ஓட்டு வீட்டில் இருந்து நீட் வரை கனவுகளை சுமந்து மரணித்த அனிதா!

0
1553
Anitha
- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக பெற்றோர்களுக்கு எரிச்சலை தந்த வார்த்தை நீட். அனிதாவின் மரணத்திற்குப்பின் அதுவே திகிலான வார்த்தையாக மாறியிருக்கிறது இப்போது.

-விளம்பரம்-

 

- Advertisement -

anitha

அரியலுார் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வாழும் மூட்டைத்துாக்கும் தொழிலாளியின் மகள் அனிதா. படிப்பில் படுசுட்டி. குழுமூர் எனும் அந்த பேருந்தை பார்க்காத கிராமத்தில் அனிதாவின் வீடு ஒரு ஓட்டு வீடு. அங்குள்ள கிறிஸ்தவ மிஷனரிப் பள்ளியில்தான் உயர்நிலைக் கல்வி பயின்றார். மகள் மருத்துவராவேன் என அடிக்கடி சொல்லிவந்ததை ஆரம்பத்தில் உளறளாகப் பார்த்தார் அந்த ஏழைத்தந்தை. ஆனால் 10 ம் வகுப்பில் 478 மதிப்பெண் பெற்றதோடு இரு பாடங்களில் நுாற்றுக்கு நுாறு எடுத்தது, அனிதாவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது அந்த தந்தைக்கு. மகள் மருத்துவராவார் என அவர் பெரிதும் நம்பினார்.

-விளம்பரம்-

மழைநாளில் ஒழுகும் வெயில் நாட்களில் சூரியனின் வெளிச்சம் விழும் கழிவறை கூட இல்லாத அந்த ஓட்டு வீட்டிலிருந்துதான் தன் மருத்துவக்கனவை மனதில் வளர்த்தெடுத்தார் அனிதா. மற்ற மாணவிகள் போல் அல்லாமல் எந்நேரமும் புத்தகமும் கையுமாகவே திரிந்தார். அதன்பலனாக கடந்த வருடம் நடந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார் அவர். இயற்பியலில் 200, வேதியியலில் 199, உயிரியலில் 194, கணிதத்தில் 200, தமிழில் 195, ஆங்கிலத்தில் 188 மதிப்பெண் என, ப்ளஸ் டூ-வில் அவர் பெற்ற மதிப்பெண்ணால் ஊரே பெருமை கொணட்து. தங்கள் ஊர்ப்பெண் மருத்துவராக மருத்துவமனை செல்வார் என நம்பியிருந்தது குழுமூர் கிராமம். ஆனால் இன்று அவரது உடல்தான் துரதிர்ஸ்டவசமாக மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சென்றிருக்கிறது.

அனிதாவின் மருத்துவக்கனவை சிதைத்து அவரை கொன்று பழிதீர்த்தது நீட் நுழைவுத்தேர்வு. வழக்கம்போல் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடந்திருந்தால், அனிதா பெற்ற மதிப்பெண்ணுக்கு தலைநகரிலேயே மருத்துவம் படிக்க இடம் கிடைத்திருக்கும். அவரின் கட் ஆஃப் மதிப்பெண் 196.5. ஆனால் நீட் தேர்வு எழுதினார். அதில் அவர் பெற்ற மதிப்பெண் வெறும் 86. இதனால் அவரது மருத்துவக்கனவு நனவாகிற வாய்ப்பை இழந்தார். மருத்துவம் கிடைக்காததால் கலந்தாய்வில் கடந்த வாரம் கால்நடை மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் மருத்துவம் என்பதையே குறிக்கோளாக கொண்டிருந்த அனிதா இதனால் மனம் உடைந்து காணப்பட்டதாக சொல்கிறார்கள்.

 

Anitha

அம்மா இறந்து பல வருடங்களாகிவிட்டன. அப்பா கூலித்தொழிலாளி. இந்த குடும்ப சூழலிலும் வறுமையின் இடையிலும் துவளாமல் தன் மருத்துவக்கனவை நனவாக்கப் போராடிப் படித்த அந்த அனிதா மருத்துவம் கிடைக்காததால் வேதனையும் விரக்தியுமாக இன்று தற்கொலை முடிவெடுத்திருக்கிறார்.

மருத்துவக்கல்வியில் இந்தியா முழுமைக்கும் பொதுவான ஒரு நுழைவுத்தேர்வாக நீட் மத்திய அரசினால் கொண்டுவரப்பட்டது. சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய பாடத்திட்டம் இன்னும் முழுமையாக இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தப்படாத நிலையில் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தில் படித்துவரும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத்தேர்வை அமல்படுத்தினால் அவர்களின் மருத்துவக் கனவு மரணித்துப்போகும் என சமூக ஆர்வலர்கள் அபாய சங்கு ஊதினார்கள் அப்போதே. பல மாநிலங்களிலும் இதற்கு எதிர்ப்புக்குரல் எழுந்தது. இட ஒதுக்கீட்டை மறுக்கும்படியான மறைமுக நடவடிக்கை என்றும் இதுபற்றி சமூக ஆர்வலர்கள் விமர்சித்தனர். பாராளுமன்றத்தில் இதுதொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது மத்திய அமைச்சர் ஜே.பி நட்டா நீட் தேர்வுக்கு தேவைப்படும் மாநிலங்கள் விலக்கு பெற்றுக்கொள்ளலாம் என அப்போதே தெரிவித்தார். ஆனால் மத்திய அரசு விடாப்பிடியாக நீட் தேர்வை நடைமுறைப்படுத்தியது.

தமிழகத்தில் ஜெயலலிதா நீட் தேர்வுக்கு கடந்த காலத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அடுத்துவந்த எடப்பாடி அரசு அந்த எதிர்ப்பை மழுங்கடித்தது. அதிமுக பிளவிற்கு இடையில் அதிகமான அழுத்தத்தை மத்திய அரசிடம் முன்வைக்கவில்லை. தமிழகத்தில் மற்ற அரசியல் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தால் தங்களால் முடிந்ததை செய்வோம் என உறுதியளித்தது மத்திய அரசு. அதன்படி அவசர சட்டத்தை இயற்றி ஜனாதிபதி ஒப்புதல் பெற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது கைவிரித்தது மத்திய அரசு. மாநில அரசுக்கு கொடுத்த உறுதிமொழியை மறந்து ஒரு மாநிலத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பது சரியாக இருக்காது என சொல்லி தமிழகத்தில் நீட் தேர்வை புகுத்திவெற்றிகண்டது மத்திய அரசு. அந்த வெற்றிக்கு விருந்தாகத்தான் இன்று அனிதாவின் உயிரைக்குடித்து கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது மத்திய அரசு.

அனிதாவின் மரணம் குறித்து நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவரும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திர நாத்திடம் பேசினோம். “அனிதாவின் மரணத்திற்கு காரணம் மத்திய அரசு. இதில் மாநில அரசுக்கும் பெரும்பங்கிருக்கிறது. அவசர சட்டம் கொண்டுவந்தால் ஆவண செய்வோம் என மாநில அரசிடம் உறுதிமொழி அளித்தது மத்திய அரசு. அதன்படி சட்டம் இயற்றப்பட்டு அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டும் அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அதன் எதிரொலியாக நீட் தொடர்பாக தமிழகத்திற்கு சாதகமான எந்த முடிவும் எடுக்கப்படாததால் இன்று அனிதாவை இழந்திருக்கிறோம். தமிழகத்தின் நீட் தேர்வின் பாதிப்பின் ஓர் அடையாளம்தான் அனிதா. இன்னும் பல அனிதாக்கள் தங்கள் பாதிப்பை வெளிப்படுத்த முடியாத மன அழுத்தத்தில் உள்ளார்கள். இதற்கு முழுக்க முழுக்க மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்கவேண்டும். கொடுத்த உறுதிமொழியின்படி இந்த ஆண்டு அவசரசட்டத்தின்படி விலக்கு கிடைத்திருந்தால் ஒரு உயிர் பறிபோயிருக்காது.

 

Anitha

நீட் விவகாரத்தில் தமிழக அரசு விலக்கு பெறும் முயற்சிகளின்போது மாநில அரசு, மத்திய அரசை வற்புறுத்துவதுபோன்று தோற்றம் தெரிந்ததே தவிர, முறையான அழுத்தத்தை மாநில அரசு தரவில்லை. மாநிலத்தில் உள்ள அரசியல் சூழலும் அதற்கு ஒரு காரணம். அனிதாவின் மரணத்திற்குப் பிறகாவது மாநில அரசு இந்த விஷயத்தில் தீவிரத்தை உணரவேண்டும்.

இனிமேலாவது தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் மருத்துவ படிப்பில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட சட்டப்படியான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவேண்டும். நீட் தேர்வில் விலக்குப்பெற ஆந்திர மாநிலமே நமக்கு முன்மாதிரி. அரசியலமைப்புச் சட்டத்திலேயே 32 வது திருத்தமான amendment of 371 D in 1974 அரசியலமைப்புச்சட்டத்திருத்தத்தின்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள மருத்துவ இடங்கள் அந்த மாநிலத்திற்கே உரியது என உரிமையை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அதேபோல் தமிழக அரசும் பெற முயற்சிக்கவேண்டும்.

மருத்துவப்படிப்பு கிடைக்காதபோது அதற்கு அடுத்த படிப்புகள் மாணவர்களுக்கு கிடைக்கும். அதை தேர்வு செய்து படிக்கலாம். மருத்துவம் கிடைக்கவில்லை என்பதற்காக மாணவர்கள் தங்கள் விலைமதிப்பற்ற உயிரை இழக்கக்கூடாது. பிள்ளைகளுக்கு இன்னொரு படிப்பு கிடைக்கும். பெற்றோர்களுக்கு இன்னொரு பிள்ளை கிடைக்கமாட்டார்கள்.” என்றார் சோகமான குரலில்.

Advertisement