நயன்தாரா திருமணத்தில் அஜித் வருவார் என்று சொன்னதால் அவரை பாரக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் பேசப்பட்டு இருக்கும் ஒரே விஷயம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் தான். இவர்கள் பல ஆண்டு காலமாக தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக வலம் வந்துக் கொண்டிருந்தவர்கள். இடையில் இவர்கள் யாருக்கும் தெரியாமல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். இது குறித்து நயன்தாராவே நிகழ்ச்சி ஒன்றில் சொல்லி இருந்தார்.
பின் இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகிலும், வெளி உலகிலும் வலம் வந்து கொண்டிருந்தாலும் இருவரும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள். இருந்தாலும் இவர்களின் திருமணம் எப்போது? என்பது தான் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து இருந்த ஒரு விஷயம். இதற்காக இருவரும் திருச்சியில் உள்ள தங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று இருந்தார்கள். பலரும் எதிர்பார்த்தது போல இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெறவில்லை.
மெஹந்தி நிகழ்ச்சி:
மேலும், இவர்களின் திருமண விழா நேற்று முன் இரவு மெஹந்தி நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. அந்த விழாவில் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 100 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். அதுமட்டும் இல்லாமல் அந்த நிகழ்ச்சியில் பல வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. அதே போல் வந்தவர்களுக்கு நயன்தாரா- விக்னேஷ் சிவன் புகைப்படம் ஸ்டிக்கர் ஒட்டிய தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டிருக்கிறது. நேற்று வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது.
விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் :
மேலும், நயன்தாராவின் திருமணத்திற்காக மும்பையிலிருந்து மேக்கப் ஆர்டிஸ்ட் வந்து இருந்தார். குறிப்பாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்டவர்களுக்கு மேக்கப் ஆர்டிஸ்ட் பணிபுரிந்தவர் தான் நயன்தாராவுக்கும் மேக்கப் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. கடற்கரை ஓரம் திறந்தவெளியில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் காலை 9 மணி முதல் இந்து பாரம்பரிய முறைப்படி மணமகள் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினார்.
திருமணத்தில் போட்ட கட்டுப்பாடு:
இந்த திருமணத்தில் இரு வீட்டாரும், அவருடைய நெருங்கிய நண்பர்களும், சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். திருமணத்தில் வெளியாட்கள் யாரும் பங்கேற்க அழைப்பில்லை. திருமணத்திற்கு வருபவர்கள் அழைப்பேசி, கேமரா உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை. முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். மேலும், திருமணத்திற்கு வருபவர்கள் பாரம்பரிய உடை அணிந்து வர வேண்டும் என்று மணமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
ஏமாற்றத்துடன் திரும்பிய சிறுவன் :
ஆகையால், பெரும்பாலனவர்கள் அப்படியே பங்கேற்று இருந்தார்கள். திருமணம் நடைபெறும் கடற்கரை வீதியை சுற்றி 100க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த திருமணத்தில் அஜித் கலந்துகொள்வார் என்று ஆசையுடன் இருந்த நரிக்குறவ சிறுவன் ஒருவன் நுழைவு வாயிலில் அஜித்தை மட்டும் பார்த்துவிட்டு செல்கிறேன் என்று கூறிஅடம்பிடித்து பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பி இருக்கிறார்.