பாலாவின் ‘சேது’ பட அனுபவம் குறித்து நடிகை அபிதா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சேது’ திரைப்படம் விக்ரம் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. விக்ரமிற்கு ‘சீயான்’ என்ற பட்டப்பெயரை கொடுத்தது இந்த படம் தான். இந்த படத்தில் அபிதா அவர்கள் குஜலாம்பாள் என்ற கதாபத்திரத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலம் ஆனார்.
அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரௌண்டு வருவார் என்று எதிர்பார்த்தும் பெரிய ஹிட் படங்கள் அமையவில்லை. சேது படத்திற்கு பின்னர் இவர் தமிழில் சீறி வரும் காலை, பூவே பெண் பூவே போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்பு குறைந்தவுடன் அபிதா சீரியல் பக்கம் திரும்பினார். சன் தொலைக்காட்சியில் இவர் நடித்த ‘திருமதி செல்வம்’ தொடர் மெகா ஹிட் அடைந்தது. அதன் பின்னர் ஒரு சில தொடர்களில் நடித்து இருந்தார்.
அபிதா குறித்த தகவல்:
இதற்கிடையில் இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து இருந்தார் அபிதா. கடைசியாக இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘மாரி’ என்ற தொடரில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாலா குறித்து அபிதா சொன்னது, சேது படம் இவ்வளவு பெரிய வெற்றியை கொடுக்கும் என்று யாருமே நினைத்து பார்க்கவில்லை. அந்தப் படத்தில் நடிக்கும் போது எனக்கு டீன் ஏஜ் வயது. புதுமுகம் தேவை என்று பாலா சார் தேடிக் கொண்டிருந்தார். கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி நிறைய பேரை ஆடிஷன் பண்ணி இருந்தார்கள்.
நடிகை அபிதா பேட்டி:
பின் என் போட்டோவை பார்த்த பிறகு என்னை ஆடிஸன் அழைத்திருந்தார்கள். என்னை டயலாக் எல்லாம் பேச வைத்து நிறைய போட்டோ எடுத்தார்கள். அந்த சமயத்தில் நான் சீரியலில் நடித்து இருந்தேன். அதேபோல் ஒரு படத்தில் செகண்ட் ஹீரோயினாக கமிட்டாகி இருந்தேன். ஆனால், அவர் புது முகம் தான் தேவை என்று தேடிக்கொண்டிருந்தார். இதனால் நான் நடிக்கிறேன் என்ற உண்மையை சொல்லிவிட்டேன். ஒரு மாதம் கழித்து, தேவதை படத்தில் நடித்த கீர்த்தி ரெட்டியை சேது படத்தில் ஹீரோயினியாக செலக்ட் பண்ணிட்டாங்க என்று சொன்னார்கள்.
சேது பட வாய்ப்பு:
ஒரு வாரம் சூட்டிங் எல்லாம் போய் இருந்தது. அதற்கு பிறகு ஏதோ ஒரு காரணத்தினால் அவர் விலகி விட்டார். அதற்கு பிறகுதான் என்னை அழைத்தார்கள். அந்த கதாபாத்திரத்திற்கு யாருமே செட்டாகவில்லை, நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று அக்ரிமென்டில் சைன் எல்லாம் வாங்கினார்கள். நானும் ஓகே சொல்லி சூட்டிங் போனேன். மேலும், படமெல்லாம் முடிந்த பிறகு விநியோகஸ்தர்களுக்கு பிரிவியூ ஷோ போட்டு காண்பித்தார் பாலா. கிளைமாக்ஸை பார்த்து பலரும் கிண்டல் பண்ணி இருந்தார்கள். ஹீரோ மெண்டல், ஹீரோயினி செத்துடுவாள் என்றால் யாரும் படம் பார்க்க வரமாட்டாங்க. அதனால் ரெண்டு பேரும் சேருவது மாதிரி கிளைமாக்ஸை மாற்றுங்கள் என்று சொன்னார்கள். ஆனால், பாலா சார் இந்த கதைக்கு இப்படி வைத்தால் தான் சரியாக இருக்கும் என்று உறுதியாக இருந்தார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலா:
அதோடு படம் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை, இந்த கிளைமாக்ஸ் தான் வைப்பேன் என்று இருந்தார். அதே மாதிரி மக்கள் அந்த கிளைமாக்ஸை ஏற்றுக் கொண்டார்கள். மேலும், பாலா சார் சூட்டிங் ஸ்பாட்டில் கோபப்படுவது உண்மைதான். அறிமுக பாடலுக்காக சூட்டிங்கில் சில ஸ்டெப்ஸ் எனக்கு சரியாக வரவில்லை. அதற்கு பாலா சார், உன்னை எல்லாம் ஹீரோயினா போட்டேன் பாரு என்ன செருப்பால அடிக்கணும்னு ரொம்ப திட்டினார். ரொம்ப அசிங்கமா போய்விட்டது. எல்லோரும் முன்னாடியும் திட்டியதால் நான் கடுப்பாகி அழுது கொண்டே அம்மாவிடம் ஷூட்டிங்க் போக மாட்டேன் என்று சொன்னேன். என் அக்கா சமாதானம் செய்து, பாலா சாரிடம் சாரி கேட்டு நடித்தேன். அவரும் அறிவுரை செய்தார். சேது படத்திற்கு பின் அவரை பார்க்கவும், பேசவும் முடியவில்லை என்று பல விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்திருந்தார்.