யார் இந்த அமுதா..? கலைஞர் இறுதிச்சடங்கில் பரபரப்பாய் இருந்த முகம்..! அப்துல் கலாம், முதல் ஜெயலலிதா வரை.!

0
3632
Amutha-IAS
- Advertisement -

தி.மு.க தலைவர் கருணாநிதியின் நல்லடக்க நிகழ்ச்சியில் எந்தவித சர்ச்சைக்கும் இடம் கொடுக்காமல் சிறப்பாகப் பணியாற்றினார், அமுதா ஐ.ஏ.எஸ். தேசமே கவனித்த ஒரு நிகழ்ச்சியில், குடும்பத்தினரின் சென்ட்டிமென்ட் காயப்படாமலும் சிக்கல் இல்லாமலும் கையாண்டார். பரபர பணிச்சூழல் மனநிலைக்கிடையே, சமாதிக்குள் அவரும் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளிப்போட்டது நெகிழவைக்கும் தருணமாக இருந்தது.

-விளம்பரம்-

Amutha IAS officer

- Advertisement -

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி மரணமடைந்த தகவல் வந்ததும், மாநகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது தமிழக அரசு. மறுநாள் அவரது உடலை அடக்கம் செய்யும் வரை, என்னென்ன பணிகளைச் செய்ய வேண்டும் என்பதுகுறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதில், சமாதிக்கான பணிகள், வி.ஐ.பி-க்களின் வருகை ஆகியவற்றைக் கவனிக்கும் பொறுப்பு, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அமுதா ஐ.ஏ.எஸ்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 7-ம் தேதி இரவிலிருந்தே சமாதி தொடர்பான சட்டப் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்ததால், அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நிலவியது. நீதிமன்ற உத்தரவு வந்தாலும், அடக்கம் தொடர்பான பணிகளை நடத்தி முடிக்க குறைந்த அளவே நேரம் இருந்ததுதான் காரணம். அதையெல்லாம் தாண்டி, எந்தவித குழப்பத்துக்கும் இடம் அளிக்காமல் அதிகாரிகள் செயல்பட்டனர். அதில், அமுதா ஐ.ஏ.எஸ்ஸின் பணிகள், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அமுதாவிடம் பேசினோம்.

-விளம்பரம்-

கருணாநிதி அடக்கம் தொடர்பாக, உங்களுக்கு அரசிடமிருந்து எப்போது உத்தரவு வந்தது?

“காலையிலேயே அரசிடமிருந்து எங்களுக்குத் தகவல் வந்துவிட்டது. அதில், யார் யார் என்னென்ன பணிகளைச் செய்ய வேண்டும் எனப் பட்டியல் போடப்பட்டிருந்தது. எனக்குக் கொடுக்கப்பட்ட பணியானது, சமாதிப் பணிகள் நடக்கும் இடத்தில் அரசுத்துறை, வி.ஐ.பி-க்கள், பொதுமக்கள் ஆகியோரை ஒருங்கிணைப்பது. ராணுவ அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து வேலை செய்தோம். சமாதிக்குத் தேவையான பொருள்களை வெளியிலிருந்து கொண்டுவந்தோம். சமாதிக்குத் தேவையான பொருள்களைக் கொண்டு வருவதில், தி.மு.க நிர்வாகிகளும் எங்களுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தனர்!”

Amutha

நீதிமன்றத் தீர்ப்பு, வி.ஐ.பி-க்களின் வருகை என நேற்றைய தினத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

“நேரம்தான் மிகப் பெரிய சவாலாக இருந்தது. அனைத்துப் பணிகளையும் ஐந்து மணிக்குள் முடித்தாக வேண்டிய நெருக்கடி இருந்தது.”

“கடைசியாகக் கருணாநிதியை அடக்கம் செய்த குழிக்குள் நீங்களும் ஒரு கைப்பிடி மண் அள்ளிப் போட்டீர்களே..!’’

“பெரிய தலைவர்களின் இறுதிச் சடங்குகளில் நான் பங்கேற்பது இது மூன்றாவது முறை. அப்துல் கலாம் இறுதி நிகழ்வில் பங்கெடுத்திருக்கிறேன். ஜெயலலிதா மேடம் இறுதி நிகழ்விலும் பங்கெடுத்திருக்கிறேன். மூன்று இடத்திலும் இதே காரியத்தைச் செய்தேன். இதற்குக் காரணம், நான் இந்தச் சமூகத்தின் அங்கம். இது என்னுடைய உணர்வு. நான் தமிழ்நாட்டில் பிறந்தவள். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் உள்ள உணர்வு எனக்கும் இருக்கிறது. நான் இருவரிடமும் (கருணாநிதி, ஜெயலலிதா) வேலை பார்த்திருக்கிறேன். அவர்கள் இருவருமே என்னுடைய பணியைப் பாராட்டியிருக்கிறார்கள். கருணாநிதி ஒரு மிகப் பெரிய தலைவர். தமிழறிஞர். நான் ஒரு கத்துக்குட்டி. அவருடைய கவிதைகள், சினிமா வசனங்களைக் கேட்டுத்தான் நாங்கள் வளர்ந்தோம். அவருக்குத் தமிழர்கள் எப்படி ரசிகர்களாக இருக்கிறார்களோ, அதேபோல் ஒரு ரசிகையாக அவரைப் பார்க்கிறேன். அதனால் இயல்பாக எனக்குத் தோன்றியதைச் செய்தேன்!’’

Advertisement