தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த கெளதமி கடந்த பல வருடங்களாக பா.ஜ.க கட்சியில் இணைந்து கட்சிப்பணியை ஆற்றி வந்தார். இப்படி ஒரு நிலையில் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தில் தான் மிகுந்த வேதனையுடன் கட்சியில் இருந்து விலகுவதாகவும், பாஜக வளர்ச்சிக்காக கடந்த 25 ஆண்டுகளாக நேர்மையுடன் உழைத்ததாகவும் குறிப்பிட்டுள்ள அவர் தனக்கு முதலில் சீட் தருவதாக சொல்லி, பின்னர் கடைசி நேரத்தில் சீட் கொடுக்கப்படவில்லை என்றும் பாஜகவின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தும் எனக்கு கட்சியில் ஆதரவு இல்லை என்றும் வேதனையுடன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவில் இருந்து நான் விலகுகிறேன். மிகுந்த மன வேதனை, ஏமாற்றத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளேன். கட்சியில் இணைந்து 25 ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சிகாகபணியாற்றி இருக்கிறேன். என் வாழ்வில் இக்கட்டான சூழல் ஏற்பட்டபோதும் கூட கட்சி உறுப்பினராக என் கடமையை செய்திருக்கிறேன்.
கற்பனை செய்ய முடியாத அளவிற்கான இன்னலில் இருக்கிறேன். இப்படி ஒரு நெருக்கடியான சுழலில் கூட கட்சியிடமிருந்தோ, கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களிடமிருந்தோ எனக்கு ஆதரவு அளிக்கவில்லை. மேலும், கட்சியில் உறுப்பினர்கள் சிலர் நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் மற்றும் என்னை ஏமாற்றியவர்களுக்கு தொடர்ந்து உதவி வருதாக அறிந்தேன்.

நான் என்னுடைய 17 வயதில் இருந்து வேலை செய்து வருகிறேன். சினிமா, தொலைக்காட்சி, ரேடியோ, டிஜிட்டல் ஊடகம் என 37 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். எனக்காகவும் என் மகளின் எதிர்காலத்திற்காகவும் கடினமாக உழைத்தால்தான் பொருளாதார ரீதியிலான பாதுகாப்பை பெற முடியும் என வாழ்நாள் முழுவதும் உழைத்திருக்கிறேன். என் மகளும் நானும் பாதுகாப்பான ஒரு வாழ்க்கைக்கு தயாராகி வந்த காலகட்டத்தில் சி.அன்பழகன் என்னுடைய பணம், நிலம், அதற்கான ஆவணங்களை அனைத்தையும் அபரித்து மோசடி செய்தார்.
20 ஆண்டுகளுக்கு முன், என் பெற்றோரை இழந்து, சின்னஞ்சிறு என் மகளோடு, நான் தனியாளாக இருந்தபோது அக்கறை காட்டும் பெரிய மனிதராக அழகப்பனும் அவரது குடும்பத்தினர் என் வாழ்வில் வந்தனர். அவர் மீதிருந்த நம்பிக்கையில் என்னுடைய நிலத்தை விற்று தருகிறேன் என்று சொன்னதால் ஆவணங்கள் அனைத்தையும் வழங்கினேன். அப்போது அவர் என்னிடம் பல்வேறு பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டார். அப்போது அந்தப் பத்திரங்களை தவறான வழியில் பயன்படுத்த மாட்டேன் என்று அழகப்பன் எனக்கு உத்தரவாதம் கொடுத்திருந்தார்.

ஆனால், என்னை ஏமாற்றும் நோக்கத்தில் அந்தப் பத்திரங்கள் மூலம் போலி ஆவணங்களை தயாரித்த அழகப்பனும் அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினரும், இடங்களை என்னிடமிருந்து அபகரித்துவிட்டனர். சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான இடங்களை என்னிடமிருந்து அழகப்பன் மற்றும் அவரின் குடும்பத்தினர் ஏமாற்றி இருப்பது எனக்கு தெரிந்தது. இது குறித்து அழகப்பனிடம் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்.
எனவே எனக்குச் சொந்தமான இடங்களை மீட்டுத் தருவததோடு அழகப்பன் மற்றும் அவரின் குடும்பத்தினர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். என் கடின உழைப்பினால் ஈட்டிய அவரிடமிருந்து பணத்தையும் ஆவணங்களையும் மீட்க சட்ட ரீதியில் ஒரு இந்திய குடிமகளாக அனைத்தையும் முயற்சிக்கிறேன். அழகப்பன் மீது புகார் அளித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் பா.ஜ.க. எனக்கு போட்டியிட வாய்ப்பளிப்பதாக தெரிவித்தது. நானும் அந்த தொகுதியில் கட்சியை வலுப்படுத்த அர்பணிப்புடன் பணியாற்றினேன். ஆனால், கடைசி நேரத்தில் தொகுதி வேட்பாளராக பட்டியலில் என் பெயரே இல்லை. கட்சி பொறுப்பில் இருந்தவரை என் கடமையை சரியாக செய்திருக்கிறேன். 25 ஆண்டுகளாக கட்சிக்கு அர்ப்பணிப்புடன் என் பங்களிப்பை அளித்திருக்கிறேன். ஆனால், கட்சியில் இருந்து எனக்கு எந்த ஆதரவும் அளிக்கவில்லை என்பதை உணர்ந்திருக்கிறேன் ' என்று குறிப்பிட்டுள்ளார்.






