"முந்தைய நிலைமைக்கு இப்போ ரொம்பப் பரவாயில்லை. முன்னாடி உடல்நிலை சரியில்லாமல், மருத்துவச் செலவுக்கு ரொம்ப சிரமமா இருந்துச்சு. அப்போதான் என்னைப் பேட்டி எடுத்து, ஆனந்த விகடனில் வெளியிட்டீங்க. நடிகர் விஷால் உதவி செய்றதா சொன்னார். அதன்படி, அவரின் தனிப்பட்ட முறையில் மாதந்தோறும் 2,500 ரூபாயும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் 1,500 ரூபாயும் கிடைக்குது.
இப்படி நாலு மாதமாக உதவித்தொகை கிடைச்சிருக்கு. இருதரப்பினருக்கும் ரொம்ப நன்றி. இருதயம், கண், கல்லீரல், மூட்டுவலினு பாதிக்கப்பட்டிருக்கேன். இதுக்காக, தனித்தனியே மூணு டாக்டர்கள்கிட்ட சிகிச்சைக்குப் போறேன்.
மருத்துவருக்கு, மாத்திரைக்கு, போக்குவரத்துக்குனு மாதந்தோறும் 6,000 ரூபாய் வரை செலவாகுது. பொருளாதார நெருக்கடி மற்றும் உடல்நலப் பிரச்னைகளால் ரொம்பவே வேதனையில் இருந்தேன். இப்போ, கிடைக்கும் 4,000 ரூபாயால் ஓரளவுக்கு நிம்மதியாக இருக்கேன். சாப்பாடு, வீட்டு வாடகை என மற்ற செலவுகளை என் ரெண்டு பிள்ளைகள் கவனிச்சுக்கிறாங்க. தனிமையில் வாழும் எனக்கு, தோழியும் நடிகையுமான கோவை சரளா நேரில் சந்திச்சு ஆறுதல் சொன்னாங்க. சினிமா நண்பர்களாவது அப்பப்போ சந்திச்சு, ஆறுதலா சில வார்த்தைகள் பேசினால் சந்தோஷப்படுவேன். என் மனப்பிரச்னையும் சரியாகும்" என உருக்கமாகப் பேசுகிறார், நடிகை பிந்துகோஷ்.




