ஹேமா கமிட்டி குறித்து நடிகை சன்னி லியோன் பேசி இருக்கும் விஷயம் தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாகவே சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மலையாள சினிமாவிலும் இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் நடப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று மாநில அரசு அமைந்திருந்தது.
பின், தொடர்பாக விசாரணையும் நடத்தி இருந்தார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயானிடம் இது தொடர்பான 233 பக்க அறிக்கை ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி தான் ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டு இருந்தது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
ஹேமா கமிட்டி:
மேலும், கேரளா மட்டும் இல்லாமல் மற்ற திரை உலகிலும் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக சில நடிகைகள் அடுத்தடுத்து புகார்களை முன்வைத்து வருகின்றனர். அதோடு மலையாள சினிமாவில், பாலியல் துன்புறுத்தல் மற்றும் முறைகேடு புகார்கள் என்று 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் நடிகர்கள் சித்திக், இடவேளை பாபு, கொல்லம் எம்.எல்.ஏ, முகேஷ், மணியம் பிள்ளை ராஜு, இயக்குனர் ரஞ்சித், நிவின் பாலி என்று பலரின் மீது பாலியல் வழக்குகளை பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகம்:
அதேபோல் எல்லா திரைத்துறையிலும் இருந்து ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நேர்ந்தால் அது குறித்து தைரியமாக புகார் அளிக்க சமீபத்தில் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு நடிகை ரோகினி குழு தலைவராக பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோல் மற்ற திரையுலகிலும் தங்களுக்கு ஒரு குழு வேண்டுமென்று நடிகைகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
‘பேட்டராப்’:
இந்நிலையில் நடிகை சன்னி லியோன் ஹேமா கமிட்டி குறித்து பேசி உள்ளார். அதாவது நடிகர் பிரபுதேவா, சன்னி லியோன், விவேக் பிரசன்னா, ரமேஷ் தில்லுக்கு மற்றும் பலரது நடிப்பில் ‘பேட்டராப்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் ‘பேட்டராப்’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி கேரளாவில் உள்ள கொச்சியில் நடைபெற்றது. அப்போது ஹேமா கமிட்டி குறித்த கேள்விக்கு பதில் அளித்த சன்னி லியோன், இது குறித்து நான் என் சொந்த அனுபவத்தில் இருந்து தான் பேச முடியும். தற்போது நடிகைகள் சொல்வது போல் எந்த தொல்லைகளையும் நான் சந்திக்கவில்லை. ஒரு படத்தில் நடிக்க எனக்கு அதிக சம்பளமோ அல்லது வேறு எதுவும் வேண்டும் என்றால் அதை பெற நான் குரல் கொடுத்துள்ளேன்.
ஹேமா கமிட்டி குறித்து சன்னி லியோன்:
அதுபோல் எல்லோரும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மேலும், நமக்கு சரி என்று படுவதை மட்டும் செய்ய வேண்டும், தவறு என்று தெரிந்தால் நோ சொல்லிவிட்டு நகர வேண்டும். நமது எல்லைகளை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். திரைத் துறையில் எனக்கு பல கதவுகள் மூடப்பட்டுள்ளது. ஆனால் என் வேலையை நான் மனதார நம்பினேன், அதனால் மூடப்பட்ட கதவுகள் எனக்கு பெரிய பிரச்சினையாக தெரியவில்லை. இவ்வளவு பெரிய உலகில் ஒரு வாய்ப்பு இல்லாவிட்டால் என்ன, நமக்கு 100 வாய்ப்புகள் தேடி வரும்’ என்று கூறியுள்ளார்.