தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பயோபிக் படம் உருவாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், பல துறைகளில் சாதனை படைத்த பிரபலங்கள் என பலருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் கூட முன்னாள் ஆந்திர மாநிலம் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தை ‘யாத்ரா 2’ என்ற பெயரில் எடுத்திருந்தார்கள்.
அதேபோல், பிரதமர் மோடியின் பயோபிக் படம் எடுக்க இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாற்றை பயோபிக் படமாக எடுக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி பலருமே அறிந்திருப்பார்கள். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி இருந்தார்.
அண்ணாமலை குறித்த தகவல்:
அதன்பின் தான் இவர் பாஜகவில் இணைந்து தமிழகத்தின் தலைவர் ஆனர். இவர் எப்படி போலீஸ் அதிகாரி ஆனார்? அதற்கு பிறகு எப்படி அரசியலுக்குள் நுழைந்தார்? அரசியலுக்கு வந்ததுக்கு பிறகு இவர் செய்த விஷயங்கள் என்ன? என்பதை மையமாக வைத்து தான் இந்த பயோபிக் படத்தை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பயோபிக் படத்தில் அண்ணாமலை கதாபாத்திரத்தில் நடிகர் விஷால் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை பயோபிக் படம்:
காரணம், கிட்டத்தட்ட விஷால், அண்ணாமலை போலவே இருப்பதால் அவருடைய கதாபாத்திரத்திற்கு செட்டாகும் என்று கூறப்படுகிறது. இது குறித்து விஷால் இடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், கிட்டத்தட்ட உறுதியான நிலையில் இருப்பதாகவும் பிரபல தயாரிப்பு நிறுவனம் பேட்டியில் கூறியிருக்கிறது. இந்த படத்தை ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகி இருந்த ‘ரிபெல்’ படத்தை இயக்கிய நிகேஷ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
விஷால் அரசியல்:
கூடிய விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம். இன்னொரு பக்கம் விஷாலும் அரசியலுக்கு வருவதாக பேட்டிகளில் கூறி வருகிறார். அந்த வகையில் இவர் ஆர்கே நகர் இடைத் தேர்தலின் போது வேட்பு மனு தாக்கு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவருடைய மனு நிராகரிக்கப்பட்டு இருந்தது. அதற்குப் பின் இவர், கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவேன் என்றும் கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஷாலிடம், இபிஎஸ்? ஓபிஎஸ்? ஆ என்ற கேள்வி எழுப்பி இருந்தார்கள்.
விஷால் கொடுத்த விளக்கம்:
அதற்கு அவர் ஐபிஎஸ் என பதிலளித்திருந்தார். இதற்கு பலருமே, ஐபிஎஸ் என்று இவர் பாஜக தலைவர் அண்ணாமலையை தான் குறிப்பிடுகிறார் என்றெல்லாம் கூறியிருந்தார்கள். பின் இது தொடர்பாக விஷால், நான் வணங்கும் அந்த ஐபிஎஸ்க்கு தான் சல்யூட் அடிப்பேன். என்னுடைய நண்பன் பெயர் ஐ.பி செந்தில்குமார். அவருடைய மனைவி மெர்சி. எனக்கு தங்கை மாதிரி. அதனால் தான் ஐபிஎஸ் என்று சொன்னேன் என்று விளக்கம் தந்திருந்தார்.