தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அமரன்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. மேலும், மறைந்த மேஜர் முகந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளியான இப்படம் டாக் ஆப் தி டவுன் ஆக உள்ளது. அமரன் திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர்.
விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் அமரன் திரைப்படம் சாதனை படைத்து வருகிறது. மேலும், இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி, சிவகார்த்திகேயனுக்கு தனது தொலைபேசி எண்ணை பேப்பர் ஒன்றில் எழுதி கசக்கி அவரிடம் தூக்கி வீசுவார். படத்தில் அந்த தொலைபேசி எண் சரியாக தெரியவில்லை என்றாலும், அதை எழுதி வைத்துக்கொண்டு பல ரசிகர்கள் அந்த நம்பருக்கு அழைத்து பேசுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ, அந்த நம்பருக்கு சொந்தக்காரரான சென்னையைச் சேர்ந்த வி.வி. வாகீசன் என்ற இளைஞர் தான்.
அமரன் படம் :
ஒரு கட்டத்தில் அழைப்புகளை எதிர்கொள்ள முடியாமல் படத்தின் இயக்குனருக்கும், சிவகார்த்திகேயனுக்கும் சமூக வலைதள பக்கத்தில் வாகீசன் மெசேஜ் அனுப்பி இருந்தார். ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக வாகீசன் பதிவும் போட்டு இருந்தார். இதனால் அந்த மாணவன் வாகீசன், அமரன் திரைப்படத்தினால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 1.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இந்த நிலையில் இது போன்ற அனுபவம் தனக்கும் ஏற்பட்டது என்று இயக்குனர் வசந்த் பாலன் கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சண்டைக்கோழி படத்தின் ப்ரோமோஷனின் போது நடந்த நிகழ்வை தான் தற்போது இயக்குனர் வசந்த் பாலன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.
வசந்த பாலன் பதிவு:
அதில், இயக்குனர் லிங்குசாமியால் எனக்கு அப்படி ஒரு சோதனை நடந்தது. சண்டக்கோழி படம் வெளி வருவதற்கு முந்தைய நாள் சிறப்பு காட்சியையும், முதல் நாள் காட்சியையும் பார்த்த நண்பர்கள், சண்டைக்கோழி திரைப்படம் பத்து ரன் என்று பாராட்டி எனக்கு செய்தி அனுப்பி இருந்தார்கள். இதை நான் லிங்குவிற்கு அனுப்பி இருந்தேன். மாபெரும் வெற்றிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் அனுப்பினேன். லிங்குவும் நன்றி தெரிவித்து பதிவிட்டார். அந்த சமயத்தில் நான் மதுரையில் வெயில் படத்தினுடைய படப்பிடிப்பில் இருந்தேன். பயங்கர மக்கள் கூட்டம் இருக்கும் பகுதியில் படப்பிடிப்புகள் நடந்து கொண்டு இருந்தது. அந்த வேலையில் நான் பிஸியாக இருந்தேன்.
சண்டக்கோழி விவகாரம்:
அப்போது காலை 7 மணியிலிருந்து சம்மந்தம் சம்மந்தமில்லாமல் நம்பர்களிருந்தே எனக்கு போன் வந்து கொண்டே இருந்தது. நீங்கள் நடிகர் விஷாலா? இயக்குனர் லிங்குசாமியா? என்று விடாமல் அடித்துக் கொண்டே இருந்தார்கள். என்னால் ஷூட்டிங் எடுக்க முடியவில்லை. எதுக்குடா என் நம்பரில் எல்லோரும் கூப்பிடுறீங்க? என்ற டென்ஷனில் நான் ஒருவர் இடம் கத்தி விட்டேன். அப்போது அவர், தினத்தந்தி விளம்பரத்தில் உங்கள் நம்பர் போட்டு இருக்கு சார் என்று சொன்னார். உடனே நான் தினத்தந்தி வாங்கி பார்த்தேன். அதில் சண்டக்கோழி திரைப்பட விளம்பரத்தில் நான் லிங்குசாமிக்கு அனுப்பிய செய்தியை பதிவிட்டு கீழே என் அலைபேசி நம்பரை போட்டு இருந்தார். கடுப்பாகி நான் லிங்குசாமிக்கு போன் செய்து, ஏன்டா இப்படி போட்டீங்க? என்று கேட்டேன்.
போன் நம்பர் குறித்த சர்ச்சை:
படத்தின் பாராட்டுகளை விளம்பரப்படுத்த ஒரு புதிய யுத்தியாக விளம்பர மூலம் செய்தோம் என்று சொல்லியிருந்தார். நான், மனதிற்குள்ளே வெங்காய உத்தி என்று திட்டிக்கொண்டேன். அது மட்டுமில்லாமல் அவர் படம் வெற்றி பெற்றதில் சந்தோஷமாக இருந்ததால் தேவையில்லாமல் பேசி அவர் மனசை கஷ்டப்பட வேண்டாம் என்று நான் வைத்துவிட்டேன். அதற்குப் பின்னும் தொடர்ந்து ஒரு மாதம் வரையுமே எனக்கு போன் வந்தது. நான் நம்பரை மாற்றிய பிறகு தான் அந்த பிரச்சினையில் இருந்து தப்பித்தேன். ஒருவேளை நானும் லிங்குவிடம் இழப்பீடு கேட்கலாம் போலயேடா, நண்பா! குடும்பத்தோடு கேண்டில் லைட் டின்னர் தான் என்று கூறியிருக்கிறார்.