தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் தங்களின் படங்களின் பாடியிருக்கும் பாடல் விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே பிரபல நடிகர்கள் தங்களுடைய படங்களில் பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். குறிப்பாக, விஜய் தன்னுடைய படத்தில் ஒரு பாடலையாவது பாடி விடுவார். இவருடைய பாடலுக்காகவே காத்திருக்கும் ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
விஜய் மட்டுமில்லாமல் தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற பல நடிகர்களும் தங்களுடைய படங்களில் ஒரு பாடலையாவது பாடுகிறார்கள். ஆனால், பல நடிகர்கள் நடிப்பை தாண்டி படங்களில் பாடுவது, இசை அமைப்பது என எதுவும் கிடையாது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் தங்களின் படத்தில் பாடி இருக்கும் பாடல் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது.
அஜித்:
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி இருந்த துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது இவர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்தது.
இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும், அஜித் அவர்கள் தான் நடித்ததிலேயே ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் பாடியிருக்கிறார். எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளிவந்த வாலி படத்தில் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து நடனமாடிய ‘ஓ சோனா ஓ சோனா’ என்ற பாடலை தான் அஜித் பாடியிருக்கிறார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அரவிந்த் சுவாமி:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அரவிந்த் சுவாமி. தமிழ் சினிமா உலகில் நுழைந்த ஆரம்ப காலத்தில் இவர் ஹீரோவாக பல படங்களில் நடித்திருக்கிறார். பின் இடையில் இவர் சிறிய பிரேக் எடுத்துக் கொண்டு சமீபகாலமாக இவர் படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் இயக்குனர் லட்சுமணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி இருந்த போகன் படத்தில் ‘கூடுவிட்டு கூடு’ என்ற பாடலை ஜோதி நூரன் உடன் இணைந்து பாடியிருக்கிறார். ஆனால், இந்த பாடல் பெரிய அளவு வரவேற்கப்படவில்லை.
பிரசாந்த்:
தமிழ் சினிமா உலகில் டாப் ஸ்டார் நடிகராக திகழ்பவர் பிரசாந்த். ஒரு காலத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இடையில் இவர் படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது அந்தகன் என்ற படத்தின் மூலம் பிரசாந்த் மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்திருக்கின்றது. மேலும், இவர் கடந்த 2000-ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளியாகி இருந்த படத்தில் ‘வா என்றது’ என்ற அறிமுக பாடலை பாடியிருந்தார். அதற்குப் பிறகு இவர் எந்த படத்தில் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.