சமீபகாலமாகவே மக்கள் மத்தியில் பிரபலமாகி மறைந்த பல நடிகர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது மறைந்த நடிகையும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்துள்ளார். இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் தற்போது வெளிவந்து உள்ள படம் தான் தலைவி. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அரவிந்த் சுவாமி, சமுத்திரகனி, நாசர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பள்ளிப்பருவம் முதல் தொடங்கி அரசியலில் நுழைந்தது பிறகு அவர் முதல்வராக பதவியேற்று நாட்டை ஆண்டது என அனைத்துமே இயக்குனர் அழகாக எடுத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தை பார்த்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து உள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது, ஒரு பெண் எப்படி வாழ்க்கையில் துணிவுடன் வாழ்ந்து சாதிக்க வேண்டும் என்று தலைவி படம் காட்டுகிறது.
இதையும் பாருங்க : வடிவேல் பாலாஜியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் – கல்லறை புகைப்படத்தை பகிர்ந்து உருகிய விஜய் டிவி பிரபலங்கள்.
இந்த படம் மிகவும் பாராட்டுக்குரிய ஒன்று. அதே நேரத்தில் படத்தில் ஓரிடத்தில் எம்ஜிஆர் பதவிக்கு ஆசைப்பட்டது போல காட்சி வருகிறது. எம்ஜிஆர் என்றைக்கும் பதவிக்காக ஆசைப்பட்டது கிடையாது. அப்படி படத்தில் வரும் காட்சி உண்மையானதல்ல. அதை உடனடியாக நீக்க வேண்டும். அதேபோல் தன் படங்கள் மூலமும் பாடல்களின் மூலமும் ஜெயலலிதா தான் அதிமுகவுக்கு தனக்குப்பின் தலைமை தாங்குபவர் என்பதை உணர்த்தியவர் எம்ஜிஆர். ஆனால், அப்படிப்பட்டவர் ஜெயலலிதாவை அவமதிப்பது போன்ற ஒரு காட்சி உள்ளது. அதையும் நீக்க வேண்டும்.
நடக்காத சம்பவங்களை படத்தில் வைத்திருக்கக் கூடாது. இது மிகவும் தவறான ஒன்று. இதை பார்ப்பவர்கள் மனதில் வெவ்வேறு எண்ணங்கள் உருவாக வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல் திமுக எங்களுக்கும், எங்கள் தலைவிக்கும் கொடுத்த தொல்லைகளைப் படத்தில் சொல்லவே இல்லை. வரலாற்றுப் படம் என்றாலே அதையும் சொல்லி இருக்க வேண்டும். அதை படத்தில் சொல்லப்படவில்லை இவையெல்லாம் சொல்ல மறந்த கதைகள் என்று கூறியுள்ளார்.