுத்துவிட்டு இயக்குனர், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருமே படம் எப்படி வரப்போகிறது? மக்கள் எப்படி வரவேற்பு கொடுப்பார்களோ? என்று கடவுள் இடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதை தவறான முறையில் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடுவது மனதிற்கு ரொம்பவே வேதனை தருகிறது.
படம் திருட்டு:
அப்படி திருட்டுத்தனமாக சமூக வலைத்தளங்களில் படத்தை வெளியிடுவது இன்னொரு குழந்தையை கொண்டு வந்து கொலை செய்வதற்கு சமம். இதை மக்கள் வரவேற்கக் கூடாது. பல வருடங்களாக அரசாங்கமும் இதை ஒழிக்க முயற்சி செய்து வருகிறது. தியேட்டரில் சென்று படம் பார்க்கும் அனுபவம் எங்குமே கிடைக்காது. சமூக வலைத்தளங்களில் படங்கள் வெளியானாலுமே படம் நன்றாக இருந்தால் மீண்டும் தியேட்டரில் வந்து மக்கள் படம் பார்க்கிறார்கள். தியேட்டருக்கான வரவேற்பு கொடுத்து தான் வருகின்றனர். எஃப் எம் எஸ் கொடுப்பதால் படம் வெளிநாடுகளுக்கு சென்று சேருகிறது. நல்லது நடக்க வேண்டும் என்று நான்கு பேர் நினைத்தால் இரண்டு பேர் இதை தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள். இது முற்றிலும் மாற வேண்டும் என்று கூறி இருக்கிறார்.






