தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்து அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய். பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவர் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் தான் தமிழக வெற்றிக் கழகம் என்று விஜய், தன் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். இதனால் நிர்வாகிகள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் உற்சாகம் அடைந்து விட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று புதிய செயலியையும் உருவாக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார். அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை பறக்க விட்டு ஒத்திகை பார்த்து இருந்தார்.
விஜய் அரசியல்:
அதோடு பனையூரில் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் 5000 பேர்களை வைத்து கட்சி கொடியை ஏற்ற போலீசாருக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், போலீஸ் அனுமதி தர மறுத்ததால், விஜய், 250- 300 பேரை மட்டும் வைத்து கட்சி கொடியை ஏற்ற முடிவு செய்து இருந்தார். பின் இது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். கடந்த வாரம் விஜய் அவர்கள் தன்னுடைய கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை ஏற்றியிருந்தார்.

கொடி குறித்து விஜய் சொன்னது:
கொடியை ஏற்றுவதற்கு முன்பு உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி கொடியை ஏற்றி இருந்தார். அந்த கொடியில் வாகை மலரும், இரு பக்கங்களில் யானை படமும் இடம் பெற்றிருக்கிறது. பின் மேடையில் விஜய், இதை நான் கட்சிக்கொடியாக மட்டும் பார்க்கவில்லை. தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான கொடியாகவும் பார்க்கிறேன். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என்று கூறியிருந்தார். பலரும் விஜய்யின் கட்சி கொடியை பாராட்டி வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

மாநாடு குறித்த தகவல்:
தற்போது மாநாட்டிற்கான வேலையை தான் ஆனந்த் தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் மாநாடு நடைபெற இருக்கும் இடம் குறித்த அப்டேட் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தான் தமிழக வெற்றிக் கழகத்தினுடைய முதல் மாநாடு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த மாநாட்டிற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு விழுப்புரம் டி.எஸ்.பியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆன்ந்த் அனுமதி கேட்டு மனு கொடுத்து இருக்கிறார். அதில் முதல் மாநாடு செப்டம்பர் 23-ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.

விஜய் திரைப்பயணம்:
தற்போது விஜய் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் லைலா, மீனாட்சி, பிரசாந்த், பிரபுதேவா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். தற்போது இந்த படத்தினுடைய இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. வருகிற செப்டம்பர் ஐந்தாம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதை அடுத்து விஜய் அவர்கள் தளபதி 69 என்ற படத்தில் நடிக்கிறார். இதுதான் இவருடைய கடைசி படம்.






