கிழக்கு சீமையிலே விக்னேஷ் என்ன ஆனர் தெரியுமா ? தற்போதைய நிலை – விவரம் உள்ளே

0
4208
Kizhakuncheemaiyile vignesh
- Advertisement -

ஈரோடு பக்கத்தில் சின்னக் கிராமத்தில் பிறந்தவன் நான். சின்ன வயதிலிருந்து என் அம்மா அப்பாவைப் பார்த்த ஞாபகமில்லை. ஒரு போட்டோவில் என் அம்மா, அப்பாவுடன் நான் இருப்பேன். அதைத்தான் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்’’ என்று அந்த போட்டோவை எடுத்துக் காட்டி நம்மிடம் பேச ஆரம்பிக்கிறார், ‘சின்னத்தாயி’ படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ‘கிழக்குச் சீமையிலே’, ‘பசும்பொன்’, ‘அப்பு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் விக்னேஷ்.

-விளம்பரம்-

Actor vignesh

- Advertisement -

” ஈரோடு பக்கத்தில் மூலனூரில்தான் படித்தேன். ஸ்கூல் படிக்கும்போதிலிருந்தே சினிமாவில் நடிக்கணும்னு ஆசை இருந்தது. அதனாலேயே ஸ்கூல் நாடகம், கோயில் திருவிழா எல்லாவற்றிலும் கலந்து கொள்வேன்.

நடிப்பையும் தாண்டி எனக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். அட்லெட் பிளேயர்; கபடியிலும் ஃபர்ஸ்ட். பாட்டிதான் என்னை வளர்த்தாங்க. வசதி இல்லாத காரணத்தால் விளையாட்டுத் துறையில் ஜொலிக்க முடியவில்லை. ரஜினியின் தீவிர ரசிகன் நான். ஒருநாள் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சென்னைக்கு ஓடி வந்துவிட்டேன். எனக்கென்று இருந்த ஒரே ஜீவன் என் பாட்டிதான். அவரிடமும் சொல்லவில்லை.

-விளம்பரம்-

சென்னையில் நிறைய வேலைகள் செய்தேன். பெயின்ட் அடித்தேன், லாட்டரிச் சீட்டு விற்றேன். ஐந்து வருஷம் கிடைத்த வேலை எல்லாம் செய்துகொண்டிருந்தேன். அதற்கப்பறம் கேமரா மேன் தர்மாவிடம் உதவி கேமராமேனாக வேலை பார்த்தேன். உதவி இயக்குநராகவும் இருந்திருக்கிறேன். அந்த நேரத்தில் கலா மாஸ்டரிடம் டான்ஸ் க்ளாஸ் போனேன். டான்ஸ் க்ளாஸுக்கு விக்ரம், ரோகிணி, சூர்யா எல்லாம் வருவாங்க. விக்ரம் அப்போதே சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தார். நான் கிடைத்த வேலை எல்லாம் செய்து, அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து டான்ஸ் க்ளாஸுக்குப் பணம் கட்டுவேன்.

vignesh Actor

எல்லா இயக்குநர்களிடமும் சான்ஸ் கேட்டுக்கொண்டே இருந்தேன். அந்த நேரத்தில் என்னை பாலுமகேந்திரா சார் பிரசாந்த் நடித்த ‘வண்ண வண்ண பூக்கள்’ படத்துகாக முதலில் ஒப்பந்தம் செய்தார். எனக்குப் படத்தில் நடிப்பதற்காக ட்ரெய்னிங் கொடுத்தார். பாலுமகேந்திரா சார் படத்தில் நடிக்க போறேன்னு, ரொம்ப சந்தோஷமாக இருந்தேன்.
நான் நடிக்க வேண்டிய கேரக்டருக்கு நடிகை அர்ச்சனா அவங்களோட சொந்தக்காரப் பையன் ஒருத்தரை நடிக்க வைக்கணும்னு பாலு சாருக்கிட்ட சொன்னாங்க. படத்துக்கான ஷூட்டிங் நடந்து, இரண்டு நாள் ஷூட்டிங்கில் நான்தான் ஹீரோவாக நடித்தேன் . அந்த நேரத்தில் அர்ச்சனா, பாலு சாரிடம் ரொம்ப சண்டை போட ஆரம்பித்து விட்டார். உடனே, பாலு சார், ‘உனக்குப் புது பையன்தானே பிரச்னை. நீ சொன்ன பையனும் வேணாம், விக்னேஷூம் வேணாம். பிரசாந்த் நடிக்கட்டும்’னு பிரசாந்த்தை நடிக்க வைத்தார்.

டைரக்டர் மனோஜ் குமார் சார் ஆபீஸுக்கு அடிக்கடி போயிட்டு வருவேன். அங்கே டைரக்டர் கணேஷ் ராஜ் , மனோஜ் சாரிடம் இணை இயக்குநராய் இருந்தார். கணேஷ் சாருக்கு அந்த நேரத்தில் படம் இயக்க சான்ஸ் கிடைத்தவுடன் என்னை வைத்துப் படம் எடுக்கலாம்னு முடிவு பண்ணி என்னைத் தேட ஆரம்பித்து விட்டார். அப்போது பாலு மகேந்திரா சார் ஆபீஸில் என்னைத் தேடியிருக்கிறார். அப்புறம் நான் இருக்கிற இடம் தெரிந்து, என்னை ‘சின்னத்தாயி’ படத்துக்காக ஒப்பந்தம் செய்தார்கள். ‘சின்னத்தாயி’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது ஒருமுறை சொந்த ஊருக்குப் போனேன். ‘என்னடா பண்ணுற’னு கேட்டவங்ககிட்ட, ‘படத்தில் நடிச்சிட்டு இருக்கேன்’னு சொன்னதும் யாரும் நம்பலை. அதற்கப்புறம் படம் ரிலீஸுக்குப் பிறகுதான் ஊரில் நம்புனாங்க. படம் நூறு நாள் ஓடி ஹிட் அடித்தது.

அதற்கு அப்புறம் ‘அம்மா பொண்ணு’ படத்தில் நடித்தேன். அந்த நேரத்தில் பாரதிராஜா சார் ‘கிழக்குச் சீமையிலே’ படம் எடுத்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் என் கேரக்டரில் நடிக்க முதலில் புதுமுகம் ஒருவர் ஒப்பந்தமானார். பாரதிராஜா சாருக்கு அவருடைய நடிப்பு பிடிக்கவில்லை. அப்போதுதான் பாரதிராஜா சாருக்கு நம்மக்கிட்ட ஒரு பையன் சான்ஸ் கேட்டானேனு என் ஞாபகம் வந்திருக்கு. ‘உழவன்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தேன். உடனே என்னை அழைத்து வந்து ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் நடிக்க வைத்தார்கள்.

vignesh actor

படத்தில் ‘ஆத்தங்கரை மரமே’ பாடல் நல்ல ஹிட் அடித்தது. வத்தலகுண்டு பக்கத்தில் ஓர் அருவி இருக்கும், அங்குதான் ஷூட்டிங் எடுத்தார்கள். எனக்கு இந்தப் பாட்டு கேட்கும்போதெல்லாம், பாரதிராஜா சாரோட அர்ப்பணிப்புதான் ஞாபகத்துக்கு வரும். அந்தப் பாடலின் ஷூட்டிங்கின்போது பாரதிராஜா அப்பா இறந்து விட்டார். அப்பா இறந்து நான்காவது நாள் இந்தப் பாட்டின் ஷூட்டிங் மீண்டும் ஆரம்பமானது. அப்பா இறந்திருந்தாலும், கரெக்டா ஷூட்டிங் ஸ்பாட் வந்து விட்டார் பாரதிராஜா. அதுவும் ரொமான்ஸ் பாடல் ஷூட்டிங். அவர்தான் பாடல் ஷூட்டிங்போது நடிக்க எனக்குச் சொல்லிக் கொடுத்தார்.

‘கிழக்குச் சீமையிலே’ படம் ரிலீஸான நேரத்தில் எனக்கு நிறைய படங்கள் புக் ஆச்சு. அப்போது எனக்கு வழிகாட்ட யாரும் இல்லை. எந்த டைரக்டர் படத்தை ஒப்புக்கணும், நடிக்கணும்னு அதை எல்லாம் சொல்லித் தருவதற்கு யாருமே இல்லை. ஒரு நடிகருக்கு மேனேஜர் இருக்கணும்கிற விஷயம்கூட தெரியவில்லை. அதனாலேயே நிறைய படங்களில் கமிட் ஆகிவிட்டேன். கால்ஷீட் பிரச்னையின் காரணமாக பெரிய டைரக்டர் படமெல்லாம் விட்டுவிட்டேன்.

பிரபு சாரை எனக்குப் பிடிக்கும். அவருடன் ‘உழவன்’ படத்தில் நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. எந்த பந்தாவும் இல்லாமல் நல்லா பழகுவார். பிரபு சார்தான் என்னை ‘பசும்பொன்’ படத்தில் நடிக்கக் கூப்பிட்டார். சிவாஜி சார் என்னை பார்த்துவிட்டு, ‘சின்ன பிரபு மாதிரியே இருக்க’னு சொல்லுவார்.

பாலு மகேந்திரா சார் ‘ராமன் அப்துல்லா’ படத்துக்காக என்னை கூப்பிட்டு ஒப்பந்தம் செய்தார். ”ஸாரிடா, ’வண்ண வண்ண பூக்கள்’ படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை. அந்த நேரத்தில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை”னு சொன்னார். பாரதிராஜா சார் ஷூட்டிங் ரொம்ப பரபரப்பாக இருக்கும். ஆனால், பாலு மகேந்திரா சார் ஷூட்டிங் அமைதியாக நடக்கும். காலையில் ஆறு மணிக்கு ஷூட்டிங் ஆரம்பித்தால் 12 மணிக்கு பிரேக் விட்டு விடுவார். அப்புறம் மூணு மணிக்கு மேல்தான் ஷூட் போவார். ரிலாக்ஸாக வேலை வாங்குவார். பாரதிராஜா சார் நடித்துக் காட்டுவார். இவர், அப்படியில்லை. ‘இப்படித் திரும்பு, நில்லு’னு சொல்ல மட்டும்தான் செய்வார். கோபமே பட மாட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் மட்டும் தொப்பியைக் கழற்றவே மாட்டார். அவருடைய ரூமுக்குச் சென்று அவரைப் பார்த்தால், தொப்பியை கழற்றி வைத்து விட்டு. லுங்கியுடன் உட்கார்ந்து இருப்பார். அந்த நேரத்தில் பாலு சார் அவருடைய அப்பா மாதிரி இருப்பார்.

இயக்குநர் பாலா, சீனு ராமசாமி, வெற்றி மாறன்… இவர்கள் அப்போது பாலு சாரிடம் உதவி இயக்குநராய் இருந்தார்கள். பாலு சார் எல்லோரையும் ஒரே மாதிரிதான் நடத்துவார்; நல்ல மனுஷன். ஆனால், எப்போதும் கொஞ்சம் சீரியஸாகத்தான் இருப்பார்.

‘ராமன் அப்துல்லா’ படத்தில் நடிகர் கரண் என்னுடன் நடித்திருப்பார். கரணுடன் அதற்குப் பிறகு ‘கண்ணெதிரே தோன்றினாள்’ படம் பண்ணினேன். இந்தப் படம் செய்ய முக்கியக் காரணம் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் சார்தான். அவர் என்னை ஹீரோவாக வைத்து ஒரு படம் பண்ண பிளான் வைத்திருந்தார். அந்த நேரத்தில்தான் ‘கண்ணெதிரே தோன்றினாள்’ படம் பண்ணினார். அதனால், என்னைக் கூப்பிட்டு ‘இந்தப் படத்தில் முக்கியமான ரோல் நீங்க பண்ணணும்’னு கேட்டார். அதனால் பண்ணினேன்.

Vignesh

பிரசாந்த் சார்தான் படத்தின் ஹீரோ. ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசவே மாட்டார். ஒரு வட்டத்துக்குள்ளே இருப்பார். ஆனால், அதற்குப் பிறகு நானும், பிரசாந்தும் ‘அப்பு’ படம் பண்ணினோம். அப்போது நல்லா சகஜமாகப் பழகினார். ‘அப்பு’ படத்தை வசந்த் சார்தான் இயக்கினார். அவருடைய மேக்கிங், பாலு சார் மேக்கிங் மாதிரியே இருக்கும். நாம எதாவது தப்பு பண்ணிவிட்டால் பக்கத்தில் இருக்கும் உதவி இயக்குநரைத்தான் திட்டுவார். அப்பவே புரிஞ்சிக்கணும், நம்மளைத்தான் திட்டுறார்னு.

என் கேரியரில் மறக்க முடியாத ஒரு படம் ‘சுயம்வரம்’. ஒரே நாளில்தான் ஷூட் நடந்தது. கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட படம். ஏ.வி.எம் ஸ்டூடியோவில்தான் ஷூட் நடந்தது. ரிகர்சல் எதுவும் பார்க்கவில்லை. காலையில் வந்தவுடன் டயலாக் ஷீட் கொடுப்பாங்க. எனக்கு மூணு சீன் இருந்தது. நிறைய நடிகர். நடிகைகள் நடித்து இருந்தார்கள். இந்தப் படத்தில் நான் நெகட்டிவ் கேரக்டர் பண்ணினேன். முதலில் அப்பாஸ் நடித்த கேரக்டர்தான் எனக்குக் கொடுத்தார்கள். நான்தான் நெகட்டிவ் கேரக்டர் கேட்டு வாங்கினேன்.

ஃபுல் காமெடி ரோலில் நான் நடித்த படம் ‘பொங்கலோ பொங்கல்’. ஒரு ஷாட் எடுத்தாலும் ஃப்ரேமிற்குள் குறைந்தது பத்து ஆர்டிஸ்ட்டாவது இருப்பார்கள். இந்தப் படம் பண்ணும்போதுதான் செல்போன் அறிமுகம் ஆச்சு. அப்போதெல்லாம் நான் கால் பண்ணினாலும் நமக்கு கால் வந்தாலும் காசு பிடிப்பார்கள். இந்த யூனிட்ல வடிவேலுக்கிட்டதான் செல் இருந்தது. அவரிடம் செல்போன் கேட்டால் கொடுக்கவே மாட்டார். தலை தெறிக்க ஓடிவிடுவார். யூனிட்டே கலகலப்பாக இருக்கும். எனக்கு சிலம்பம் தெரியும். அதனால் படத்தில் சிலம்பம் வைத்தே ஒரு ஃபைட் சீன் இருந்தது.

நிறைய நடிகர்களுடன் நடித்திருந்தாலும், எனக்கு ரஜினிகூட நடிக்கவில்லையே என்ற வருத்தம் எனக்குள் உண்டு. ரஜினியின் ‘அருணாச்சலம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதுவும் ரஜினியின் தம்பியாக. ராகேந்திரா திருமண மண்டபத்திற்கு போய் அட்வான்ஸ் எல்லாம் வாங்கி விட்டேன். அந்த நேரத்தில் கால்ஷீட் பிரச்னையின் காரணமாக நடிக்க முடியவில்லை. அதை நினைத்து நிறைய நேரம் வருத்தப்பட்டிருக்கிறேன்” என்றவரிடம், ”சில ஆண்டுகளாக சினிமாவில் பார்க்க முடியவில்லையே’’ என்று கேட்டோம்.
”இடையில் படங்கள் இல்லாத காரணத்தால் பிசினஸில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். லேடீஸ் ஹாஸ்டல், ஜென்ஸ் மேன்சன் நடத்திக் கொண்டிருக்கிறேன். சொந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்கிறேன். அப்புறம் ‘விக்னேஷ் மக்கள் இயக்கம்’னு ஓர் இயக்கம் தொடங்கியிருக்கிறேன். பழக்குடி மக்களின் வாழ்வுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். இதை வைத்து அரசியலுக்கு வர மாட்டேன். மக்கள் சுய மரியாதையுடன் வாழ வேண்டும்; அதற்காகதான் தொடங்கினேன்.

என் வாழ்க்கையில் இடையில் சில குடும்ப பிரச்னைகள் இருந்தது. ‘அவன், அவள்’ னு ஒரு படம் தயாரித்தேன். அதில் கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. அதனால், வீட்டில் கொஞ்சம் பிரச்னை ஏற்பட்டது. பணம், உறவுகள் இடையே விரிசலை ஏற்படுத்தி விட்டது. இப்போது எல்லா பிரச்னையும் தீர்ந்து விட்டது. ஒரு மகன், மகள் இருக்காங்க; படிச்சிட்டு இருக்காங்க. அடிபட்டுதான் மேலே வந்ததால் வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொண்டேன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பா.விஜய் இயக்கத்தில் அவரோடு சேர்ந்து ‘ஆருத்ரா’னு ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். யுவன் ஷங்கர் ராஜா மியூசிக். ஒரு மெயின் ரோல் செய்திருக்கிறேன். இதற்கு அப்புறம் நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்” என்றவர் தன் அம்மாவைப் பற்றிச் சொல்கிறார்.

’’என் அம்மாவை பார்க்க வேண்டுமென்ற ஆசை இப்போதும் இருக்கிறது. அதனால் அவர்களை இன்னும் தேடிக் கொண்டு இருக்கிறேன். என்னிடம் ஒரே போட்டோ இருக்கிறது. அதை வைத்துக்கொண்டுதான் அலைகிறேன். ‘மகாநதி’ படத்தில் கமல் எப்படி தன் மகளை தேடி அலைவரோ அதே மாதிரி என் அம்மாவைத் தேடி அலைகிறேன். என் அம்மா ஹைதராபாத்தில் இருப்பதாக தகவல் வந்தது. ஒரு வாரம் ஹைதராபாத்தின் எல்லா வீதிகளிலும் தேடி அலைந்தேன். ஆனால், கண்டுபிடிக்கவே முடியவில்லை. என் அம்மா என்னை விட்டுச் சென்றதால் அவங்க மேல் எனக்குக் கோபம் வரவில்லை. அவங்க ஏன் என்னைவிட்டுப் போனார்கள் என்பதே எனக்குத் தெரியாது. அவர்களுக்கு என்ன பிரச்னையோ. எனக்கு என் அம்மாவை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும். அவ்வளவுதான்.

vijnesh

வாழ்க்கையில் பல வலிகளைத் தாண்டி வந்தவன் நான். என் வாழ்க்கையின் சோகமான காலகட்டத்தின்போதெல்லாம் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றியிருக்கிறது. சினிமாவில் பிஸியாக இருந்த எனக்கு ஒரு காலத்தில் சினிமா வாய்ப்பே வரவில்லை. ரொம்ப வருத்தப்பட்டு இருக்கிறேன். அந்தக் காலம் எல்லாம் ரொம்ப கொடுமையான காலகட்டம். திருமணம் முடிந்து அப்போதுதான் குழந்தை பிறந்திருந்தது. ரொம்பக் கஷ்டப்பட்டேன். பிசினஸும் நஷ்டம். ஆனால், அந்த வலிகள் எல்லாத்தையும் தாண்டி வந்ததால்தான் வாழ்க்கையில் இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறேன். எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை முடிவல்ல. அந்த வெற்றிடத்தைத் தாண்டி வந்துவிட்டால் எல்லாம் நல்லதாக நடக்கும்’’ என்று புன்னகை செய்கிறார் நடிகர் விக்னேஷ்.

Advertisement