குழிக்குள்ளே இருட்டுல இறங்கறப்போ ரொம்ப பயமா இருந்துச்சு – அறம் மகாலட்சுமி !

0
1678
mahalakshmi
- Advertisement -

‘அறம்’ படத்தில் தன்னுடைய நடிப்பாலும், யதார்த்தமான பேச்சாலும் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர், பேபி மகாலட்சுமி. படத்தில் ‘தன்ஷிகா’ கதாபாத்திரத்தின்மூலம் நம் கண்களைப் பனிக்கச் செய்தவர். அவரது ‘அறம்’ அனுபவத்தை மழலைக் குரலில் பகிர்ந்தார்.
aram சென்னை, திருவொற்றியூர் பக்கத்துலதான் எங்க வீடு இருக்கு. என் அப்பா கூலி வேலை செய்யறார். அம்மா எங்களைப் பார்த்துக்கறாங்க. எனக்கு அண்ணாவும் தங்கச்சியும் இருக்காங்க. என் அண்ணா நாலாங் கிளாஸ் படிக்கிறான். நான் மூணாவது படிக்கிறேன். பாப்பா இன்னும் ஸ்கூல் போகலே. எங்க அம்மாவும் அப்பாவும்தான் என்னை நடிக்கக் கூட்டிட்டுப் போனாங்க. அவங்க சொல்ற மாதிரி நடிச்சேன். அவங்க எல்லோரும் என்கிட்டே ஜாலியா பேசினாங்க. அதனால், பயமில்லாமல் நடிச்சேன்” என்றவரை மடியில் தூக்கிவைத்துக்கொண்டு தாய் பாக்கியலட்சுமி தொடர்ந்தார்.

-விளம்பரம்-

என் மாமாவின் நண்பர் சினிமாவில் இருக்கார். அவருதான் பாப்பாவை நடிக்கக் கூட்டிட்டுப் போனார். ஆரம்பத்துல மகா ரொம்ப பயந்துச்சு. டைரக்டர் கோபி சார் பொறுமையா தட்டிக்கொடுத்து, டயலாக் சொல்லிக்கொடுத்தார். அப்புறம் நல்லா நடிக்க ஆரம்பிச்சுட்டா. நாங்க ரொம்ப சாதாரணக் குடும்பம். டிவியில்தான் நயன்தாராவைப் பார்த்திருக்கோம். நேரில் பார்ப்போம்னே சாமி சத்தியமா நினைச்சதில்லை. அவங்களாம் எவ்வளவு பெரிய நடிகை. அவங்க கூட சரிசமமா நிற்கவே முடியாதுனு நினைச்சோம். ஆனா, அவர்கூடவே என் பொண்ணு நடிச்சது மறக்கவே முடியாத அனுபவம்” என்றார் நெகிழ்ச்சியுடன்.
mahalakshmiமகாலட்சுமியின் அப்பா மாணிக்கம், “என் பொண்ணு இவ்வளவு அழகா பேசுவான்னோ, நல்லா நடிப்பான்னோ எங்களுக்கே இப்போதான் தெரியுது. அவளுடைய திறமையைச் சரியா வெளியே கொண்டுவந்த டைரக்டருக்கு நன்றி சொல்லணும். நிறைய பேர் ‘உங்க பொண்ண எங்க படத்திலும் நடிக்கக் கூப்பிடறோம்’னு சொல்லியிருக்காங்க. தியேட்டர்ல குடும்பத்தோடு போய்ப் படத்தைப் பார்த்தோம். எங்க மகளை ஸ்கிரீன்ல பார்த்ததும் சந்தோஷத்துல அழுதுட்டோம். அந்தக் குழிக்குள்ளே விழும் சீனில் மகாலட்சுமி ரொம்பவே பயந்தா. அப்போ நயன்தாரா மேடம்தான், ‘என்னை மாதிரி தைரியமா நடிக்கணும். எதுக்கும் பயப்படக் கூடாது’னு சொன்னாங்க. அவங்க சொன்ன மாதிரி நடிச்சா. அந்த தன்ஷிகா கேரக்டருக்கு மகாலட்சுமியே டப்பிங் பேசுனா. எங்களுக்கு ரொம்பப் பெருமையா இருக்கு” என்று நிறுத்த, மீண்டும் மகாலட்சுமி கொஞ்சலாகப் பேசினார்.

- Advertisement -

எனக்கு தனுஷ் மாமாவையும் நயன்தாரா அக்காவையும் ரொம்பப் பிடிக்கும். எங்க வூட்டுக்கு நிறைய பேர் கார்ல வந்து என்கூட செல்ஃபி எடுத்துக்கறாங்க. குழிக்குள்ளே இருட்டுல இறங்கறப்போ ரொம்ப பயமா இருந்துச்சு. என் ஆயாதான் கூடவே இருந்துச்சு. நயன்தாரா அக்கா நான் நடிச்சு முடிச்சதும், ‘சூப்பரா நடிச்ச செல்லம்’னு சொன்னாங்க.
mahalakshmi
என் வூட்டாண்ட இருக்கறவங்க எல்லாரும் என்னைத் தோள்மேல வெச்சு விளையாடுறாங்க. என் ஃப்ரெண்ட்ஸ்லாம் படத்துல சூப்பரா இருக்கேனு சொன்னாங்க இது மாதிரி நிறைய படத்துல நடிக்கணும். அப்போதான் எல்லாரும் என்கூட செல்ஃபி எடுத்துட்டே இருப்பாங்க. என் ஸ்கூல்லேயும் நல்லா நடிச்சிருக்கே, நல்லாப் படிக்கவும் செய்யணும்’னு எங்க மிஸ் பாராட்டினாங்க. நான் நல்லாவும் நடிப்பேன்; நல்லாவும் படிப்பேன். படிச்சு கலெக்டர் ஆவேன். சரி, இப்போ நான் விளையாடப் போறேன்” என்று சொல்லிவிட்டு, அம்மா மடியிலிருந்து குதித்து, துள்ளலுடன் வெளியே சென்றார் மகாலட்சுமி.

Advertisement