புற்று நோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக அவதிப்பட்டு வந்த அங்காடி தெரு சிந்து இன்று காலமாகி இருக்கிறார். வசந்த பாலன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் அங்காடித்தெரு. இந்த படத்தில் மகேஷ், அஞ்சலி, இயக்குனர் வெங்கடேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்த படம் பல்வேறு விருதுகளை கூட குவித்து இருந்தது. இந்தப் படத்தில் விலைமாதுவாக இருந்து அதன்பின்னர் நடைபாதை வியாபாரியான குள்ள மனிதரை திருமணம் செய்து கொண்டு சின்னம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சிந்து.
இவர் நாடோடிகள், தெனாவட்டு, நான் மகான் அல்ல, சபரி, கருப்பசாமி குத்தகைதாரர், போக்கிரி போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.மேலும், இவர் படங்களில் மட்டும் இல்லாமல் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ அங்காடித்தெரு திரைப்படம் தான். இப்படி ஒரு நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நடிகை சிந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தும் குணம் அடையாமல் இருந்தார். இந்தப் புற்றுநோயால் இவர் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தார். மேலும், சிகிச்சைக்கு உரிய பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த சிந்து மக்களிடம் உதவி கேட்டார். இதனை தொடர்ந்து பலரும் இவருக்கு பணத்தை அனுப்பினர். தனக்கு உதவி செய்த மக்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார் சிந்து. ஆனாலும், இவருக்கு கேன்சர் முழுமையாக குணமாகவில்லை.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய சிந்து ‘எனக்கு 2020 ஆம் ஆண்டு கேன்சர் இருப்பது தெரியவந்தது. இதை மார்பகங்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. அப்போதிலிருந்து நான் ஆங்கில மருந்து, நாட்டு மருத்துவம் என எத்தனையோ வைத்தியம் செய்து கொண்டு வருகிறேன். ஆனாலும், என்னுடைய நோய்க்கு தீர்வு கிடைக்கவில்லை.தஞ்சாவூரில் ஒரு கிராமத்தில் 35 நாட்கள் தங்கி இருந்து நாட்டு மருத்துவ வைத்தியம் எடுத்துக் கொண்டேன்.
அதனால் எனக்கு மார்பகத்தில் இருந்த புண்கள் ஆரிவிட்டது. இதனால் நான் நன்றாக தான் இருந்தேன். ஆனால், என்னுடைய மருமகன் திடீரென மாரடைப்பால் இறந்த காரணத்தினால் என்னால் அந்த சிகிச்சையை தொடர முடியவில்லை. தினம் தினம் இந்த புற்றுநோயால் நான் கஷ்டப்படுகிறேன். இதனால் நான் தூங்கும்போது தலையணையால் அழுத்தி என்னை கொன்றுவிடு என்று என் தம்பியிடம் கூறினேன்.எனக்கு எந்த மருந்தும் கேட்கவில்லை. எனக்கு முதன் முதலில் சிகிச்சை அளித்த மருத்துவரிடம் போய் எனக்கு விஷ ஊசி போட்டு என்னை கொன்று விடுங்கள் என்று கூட கேட்டேன்.
உடலில் புற்றுநோயை கண்டறியும் மெஷின் ஒன்று. உலகத்திலேயே அது நான்கு இடங்களில் தான் இருக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், ஹைதராபாத், பெங்களூர் என்று சொன்னார். அங்க அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதெல்லாம் ரொம்ப கஷ்டமாம்.பண வசதி இருப்பவர்களுக்கு மட்டும்தான் இலவசமாக அந்த சிகிச்சை செய்து கொள்ளலாம். இல்லாவிட்டால் ஒரு ஒரு நிமிடத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் ஆகுமாம்.
அதற்காக சிகிச்சை செலவு, நான் தங்குவதற்கு சாப்பிடுவதற்கு என எல்லாவற்றிற்கும் பணம் தேவை. ஆகவே நான் அந்த சிகிச்சை எடுத்துக்கொள்ள விரைவில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க இருக்கிறேன் என்று கூறி இருந்தார் சிந்து. மேலும், சிந்துவின் சிகிசிகைக்கு ஒரு சில நடிகர்கள் மட்டுமே உதவி இருந்தார்கள். ஆனால், அந்த பணமெல்லாம் முதற்கட்ட சிகிச்சைக்கே சென்றுவிட்டது. தொடர்ந்து சிகிச்சை எடுக்க சிந்துவிடம் பணம் இல்லாத காரணத்தாலோ அவரது உயிர் இன்று பிரிந்தது.